Published : 14 Oct 2023 06:14 AM
Last Updated : 14 Oct 2023 06:14 AM
நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்கும் குமரி சுவாமி விக்ரகங்கள் கேரள எல்லையான களியக்காவிளையைத் தாண்டி நேற்று சென்றபோது கேரள அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடை பெறும் நவராத்திரி விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமார கோவில் முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியுடன் சுவாமி விக்ரகங்கள் ஊர்வலம் தொடங்கியது.
சரஸ்வதி தேவி சிலை யானை மீதும், குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலைகள் பல்லக்குகளிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். நேற்று முன்தினம் இரவில் விக்ரகங்கள் குழித்துறை மகாதேவர் கோயிலில் எழுந்தருளின.
அங்கிருந்து நேற்று காலை அணிவகுப்பு மரியாதையுடன் சுவாமி விக்ரகங்கள் புறப்பட்டன. அப்போது பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நேற்று மதியம் 12 மணியளவில் குமரி-கேரள எல்லையான களியக்காவிளையை அடைந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் கையில் காவிக் கொடியை ஏந்தியும், பூக்களைத் தூவியும் வரவேற்றனர்.
அங்கு சுவாமி ஊர்வலத்தை வழிநடத்தி சென்ற தமிழக அறநிலையத்துறையினர், மன்னர் மார்த்தாண்டவர்மனின் உடைவாளை கேரள அறநிலை யத்துறை அதிகாரிகளுக்கு மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேண்ட் வாத்தியங்கள் முழங்க கேரள போலீஸார் சுவாமி விக்ரகங்களுக்கு மரியாதை செலுத்தினர். சுவாமி விக்ரகங்கள் நேற்று மாலை நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலை அடைந்தன.
அங்கிருந்து இன்று காலை புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ற டைகின்றன. கிழக்குகோட்டை கொலுமண்டபத்தில் சரஸ்வதி தேவியையும், ஆர்யசாலையில் முருகப்பெருமானையும், வலிய சாலையில் முன்னுதித்த நங்கை அம்மனையும் நவராத்திரி பூஜைக்கு வைத்து வழிபாடு செய்கின்றனர். 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்வார்கள். நவராத்திரி பூஜைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT