Published : 02 Jan 2018 11:36 AM
Last Updated : 02 Jan 2018 11:36 AM
முப்பெருந்தெய்வங்களாக, சிவா, விஷ்ணு, பிரம்மா திகழ்கின்றனர். தேவியரிலும் முப்பெருந்தேவியர் உண்டு. தெய்வ சக்திக்கு நிகராக எல்லோராலும் போற்றப்படுவது இசை. அதனால்தான் இசைக்கு வசமாகாதார் எவருமில்லை என்பார்கள். அத்தகைய இசையால், இறைவனையே கட்டுண்டு வைக்கலாம் என்பதை எத்தனையோ மகான்கள், இசை ஜாம்பவான்கள், மேதைகள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை வாய்ந்த இசையிலும் மும்மூர்த்திகள் உண்டு. அந்த மூவரில் ஒருவர் தியாகய்யர். தியாகராஜ சுவாமிகள் என்றும் அழைப்பார்கள்.
18ம் நூற்றாண்டில் வாழ்ந்த இசை மேதை. வெறும் மேதை என்றால் அது தவறு. மிகப் பெரிய மகான். சோழ தேசத்தில், திருவாரூர் எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில், ராம பக்தரான ராமபிரம்மம் சீதாம்மா தம்பதிக்குப் பிறந்தார் தியாகய்யர்!
பிறகு, தஞ்சாவூர் அருகில் உள்ள திருவையாறு தலத்துக்கு வந்து குடியேறினார்கள். இங்கே, சிறுவனாக இருந்த தியாகராஜனுக்கு சம்ஸ்கிருத மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டது. எதையும் உடனே கிரகித்துக் கொள்ளும் திறன் பெற்ற சிறுவன் என்று பாராட்டினைப் பெற்றான் தியாகராஜன்!
அப்பாவைப் போலவே ஸ்ரீராமரின் மீது மாறா பக்தி கொண்டிருந்தான். ஒரு பக்கம் வேதம் கற்க, இன்னொரு பக்கம் சோந்தி வெங்கடராமையர் என்பவரிடம் சங்கீதம் பயின்றான். குருவின் அருளாலும் இறையின் பேரருளாலும் அந்தச் சிறுவன் தியாகராஜனுக்கு இசை வசமானது. அதனால்தான் கடவுளின் அனுக்ரஹத்தாலும் ஸ்ரீராம பக்தியாலும் இசையுலகின் மும்மூர்த்திகளில் ஒருவராக, தியாகய்யர், தியாகப்ரம்மம் என்றெல்லாம் இன்றைக்கும் போற்றப்படுகிறார்!
இசை மகான் தியாகப்பிரம்மத்துக்கு ஆராதனை நாள் இன்று. தஞ்சாவூர் அருகில் உள்ள திருவையாறில் உள்ள அவரின் அதிஷ்டானத்தில், இன்று மாலையில் ஏராளமான இசைக்கலைஞர்கள், இசைப் பிரபலங்கள் பஞ்சரத்னகீர்த்தனை பாடி அஞ்சலி செலுத்தி அந்த மகானை வணங்குவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT