Published : 12 Oct 2023 04:14 AM
Last Updated : 12 Oct 2023 04:14 AM

கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: யாக சாலை கட்டுமானம், சாரம் அமைக்கும் பணி மும்முரம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ராஜகோபுரத்தில் சாரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. படங்கள்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, யாகசாலை, கோபுரங் களுக்கு சாரம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

சேலத்தின் காவல் தெய்வம் என போற்றப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் மேற்கொள்ளப் பட்டு வந்த திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் 27-ம் தேதி கும்பாபி ஷேகம் செய்யப்பட உள்ளது. இதை யொட்டி, கடந்த 2-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. புதிய கொடிமரம் வரும் 18-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான யாகசாலைகள் அமைக்கும் வகையில், கோயில் வளாகத்தில் நிலத்தை சமன்படுத்தி தயார்படுத்தப்பட்டது. தற்போது, அதில் யாக சாலைகள் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல, கும்பாபி ஷேகத்தின்போது ராஜகோபுரம், சந்நிதிகளின் கோபுரம் ஆகியவற்றின் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றுவது உள்ளிட்ட சடங்குகளுக்காக கோபுரங்களின் உச்சிப்பகுதிக்கு சென்றடையும் வகையில் சாரங்கள் கட்டும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

யாகசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்

இதனிடையே, வரும் 18-ம் தேதி மகா கணபதி ஹோமம், முளைப்பாரி இடுதல், 19-ம் தேதி கணபதி வழிபாடு, கிராம சாந்தி, அஷ்ட பலி பூஜை ஆகியவை நடைபெறவுள்ளன. 25-ம் தேதி முதல் கால யாக பூஜை தொடங்குகிறது. மறுநாள் 26-ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடத்தப்பட உள்ளது.

கும்பாபிஷேகம் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்று அதிகாலை நான்காம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x