Published : 11 Oct 2023 03:35 PM
Last Updated : 11 Oct 2023 03:35 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கைகளால் பரிசோதிக்கப்படுவது தவிர்க்கப்படுமா?

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் பாதுகாப்பு கருதி உள்ளே நுழையும் அனைத்து வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனை நடத்தி பக்தர்களை உள்ளே அனுமதிக்கின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்றால் பறிமுதல் செய்கின்றனர். குறிப்பாக 2018-ம் ஆண்டு மொபைல் போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு அனைத்து வாயில்களிலும் கடுமையான சோதனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வெடிகுண்டு தடுப்பு காவல் துறையினர், பக்தர்களை கைகளால் தொட்டு சோதனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' உங்கள் குரல் சேவை மூலம் தொடர்புகொண்ட மதுரையைச் சேர்ந்த தீபா கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பெண்கள் உட்பட அனைவரையும் அங்கு பணியிலுள்ள காவலர்கள், கைகளால் தொட்டு சோதனையிடுகின்றனர்.

பெண் காவலர்கள்தான் சோதனை செய்கின்றனர் என்றாலும், இந்த முறை நாகரிகமானது அல்ல. குருவாயூர் போன்ற பிற மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நவீன இயந்திரங்கள் மற்றும் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி மட்டுமே சோதிக்கின்றனர். பணியிலுள்ள காவல்துறையினர் கைகளால் பக்தர்களை தொடுவதில்லை.

எனவே பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்லும் மீனாட்சி அம்மன் கோயிலிலும் கைகளால் சோதனை செய்வதை தவிர்க்க வேண்டும். கோயிலுக்கு வரும் விஐபி-க்களை இதேபோன்று சோதனை செய்வதை அவர்கள் அனுமதிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கோயில் பாதுகாப்பு பிரிவு காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் மொபைல் போன், தீப்பெட்டி, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டுபிடிக்க முடியாது. கைகளால் பரிசோதனை செய்தால் மட்டுமே இவற்றைத் தடுக்க முடியும். பாதுகாப்பு முக்கியத்துவம் கருதியே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x