Published : 21 Dec 2017 10:14 AM
Last Updated : 21 Dec 2017 10:14 AM
சுவாமி சரணம் - 33
மணி மந்திரம் ஔஷதம் என்றொரு சொல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அதாவது, ஔஷதம் என்றால் மருந்து. ஏதேனும் ஒரு வியாதியோ உடல்நலக் குறைவோ வந்துவிட்டால், மருந்து சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதேபோல், மந்திரத்தின் மூலமாகவே, பல வியாதிகளைக் குணப்படுத்திவிட முடியும். குணப்படுத்தியிருக்கிறார்கள். குணமடைந்திருக்கிறார்கள்.
நிறைய உடல் கோளாறுகளுக்கு கழுத்தில் நவரத்தின மாலை அணிந்து கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும் என்பார்கள் ஆச்சார்யர்கள்.
அதாவது, மணி மந்திரம் ஔஷதம். மணியை அணிவதன் மூலமாகவும் மந்திரங்கள் ஜபிப்பதன் மூலமாகவும் மருந்து உட்கொள்வதன் மூலமாகவும் நோயை, இந்த உடலின் பிரச்சினைகளைக் குணப்படுத்திவிட முடியும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறது இந்த வாசகம்.
அப்படியொரு மணியாக, நவரத்தின மணிமாலையாக அணிந்து கொண்டு வந்ததால் மணிகண்டன் என்றே திருநாமம் கொண்டதாகச் சொல்கிறது புராணம். அந்த மணிகண்டன் எனும் திருநாமமே நமக்கெல்லாம் மந்திரச் சொல்லாகி, நம்மை வழிநடத்தி, நமக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமா?
ஔஷதம் என்றால் மருந்து. மணிகண்டன் என்கிற சாஸ்தா என்கிற ஐயப்பன் என்கிற அந்த சபரிகிரிவாசன், நமக்கெல்லாம் மாமருந்தாக இருக்கிறான். இன்றைக்கும் அருமருந்தாக, அருளும்பொருளும் தந்து கொண்டே இருக்கிறான். நம்மையும் இந்த உலகையும் சபரிமலையில் இருந்து கொண்டு, மணி மந்திர ஔஷதமாக இருந்து, அருளாட்சி செய்துகொண்டே இருக்கிறான்.
இது மகன் மணிகண்டனின் பெருங்கருணை. கடாட்ஷம். இந்த பூமி செய்த மகா புண்ணியம். சிவமைந்தனின் ஆட்சி பரிபாலனம் மகோன்னதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருத்தலம்.
அதனால்தான், லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கண்கண்ட தெய்வமாகவே திகழ்கிறான் ஐயப்ப சுவாமி. இஷ்ட தெய்வமாக லட்சோப லட்ச பக்தர்கள், ஐயப்பனை, மணிகண்டனை வரித்துக் கொண்டிருப்பதற்கு, அவனின் அருளாடல்களே காரணம். கருணையே காரணம். பிரத்யட்ச தெய்வமாக, சூட்சும ரூபமாக தவக்கோலத்தில் இருந்தபடி, தவமாய் தவமிருந்தும் கிடைக்காத வரமாக வந்து, நம்மையெல்லாம் சபரிபீடத்தில் இருந்துகொண்டு, பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
இது அப்பன் புத்தி. சிவபெருமானின் கருணைக்கு நிகரானவன். உலகையும் தேவர்களையும் காத்தருள, ஆலகால விஷத்தை கழுத்துக்குள் வைத்துக் காத்தருளிய கருணாமூர்த்தி அல்லவா அவன். நீலம் என்றால் விஷம். அந்த விஷத்தையே உண்டதால், கழுத்தில் வைத்துக் கொண்டதால் சிவனுக்கு, ஈசனுக்கு நீலகண்டன் என்றே திருநாமம் அமைந்தது.
அப்பனின் பெயர் நீலகண்டன். இங்கே... தர்ம சாஸ்தாவுக்கு மணிகண்டன் என்றொரு திருநாமம். இரண்டுபேருமே, நம் சுகங்களுக்காக, உலகாயத நன்மைக்காக, அருள்பாலிக்கும் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மகிஷி எனும் அரக்கியை சம்ஹரிக்க, ஓர் அவதாரம் தேவைப்பட்டது. சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் இணைந்து உருவாக்கிய அந்த அவதாரம்... பம்பா நதிக்கரையில் வந்து உதித்த போதே, இந்த பூமியானது சுபிட்சம் அடைந்துவிட்டது. பூக்களும் செடிகளும் வேர்களும் மரங்களும் வேரடி மண்ணும் என சகல உயிர்களும் புத்துயிர் பெற்றன. அந்த வனத்தில் இருந்த கனிகளில் இன்னும் தித்திப்பு கூடின. பூக்களில் இருந்து வரும் நறுமணம், இன்னும் இன்னுமாய் அதிகரித்தன.
மரங்களும் உயிர்களே. செடிகொடிகளுக்கும் உயிர் உண்டு. ஆனால் அவை பேசுவதில்லை. அதேசமயம் தான் உணர்ந்ததை, ஏதேனும் ஒருவிதத்தில் வெளிப்படுத்திவிடும்.
நம் வீட்டில், ஒரு செடியை வளர்த்துப் பாருங்கள். அந்த பூச்செடியுடன் சிறிதுநேரம் இரண்டொரு வார்த்தைகள் பேசிப்பாருங்கள். ‘நல்லாருக்கியா...’ என்று கேட்டுப் பாருங்கள். விசாரியுங்கள். அப்படி சொல்லிக் கொண்டே அதற்கு தண்ணீர் விடுங்கள். உரமிடுங்கள். உயிரூட்டுங்கள். பிறகு அவை உயிர்ப்புடன் உங்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும். சந்தோஷமாய் வளரும். உத்வேகத்துடன் மலரும். உற்சாகத்துடன் கனி தரும். குளிரக்குளிர நிழல் தரும்.
அங்கே... அந்த பந்தள தேசத்தில் அப்படித்தான்... பூமியே செழித்து மலர்ந்தன. வளர்ந்து அமைதியைக் கொடுத்தன.
அரண்மனையில், எப்போதும் இல்லாத மகிழ்ச்சியும் ஆனந்தமும் குடிகொண்டு விளையாடின. குழந்தை மணிகண்டன், எல்லோர் முகமும் பார்க்கத் தொடங்கினான். குப்புறப் படுக்க ஆரம்பித்தான். அப்படியே தவழத் தொடங்கினான். தவழ்ந்து தவழ்ந்து, அங்கிருந்த பொருட்களையெல்லாம் இழுக்க ஆரம்பித்தான். சுவர் பிடித்து, நிற்க ஆரம்பித்தான். நடந்தான். இரண்டொரு வார்த்தைகள் பேசத் தொடங்கினான்.
மகாராணி வேறு வேலை எதுவுமே பார்க்கவில்லை. எந்த வேலை செய்யவும் மனமே வரவில்லை. சதாசர்வ காலமும் மணிகண்டனுட«ன்யே பொழுதைக் கழித்தாள். மணிகண்டனுன் சேர்ந்து விளையாடினாள். மணிகண்டனின் நடவடிக்கைகளில் பூரித்துப் போனாள். மணிகண்டனே உலகமென மாறிப்போனது அவளுக்கு!
‘மணிகண்ட ராஜா... மணிகண்ட ராஜா...’ என்று சேடிப்பெண்கள் எல்லோரும் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். நந்தவனப் பக்கம் அழைத்துச் சென்று விளையாட்டுக் காட்டினார்கள்.
அரண்மனைக்கு வந்த விருந்தாளிகளும் குழந்தையின் அழகில் சொக்கிப் போனார்கள். அமைச்சர்களும் வீரர்களும் ‘மணிகண்ட ராஜா... மணிகண்ட ராஜா என்று கொஞ்சினார்கள். ராஜாவுக்கு உண்டான மரியாதையை இப்போதே வழங்கினார்கள்.
மகாராஜாவுக்கு இருப்பு கொள்ளவே இல்லை. அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தும் போது நொடிக்கொரு தடவை, குழந்தையின் நினைவிலேயே இருந்தான். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டே சபையில் அமர்ந்தான். நகர்வலம் வரும் போதும் மணிகண்டனை அழைத்துச் சென்றான். வழக்கமான கூட்டத்தை விட மிக அதிகமாகவே நகர்வலத்தில் கூட்டம் கூடியது. ‘குட்டி மகாராஜா...’ என்று மக்கள் எல்லோரும் குரல் கொடுத்தார்கள். கைகாட்டினார்கள்.
தங்கள் நிலத்தில் விளைந்த கனிகளையெல்லாம் கூடைகூடையாக மணிகண்டனுக்கு வழங்கி சந்தோஷப்பட்டார்கள். ‘மணிகண்ட ராஜா வாழ்க’ என்று கோஷமிட்டார்கள்.
ஆட்சி எங்கே இருக்கிறதோ... அங்கே அரசியல் இருக்கும். அதுமட்டுமா. அங்கே சூழ்ச்சியும் வரத் துவங்கிவிடும். அதுதான் அரசியல்.
மணிகண்டனின் வருகை பந்தள தேசத்துக்கே குதூகலம் கொடுத்திருந்தது. ஆனால் ராஜாவின் சபையில் இருந்த முதலமைச்சருக்கு, எந்த சந்தோஷத்தையும் தரவில்லை.
சந்ததி இல்லாத தேசத்தில்... ராஜாவுக்குப் பிறகு நாம் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பது முதலமைச்சரின் திட்டம். ஆனால் எங்கோ காட்டில் கிடந்தது என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து, இங்கே கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என ராஜா மீது கோபம் கொண்டான். ராணி மீது ஆத்திரமுற்றான். அந்த அரண்மனை ஊழியர்கள் மீது ரௌத்திரமானான். தேச மக்கள் மீது வெறுப்பில் இருந்தான்.
ஒருகட்டத்தில்... அந்தக் கோபமும் ஆத்திரமும் ரௌத்திரமும் வெறுப்பும் குழந்தை மணிகண்டன் மீது திரும்பின.
அங்கே அரசியல் சூழ்ச்சி ஆரம்பமாகின. ஆட்சியும் அதிகாரமும் பதவியும் கௌரவமும் இருக்கிற இடத்தில், அரசியல் செய்ய யாரேனும் கிளம்புவார்கள். பந்தள தேசத்தின் முதலமைச்சரும் சூழ்ச்சியில் இறங்கினான்.
சூழ்ச்சிகள் ஜெயித்ததாகச் சரித்திரமே இல்லை!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT