Published : 08 Dec 2017 03:57 PM
Last Updated : 08 Dec 2017 03:57 PM
* ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா என்கிறோம். நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற ஐயன் ஐயப்ப சுவாமியை சரண் அடைகிறோம் என்று பொருள்.
* சபரிமலை அய்யப்பன் கோயில் சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கம பூமி என ஏழுச் சிறப்புகளைக் கொண்ட புண்ணியத் தலம்.
* ஒரு மண்டல காலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது என்கிறார்கள் குருசாமிமார்கள். இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
* கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தியையே ஐயப்ப சுவாமி விரும்புகிறார்.
* சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பதுதான் மரபு.
* கடன் வாங்கியாவது சபரிமலைக்கு வரவேண்டும் என்று பக்தர்கள் செயல்படுவது தவறு. அதேநேரம் வருடந்தோறும் எவரேனும் ஒருவரின் சபரிமலைக்கான செலவை ஏற்றுக் கொள்ளலாம். அதுவே புண்ணியம்!
* சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் படும் போதெல்லாம் ஐயப்பன், உங்கள் மனதைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்.
ஐயப்ப அவதாரத்தின் போது படைகளுடன் ஆடியபடி காட்டுக்குள் சென்றார். அதை நினைவுபடுத்தவே ``சாமி திந்தகத்தோம்.... ஐயப்ப திந்தகத்தோம்...'' என்ற பேட்டைத் துள்ளல் வைபவம் டக்கிறது.
மகிஷியை வதம் செய்த மணிகண்டசுவாமி, அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாகப் புராணம் சொல்கிறது. இதை நினைவுபடுத்தும் வகையில் அழுதையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மெர்ரிலேண்ட் சுப்பிரமணியம் என்பவர் ``சுவாமி அய்யப்பன்'' என்று ஒரு படம் தயாரித்தார். அந்த படம் மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு, பம்பையில் இருந்து நீலீமலை ஏற ஆரம்பிக்கும் போது இடது புறம் காணப்படும் ஏற்றமான பகுதியில் இருந்து சபரிமலை வரை பாதை அமைத்தார். இதனால் அந்த பாதை சுப்பிரமணியர் பாதை என்று அழைக்கப்படுகிறது.
* நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைப்பதாக ஐதீகம்!
* பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை ஐயப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள்.
* சபரிமலை ஐயப்பன் கோயிலில் ’தத்துவமசி’' எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. ``நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்'' என்று பொருள்.
* சபரிமலை பதினெட்டு படிகளும் பல நூறு ஆண்டுகளாக கற்களாகவே உள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் அதில் தேங்காய் உடைத்ததால் படிகள் சிதலமடையும் ஆபத்து ஏற்பட்டது. இதனால் 1985-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் பதினெட்டுப் படிகளும் பஞ்சலோகத்தால் அமைக்கப்பட்டன.
* ஐயப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மைகளை அடையலாம்!
* சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
* சபரிமலை ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனைச் சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.
* சபரிமலை சென்று வந்தவர்கள் ஐயப்பனின் அருள் பிரசாதத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்தால்தான் யாத்திரை பூரணத்துவம் பெறும் என்பது ஐதீகம்.
* சபரிமலை சாஸ்தா கோயிலில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு சென்று, ஐயப்ப சுவாமியைத் தரிசிக்கலாம்.
* திருப்பதி லட்டு, பழநி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவணைப் பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவணைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT