Last Updated : 02 Dec, 2017 12:10 PM

 

Published : 02 Dec 2017 12:10 PM
Last Updated : 02 Dec 2017 12:10 PM

ஒளியே நமசிவாயம்... மலையே நமசிவாயம்!

திருவண்ணாமலை தலத்தின் ஒப்பற்ற திருவிழா, திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா . மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்குப் பின்னணியில் சுவாரஸ்யமானதொரு புராணம் இருக்கிறது.

திருக்கயிலாயம். சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். இதைக் கவனிக்காத உமையவள், அவருடன் குறும்பாக விளையாட நினைத்தாள். சத்தமில்லாமல் நடந்து வந்து பின்னாலிருந்து சிவபெருமானின் கண்களைப் பொத்தினாள்.

அவை சாதாரணக் கண்களா என்ன? சூரிய, சந்திரன் அல்லவா? அவற்றை மறைப்பதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை யோசிக்கத் தவறினாள். உலகின் இயக்கமே ஸ்தம்பித்தது. இருண்டது. பதறிப்போனாள் பார்வதிதேவி.

மக்கள் நடுங்கினார்கள். தீயவற்றின் ஆதிக்கம் அதிகரித்தது. நல்லவர்கள் பயந்து கலங்கினர். எல்லா உயிர்களும் பெரும் துன்பத்தை அனுபவித்தன. மொத்தத்தில் இயக்கமே தலைகீழானது.

உமையவளின் செயலால் கடும் கோபம் கொண்டார் சிவனார். ‘மன்னித்து விடுங்கள், தெரியாமல் செய்துவிட்டேன்’ என்றாள். ஆனால் சிவனாரோ மனமிரங்கவில்லை. சாபமிட்டார். கலங்கித் தவித்த பார்வதி தேவி, கணவனுடன் மீண்டும் சேருவேன் என கடும் தவம் இருந்தாள். அதற்காக அவள் வந்து இறங்கி நின்று தவம் செய்த இடமே திருவண்ணாமலை!

திருவண்ணாமலையில் உள்ள பவளக் குன்று என்ற இடத்தில் அமர்ந்துதான் ஈசனை நினைத்துத் தவமிருந்தாள். அந்த மலையே சிவமென உணர்ந்தாள். மலையை வலம் வந்தாள். கிரிவலம் வந்தாள். அவளின் தவத்தையும் கிரிவலத்தையும் கண்டு மகிழ்ந்த ஈசன், ஜோதியாய், ஜோதி ரூபமாய் காட்சி தந்தார். தன் உடலின் இடபாகத்தைத் தந்தார். உமையொருபாகனாய் காட்சி தந்தருளினார்.

அப்போது பார்வதி, ‘’என் முன்னே நீங்கள் ஜோதி வடிவமாகத் தோன்றி அருளியதுபோல, இங்கே வந்து வழிபடும் பக்தர்களுக்கும் அப்படியே காட்சி தந்து, அவர்களுடைய குறைகளைத் தீர்த்தருள வேண்டும்!’ என வேண்டினாள்.

இறைவன் அன்னைக்கு சோதி வடிவில் காட்சி தந்த திருநாள் கார்த்திகை மாதம், பரணியன்று பிரதோஷ காலம். ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருக்கார்த்திகை தீப தரிசனம் காண லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள்.

வாழ்வில்... இந்த இப்பிறவியில் ஒருமுறையேனும் திருவண்ணாமலை ஜோதி தரிசனத்தைக் காணவேண்டும் என்பதும் அந்த நாளில்... திருவண்ணாமலை பூமியில் இருந்தாலே புண்ணியம் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x