Published : 28 Sep 2023 04:22 AM
Last Updated : 28 Sep 2023 04:22 AM
நபிகள் நாயகம் ஹள்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ‘முத்திரை தூதர்’என்ற வகையில் வாழ்வியலின் அனைத்து துறைகளுக்கும் அழகியதொரு முன்மாதிரியாக விளங்குகின்றார்கள்.
அண்ணல் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் அல்குர்ஆன், “நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது” என்று புகழ்கின்றது.
வள்ளல் நாயகம் (ஸல்) அவர்கள் வறுமையைத் தங்கள் அணியாகத் தேர்ந்தெடுத்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழையாகவே மறைந்து, மறுமையில் ஏழைகளுடன் எழுப்பப்படுவதற்காக விரும்பி இறைஞ்சியிருந்தாலும் மக்கட் சமுதாயத்தினர் போதுமான வசதியுடன் வாழ்வதையே விரும்பினார்கள்.
இறைவன், மனிதர்களில் செயலால் உயர்ந்தோர் யாரென சோதிக்கிறான். செல்வத்தை தடுத்து பலரை சோதிக்கிறான். ஏழைகளும் ஏற்றம் பெற்று வாழ வேண்டுமென்று,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிதும் ஆசைப்பட்டார்கள். அவர்களது விருப்பத்துக்கேற்ப, ‘ஜக்காத்’ என்னும் கடமைக் கொடை இறைவனால் செல்வந்தர்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ தாங்கள் முயன்று தேடிய செல்வமனைத்தும் இறைவனால் அருளப்பட்டவையே என்றும், அதற்கு தாங்கள் காவலர்களே அன்றி உடமையாளர்களல்ல என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக உணர்த்தினார்கள்.
தனிமரம் தோப்பாகாது; தனிமனிதன் சமுதாயமாக முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூகத்தின் அங்கமாகவே பிறக்கிறான். சமூக உறுப்புகளுக்கிடையில் சமூக உறவு நீடித்தால்தான் அங்கு அமைதி நிலவும். சமூகஉறவுக்குத் தேவை சமூக நீதியும், பரஸ்பரம் உரிமைகளை மதிப்பதுமாகும்.
ஒருவர் மற்றவரின் உரிமைகளை மதிப்பது குறித்து அண்ணலார் தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிறருக்குஉதவும் உயர்குணம், சமூகத் தொண்டு என ஒவ்வொரு பிரிவிலும் அண்ணலார் மிக விரிவாக பேசியிருக்கிறார்கள்; செயல்படுத்தி இருக்கிறார்கள்.
“எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ, அவர்தான் உண்மையான முஸ்லிமாவார். அல்லாஹ் விலக்கியவற்றை எவர் உதறித் தள்ளுகிறாரோ, அவரே உண்மையான முஹாஜிர் ஆவார்” என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். (புகாரீ)
அரசியல்: அரசியலில் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே தனிமனித வழிபாட்டை ஒழித்து, ஜனநாயக முறையை செயல்படுத்தி சாதனை புரிந்தவர்கள் அண்ணலார். மக்களின் அன்பைப் பெற்றவர் எந்த இனத்தைச்சேர்ந்தவராயினும் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம் எனக்கூறி ஜனநாயக அரசியலை ஊக்குவித்த அண்ணலார், இறைவேதப்படி ஆட்சி செலுத்துபவருக்கு கட்டுப்படுங்கள் எனக் கூறியதன் மூலம், நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்துக் காட்டினார்கள்.
அரசியலில் கருத்துச் சுதந்திரம், எதிர்க்கட்சி ஜனநாயகம், உரிமைக்காகப் போராடும் உரிமை, சட்ட ஆட்சி, சட்டத்துக்கு முன் அனைவரும் சமம், லஞ்ச லாவண்ய ஒழிப்பு என்று இன்று வாயளவில் பேசப்படும் அனைத்துக்கும் அன்றே செயல்வடிவம் கொடுத்து, தூய்மையான நல்லாட்சியை அவனிக்கு அளித்த அண்ணல் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையில் சிறந்த முன்மாதிரி உண்டு.
மனிதனுக்கு இன்றியமையாத மருத்துவம் பற்றி நேரடியாகவே அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். (புகாரீ)
நோய்கள் ஒவ்வொன்றுக்கும் மருந்து உண்டு என்பதுடன், அந்த மருந்துகளைக் கண்டறிவதற்காக ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் மேற்கண்ட ஹதீஸிலிருந்து தெரிகிறது.
சமூக நீதி: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நிலைநிறுத்திச் சென்ற சமூக நீதியைப் போன்று உலக வரலாற்றில் எந்த தலைவரும் நிலைநிறுத்தப் பாடுபடவில்லை. மொழி, இனம், குடும்பம் முதலிய எல்லா வகையான பாகுபாடுகளையும் களைந்து, சமூக மக்களிடையே ஒற்றுமை ஓங்க ஓயாது உழைத்தார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள். பிறப்பு வேற்றுமைகளை கடுமையாக எதிர்த்த அண்ணல் அவர்கள்,நீங்கள் அனைவரும் ஆதமுக்கு பிறந்தவர்கள், ஆதம் மண்ணால் படைக்கப்பட்டார் என்று முழங்கினார்கள்.
அல்குர்ஆன் தங்களுடைய மொழியில் அருளப்பட்டிருப்பதாலும், இறுதித் தூதர் தங்களிடையே பிறந்திருப்பதாலும் தங்களுக்கே இஸ்லாத்தில் முதலிடம் என அரபுகள் கருதிவிடக் கூடாது என்பதற்காக மொழிவெறியையும் அண்ணலார் வன்மையாக எதிர்த்தார்கள்.
அரபுகளை நோக்கி அண்ணலார் பேசும்போது, “அரபுகளுக்கு அரபு அல்லாதவர்களைவிட இறை பக்தியின் (தக்வா) மூலமே தவிர எந்தச் சிறப்பும் இல்லை” எனப் பிரகடனம் செய்தார்கள்.
இன்றும்கூட அறிவியல் கலைகளில் முதலிடம் வகிப்பது மருத்துவம்தான் என்பதை நாமறிவோம். மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு தலையாய காரணம் அசுத்தமே ஆகும். எனவேதான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சுத்தம் குறித்து வலியுறுத்தி வந்தார்கள். “சுத்தம் இறை நம்பிக்கையில் சரிபாதியாகும்” என நபிகளார் சொன்னார்கள் (முஸ்லிம், திர்மிதீ)
ஆக. மானுட வாழ்வில் மகத்துவத்தைப் பெறுவதற்கான அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாகத் திகழ்கிறார் நபிகள் நாயகம் ஹள்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
‘முனீருல் ஹிந்த்’ மவ்லானா ராஜா ஹுசைன் தாவூதி,
தலைவர், மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன்
சக்கிமங்கலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT