Published : 26 Sep 2023 06:10 PM
Last Updated : 26 Sep 2023 06:10 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அம்மணி அம்மன் கோபுரத்தில் பிரம்மதேவர் சிலை சேதமடைந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சேதமடைந்த பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் பெய்து வரும் மழைக்கு, அண்ணாமலையார் கோயிலில் அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள பிரம்மதேவர் சிலையின் மார்பு, வயிறு பகுதி ஆகியவை நேற்று பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதான நுழைவு வாயிலாக, 'வடக்கு வாசல்' என அழைக்கப்படும் 'அம்மணி அம்மன்' கோபுரம் உள்ளது. 18-ம் நூற்றாண்டில், பெண் சித்தரான 'அம்மணி அம்மாள்' என்பவர் கட்டி எழுப்பினார். 300 ஆண்டுகள் பழமையான அம்மணி அம்மன் கோபுரத்தில் செடி, மரம் போன்றவை வளர்ந்து பராமரிக்கப்படாமல் இருந்தது. பக்தர்கள் புகார் தெரிவிக்கும்போது, கோபுரத்தில் உள்ள செடிகள் அகற்றப்படும்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழைக்கு, அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள பிரம்மதேவர் சிலையின் மார்பு, வயிறு மற்றும் கால் பகுதி பெயர்ந்து இன்று (செப்டம்பர் 26-ம் தேதி) காலை விழுந்தது. கோயில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர். இது குறித்து, சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது. மேலும், தொல்லியல் துறை அலுவலர் வெங்கடேசன் ஆய்வு செய்துள்ளார். இவர்களது உத்தரவின்பேரில், ஸ்தபதி மூலமாக சேதமடைந்துள்ள பிரம்ம தேவர் சிலை சீரமைக்கப்படும் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பக்தர்கள் கூறும்போது, ''அண்ணாமலையார் கோயிலில் ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம், கிளி கோபுரம் உட்பட 9 கோபுரங்கள் உள்ளன. அனைத்து கோபுரங்களும், நூற்றாண்டு கடந்தவை. இந்நிலையில், ஓரிரு நாட்களாக பெய்த கன மழைக்கே, அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள பிரம்மதேவர் சிலை பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதனை உடனடியாக சீரமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜகோபுரம் உட்பட மாட வீதியில் உள்ள 4 கோபுரங்களை சுத்தம் செய்வதாக கூறி, தீயணைப்புத் துறை சார்பில் பிரத்யேக வாகனம் மூலம் அதிவேகமாக தண்ணீர் பீய்ச்சி அடித்து சில மாதங்களுக்கு சுத்தம் செய்யப்பட்டன. இதனால், கோபுரங்களின் உறுதி தன்மையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். மேலும், கோபுரங்களில் வாழ்ந்து வந்த அழகிய புறா இனங்கள் அழிக்கப்பட்டன. எனவே, கார்த்திகைத் தீபத் திருவிழா வருவதையொட்டி, 9 கோபுரங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்ட நிலையில், அவர் எழுப்பிய கோபுரத்தில் உள்ள பிரம்மதேவர் சிலை பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது வேதனையை அளிக்கிறது'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT