Published : 21 Dec 2017 12:21 PM
Last Updated : 21 Dec 2017 12:21 PM
இறைமகன் பிறக்கப்போகிறார் என்பதன் அடையாளமாக டிசம்பர் முதல் தேதியே வீடுகளில் நட்சத்திரம் தொங்கவிட்டு இது கிறிஸ்துமஸ் மாதம் என்று அறிவிக்கிறோம். வீட்டை ஒட்டடை அடித்து, கழுவிச் சுத்தம் செய்வதைப்போலவே நம் மனதையும் ஒட்டடை அடித்து, கழுவிக் காயப்போட வேண்டிய தருணம் இது. இந்த ஆண்டு முழுவதும் சிறிது சிறிதாக நம் மனதில் சிந்தனையில் ஒட்டடை படிந்திருக்கலாம். நம் மனமே கடவுள் வாழும் ஆலயம். மனமே இறைமகன் பிறக்க இருக்கும் மனத் தொழுவம். அப்படியிருக்கையில் ஒவ்வொரு வருடமும் உங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள கிறிஸ்து தன் பிறப்பின் மூலம் வாய்ப்பு அளிக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட இயேசு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் அவதரித்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.
எலிசபெத்தைச் சந்தித்த மரியாள்
ரோமாபுரியின் ஆளுகைக்கு உட்பட்ட கலிலேயாவில் நாசரேத் என்ற ஊர் இருந்தது. அங்கே எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கன்னிப்பெண்ணிடம் காபிரியேல் தேவதூதரைக் கடவுள் அனுப்பினார். தாவீதின் வம்சத்தில் வந்த யோசேப்புக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது; அந்தக் கன்னிப்பெண்ணின் பெயர் மரியாள். மரியாளின் முன்பு தேவதூதர் தோன்றியபோது, “கடவுளுக்கு மிகவும் பிரியமானவளே வாழ்க! நீ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று சொன்னார். தேவதூதரின் வாழ்த்தைக் கேட்டு மரியாள் கலக்கமடைந்து, தேவதூதரின் வாழ்த்துக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் அஞ்சினாள்.
அதனால் தேவதூதர் அவளிடம், “மரியாளே, பயப்படாதே; நீ கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறாய். இதோ! நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும். அவர் உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்; அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுள் அவருக்குக் கொடுப்பார். அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது” என்று சொன்னார்.
அப்போது மரியாள் குறுக்கிட்டு, “இது எப்படி நடக்கும்? நான் கன்னிப்பெண்ணாக இருக்கிறேனே” என்றாள். அதற்கு அவர், “கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்; உன்னதமான கடவுளுடைய வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படுவார். இதோ! உன் சொந்தக்காரப் பெண் எலிசபெத்தும் வயதான காலத்தில் ஒரு மகனை வயிற்றில் சுமக்கிறாள்; மலடி என்று அழைக்கப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். கடவுளால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று எதுவுமே இல்லை”என்று சொன்னார். அதைக் கேட்டதும் தேவதூதர் சொன்னதை நம்பிய மரியாள், “இதோ! நான் கடவுளின் அடிமைப் பெண்! நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்போது, தேவதூதர் அவளைவிட்டு மறைந்து போனார்.
தேவதூதர் கூறியதை உறுதிசெய்துகொள்வதற்காக மரியாள் உடனடியாகப் புறப்பட்டு, யூதாவின் மலைப் பகுதியில் இருக்கிற ஒரு நகரத்துக்கு வேகமாகச் சென்றாள். அங்கே அவள் சகாரியாவின் வீட்டுக்குள் போய், தன் உறவினள் ஆன எலிசபெத்துக்கு வாழ்த்துச் சொன்னாள். மரியாள் சொன்ன வார்த்தையை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய வயிற்றிலிருந்த குழந்தை துள்ளியது;
எலிசபெத் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு, “நீ பெண்களிலேயே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள்; உன் வயிற்றிலுள்ள குழந்தையும் ஆசீர்வதிக்கப்பட்டது! என் எஜமானுடைய தாய் என்னைப் பார்க்க வருவதற்கு நான் என்ன பாக்கியம் செய்தேன்! இதோ! நீ வாழ்த்திய சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள குழந்தை சந்தோஷத்தில் துள்ளியது. கடவுளுடைய வார்த்தையை நம்பிய நீ சந்தோஷமானவள்; அவர் உனக்குச் சொன்னதெல்லாம் முழுமையாக நிறைவேறும்” என்று உரத்த குரலில் எலிசபெத் சொன்னாள்.
யோசேப்பின் மனக்குழப்பம்
தேவதூதர் தோன்றி இறைமகன் பிறப்பை அறிவித்தபோது மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். அவர் தாவீதின் வழியில் வந்தவர். மரியாள் கர்ப்பமாயிருப்பதைத் தெரிந்துகொண்ட யோசேப்பு, நல்மனம் கொண்டவராக இருந்ததால் மரியாளை ரகசியமாக திருமண ஒப்பந்தத்திலிருந்து விலக்கிவிட நினைத்தார். அப்போது இறைத்தூதர் யோசேப்பு முன் தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதைத் தெரிவித்ததும் மனக்குழப்பம் நீங்கிய யோசேப்பு மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது யூதேயா, கலீலேயா உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்த ரோமப் பேரரசன் அகுஸ்துஸ் தேவமகனின் பிறப்பைக் கேள்விப்பட்டு ஆண்குழந்தைகளைத் தேடிக் கொல்வதற்கு உத்தரவிட்டான். இதனால் யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்கு யோசேப்பும் மரியாளும் புறப்பட்டுச் சென்றனர்.
கோட்டை வேண்டாம் கொட்டில் போதும்
நாசரேத்துக்கும் பெத்லகேமுக்கும் இடையேயான தூரம் சுமார் 12 கிலோமீட்டர்கள். வழக்கமாக ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குக் கால்நடையாகவும் கழுதைகள் மீதும், வசதியிருப்போர் குதிரை வண்டிகளிலும் பயணம் செய்தனர். இப்படிப் பயணம் செய்வோர் தங்குவதற்காக ஆங்காங்கே சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. யோசேப்பின் குடும்பம் மிகவும் எளிய ஒன்று என்பதால் கழுதையின் மீது மனைவியை இருத்திக் கண்ணும் கருத்துமாக அழைத்துச் சென்றார். நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மரியாள் மிகவும் சோர்வுற்றிருந்தாள்.
பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. மரியாவும் சூசையும் சத்திரத்தில் தங்க வந்திருந்தபோது, அது பயணியர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனவே, அவர்கள் தங்குவதற்குக் கிடைத்த இடம் மாட்டுக்கொட்டகை.
அந்த இடத்தில்தான் இறைமகன் இந்த பூமியில் குழந்தையாகப் பிறந்தார். இந்த உலகத்தையே படைத்துப் பராமரிக்கிற இறைவனின் மகனுக்குக் கிடைத்த இடம் எளிய இடம்தான். மீட்பர், அரண்மனையில் அரசியின் வயிற்றில்தான் பிறப்பார் என்ற ஆட்சியாளர்களின் புரட்டு தீர்க்கதரிசனங்களைக் கடவுள் தன் பிறப்பின் மூலமே பொய் எனக் காட்டினார்.
இடையர்கள் கண்டனர்
இயேசுவைக் கண்டு வணங்கிட இடையர்களே முதலில் வந்தனர். உலகத்தை மீட்க வந்த கடவுளுக்கு வணக்கம் செலுத்திட இவ்வுலகப் பெருமக்கள் வரவில்லை, மாறாக, எளிய மக்களே இறைவனை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவர்கள் இயேசுவுக்கு வணக்கம் செலுத்தியபோது விண்ணகமும் அவர்களோடு சேர்ந்துகொண்டது என லூக்கா விளக்குகிறார். விண்ணகத்தில் கடவுளின் பணியாளர்களாக விளங்குவோர் அவருடைய தூதர்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து இசைத்த பண்புயர் கீதம் ''உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக'' எனத் தொடங்குகின்ற புகழ்பாடல்.
இறைவன் நம்மோடு
கன்னி மரியாளிடம் “பிறக்கவிருக்கும் குழந்தை இம்மானுவேல் என்று அழைக்கப்படும்” என்று கப்ரியேல் வானதூதர் அறிவிக்கிறார். இம்மானுவேல் என்றால் இறைவன் நம்மோடு என்று பொருள் தருகிறார். இதுதான் கிறிஸ்துமஸ் தினத்தின் நம்பிக்கையூட்டும் நற்செய்தி. ‘இறைவன் நம்மோடு’ என்றும் வாழ்கிறார் என்பதற்கு அடையாளமாகவே ஒரு குழந்தையின் வடிவில் கடவுள் நம் முன் தோன்றுகிறார். எனவே நாம் தனியாக இவ்வுலகில் இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை நெஞ்சில் நிரப்புவதற்காகவே அவர் பிறந்தார். நமது உள்ளங்களிலும் இல்லங்களிலும் கிறிஸ்து வழங்கும் ஒளி நிரம்பி வழியட்டும்.
கிறிஸ்துமஸ் மரம் எப்படித் தோன்றியது?
கிறிஸ்துமஸ் தாத்தா, அவர் தரும் கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது.
இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மரக்கிளைகளையும் பச்சை இலைக் கொத்துக்களையும் வீட்டு வாசலில் தொங்கவிட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.
ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ் என்ற பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்த்தாகச் சாடியும் எதிர்த்தும் வந்தவர். ஊர் ஊராகச் என்று மதப் பிரச்சாரம் செய்து வந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்டும் துளிர்த்துவிடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.
ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக் கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக்க பார்க்கத் தொடங்கினார்கள். பாதிரியார் போனிபேஸ் தனது ஊழியத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவ்வழியே திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார்.
இதனால் கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத் தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT