Last Updated : 11 Dec, 2017 03:59 PM

 

Published : 11 Dec 2017 03:59 PM
Last Updated : 11 Dec 2017 03:59 PM

திட்டையும் திருஞானசம்பந்தரும்..!

ஞானபூமியாக, வருவோருக்கு ஞானம் தரும் தலமாகத் திகழும் தென்குடித்திட்டையை வேதங்கள் போற்றும் தலம் என்றும் வேதங்கள் வணங்கும் தலம் என்றும் பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது திட்டை திருத்தலம். இந்தத் தலம் குறித்து ஞானசம்பந்தர் மெய்யுருகிப் பாடுகிறர் இப்படி.

முன்னை நான் மறையவை முறைமுறை குறையொடும்

தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்

மன்னுமா காவிரி வந்துஅடி வருட நல்

செந்நெலார் வளவயல் தென்குடித்திட்டையே!

என்கிறார் திருஞானசம்பந்த பெருமான்.

அதாவது, இந்தத் தலத்துக்கு நான்கு வேதங்களும் தனித்தனியாக வந்ததாம். தங்களின் குறைகளைச் சொல்லி புலம்பியதாம். சிவனாரின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு, முறையிட்டனவாம். அப்படி முறையிட்டு, புலம்பி, வணங்கியதால் வரம் தந்தவன் குடிகொண்டிருக்கும் தலம் என்று தென்குடித்திட்டையைப் பற்றி உருகுகிறார் ஞானசம்பந்தர்.

அதுமட்டுமா? நிலையானதும் மிகப் பிரமாண்டமானதுமான காவிரி நதியானது, இங்கே குதூகலமாக ஓடி வந்து, சிவனடியைத் தொழும் தலம் என்கிறார். செம்மையான, வளமையான, நெடுநெடுவென வளர்ந்திருக்கிற வயல்களைக் கொண்ட பூமி என்று குறிப்பிடுகிறார்.

இன்னொரு பாடல்.

மகரம் ஆடுங்கொடி மன்மத வேள்தனை

நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம்

பகரவாள் நித்திலம் பன்மக ரத்தொடும்

சிகர மாளிகை தொகும் தென்குடித் திட்டையே!

என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

அதாவது, மீன் கொடியை வைத்திருப்பவன் மன்மதன். அவனை தன் பார்வையால் சுட்டெரித்தவன் குடிகொண்டிருக்கும் தலம் என்று தென்குடித்திட்டையைச் சொல்கிறார். ஒளி கொடுக்கிற சந்திரனும் நட்சத்திரங்களும் வந்து ஆசையுடன் உட்கார்ந்து கொள்ளும் ஒப்பற்ற இடமாம் தென்குடித்திட்டை!

இன்னும் இன்னுமாக இதுபோன்ற பதிகங்களால் சிவனாரைப் பாடிப் பரவசமாகிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x