Published : 07 Dec 2017 02:51 PM
Last Updated : 07 Dec 2017 02:51 PM
காஞ்சி மகாப் பெரியவர், ஒருநாள் தன் சீடரை அழைத்தார். ''சந்தியா வந்தனம் ஆச்சா? சுக்லாம் பரதரம் ஆச்சா?'' என்று கேட்டார்.
உடனே அந்தச் சீடர், 'ஆச்சு' என்று சொல்லியபடி தலையசைத்தார்.
அதற்கு மகா பெரியவர் அவரிடம்... 'சுக்லாம் பரதரம் சொன்னாயான்னு கேட்கலை... ஆச்சான்னு தான் கேட்டேன்” என்றார்.
சீடருக்கு ஒன்றுமே புரியவில்லை. பெரியவா என்ன கேட்கிறார், இந்த வார்த்தைக்கு என்ன வித்தியாசம் என்று புரிபடாமல் தவித்தார். குழம்பினார்.
சில நிமிட மெளனத்துக்குப் பிறகு, மகா பெரியவர், “சுக்லாம் பரதரம் சொல்லு பார்ப்போம்” என்றார்.
பெரியவா சொல்லச் சொன்னதும்...
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே” என்று சீடர் சொன்னார்.
சீடர் சொன்னதைக் கேட்ட மகா பெரியவர், “இதற்கு அர்த்தம் தெரியுமோ?” என்று கேட்டார்.
“தெரியும்” என்று பதிலளித்த சீடர், ''வெள்ளை உள்ளம், யானையின் கருப்பு நிறம், நான்கு கரங்கள், பிரகாசமான முகம், எல்லாரையும் நினைக்கச் செய்யும் உருவம் ஆகியவற்றைக் கொண்ட விநாயகரை நினைத்தால் எல்லாத் தடைகளும் கவலைகளும் நீங்கும்'' என்றார்.
‘’அட... சரியாச் சொல்றியே. இதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு. அது உனக்குத் தெரியுமோ? என்று சொல்லிச் சிரித்தார்.
“சுக்லம்' என்றால் 'வெள்ளை'... அதாவது பால்;
'விஷ்ணும்' என்றால் 'கருப்பு' அது 'டிக்காஷன்';
'சசிவர்ணம்' என்றால் கருப்பும், வெள்ளையும் கலந்தது...
அதாவது காபி. 'சதுர்புஜம்' என்றால் நான்கு கை. அதாவது மாமியோட இரு கைகளால் காபியைக் கொடுக்க, மாமாவின் இரு கைகள் அந்த காபியைப் பெற்றுக் கொள்ளும்.
'த்யாயேத்' என்றால் 'நினைத்தல்'. நினைப்பது. அதாவது இப்படி காபி கொடுப்பதை மனதில் நினைப்பது.
பிரசன்ன வதனம் என்றால் 'மலர்ந்த முகம்' அதாவது காபியை மனதில் நினைத்ததும், மாமாவின் முகம் மலர்ந்து விடும்.
'சர்வ விக்னோப சாந்தயே' என்றால் 'எல்லாக் கவலையும் நீங்குதல்'. அதாவது காபி குடித்தால் கவலை நீங்கி மனம் சாந்தமாகி விடும் என்று அர்த்தம்.
'சுக்லாம் பரதரம் ஆச்சா?' என்பதில் 'காபி குடிச்சாச்சா' என்பதும் அடங்கியிருக்கிறது என்று தெரிந்து கொண்ட சீடர்கள் தங்களை மறந்து சிரித்தார்கள்.
காஞ்சி மகாபெரியவரும் புன்னகைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT