Last Updated : 16 Dec, 2017 10:11 AM

 

Published : 16 Dec 2017 10:11 AM
Last Updated : 16 Dec 2017 10:11 AM

மார்கழியைக் கொண்டாடுவோம்!

மார்கழி மாதத்தின் விசேஷங்களைப் பார்ப்போம். முன்னதாக ஒரு வார்த்தை... மார்கழியே விசேஷம்தான். மாதங்கள் பனிரெண்டு இருந்தாலும் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என அருளியுள்ளார் பகவான்.

மார்கழியை தனுர் மாதம் என்பார்கள். தனுர் மாதத்தில் செய்யப்படும் பூஜைக்கும் வழிபாட்டுக்கும் இன்னும் இன்னுமான பலன்கள் உண்டு என்கின்றன சாஸ்திரங்கள். இந்த மார்கழியில், பிரம்மமுகூர்த்தத்தில், எழுந்து நீராடுவது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும் மனோதிடத்தையும் மனத்தெளிவையும் தந்தருளும் என்கின்றன சாஸ்திரங்களும் விஞ்ஞானமும்!

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள் என்பார்கள். உத்த்ராயனத்தை இரவு என்றும் தட்சிணாயனத்தை அவர்களுக்கான பகல் பொழுது என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். உத்தராயனத்தில் சூரியன் , மேற்கில் இருந்து கிழக்காக நகரும். ஆகவே இந்த மார்கழி மாதம் முழுவதும் தினமும் பிரம்மமுகூர்த்த வேளையில், எழுந்து நீராடுங்கள்.

அடுத்து, ஒரு பத்துநிமிடம், கண் மூடி தியானத்தில் ஈடுபடுங்கள். உங்களுக்குத் தெரிந்த, உங்களால் முடிந்த பூஜையைச் செய்யுங்கள். முடிந்தால், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடுங்கள்.

ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மாணிக்கவாசகர் பெருமான் பாடிய திருவெம்பாவையும் மனமுருகப் பாடுங்கள். வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும். இழந்த விஷயங்களைத் திரும்பப் பெறுவீர்கள். குழந்தைகள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மார்கழி மாதம் சைவ வைண விழாக்களை ஒருங்கே கொண்ட ஒப்பற்ற மாதம். மார்கழியில்தான் சிவனாருக்கு உரிய திருவாதிரை விழா விமரிசையாக நடைபெறுகிறது. அதேபோல், மார்கழியில்தான் பெருமாளுக்கு உரிய வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, சிதம்பரம் முதலான சிவாலயங்களும் ஸ்ரீரங்கம் முதலான பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு, பூஜைகள் அமர்க்களப்படும்.

மகத்துவம் நிறைந்த மார்கழியில்தான் திருப்பள்ளியெழுச்சி வழிபாடுகள் ஆலயங்களில் அற்புதமாக நடந்தேறுகின்றன. எனவே, மார்கழியைக் கொண்டாடுவோம். மனதார இறை வழிபாடு செய்து, இறைசக்தியின் பேரருளைப் பெறுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x