Published : 04 Sep 2023 06:23 AM
Last Updated : 04 Sep 2023 06:23 AM

பக்தர்களின் கோவிந்த நாம கீர்த்தனைகள் முழங்க கோபி நந்த கோகுல பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்

ஈரோடு: பக்தர்களின் கோவிந்த நாம கீர்த்தனை கோஷங்கள் முழங்க, கோபி நந்த கோகுலத்தில் உள்ள பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது

ஈரோடு மாவட்டம் கோபியில் நந்தகோகுலம் கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2012-ம் ஆண்டு, 4 பசுமாடுகளுடன் தொடங்கப்பட்ட நந்தகோகுலம் கோசாலையில் தற்போது, 110 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. நந்தகோகுலத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், கோபி கோடீஸ்வரா நகரில் தட்ஷிண பிருந்தாவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக பூஜைகள் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கின.

இதையடுத்து, கோபியில் உள்ள கோயிலில் இருந்து சுவாமிகள், கலசங்கள், ‘கலா கர்ஷனம்’ செய்து புதிய பெருமாள் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு முதல்கால யாக பூஜைகள் தொடங்கின. சுவாமி கர்ப்பக்கிரகத்துக்கு கீழே 20 அடி ஆழத்தில் பேழை பிரதிஷ்டை செய்யப்பட்டு, 3 கோடி ராம நாமம் எழுதிய புத்தகம் வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள
நந்த கோகுல பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்ற
கும்பாபிஷேக விழாவில் கோபுரக் கலசம் மீது புனித நீர்
ஊற்றும் ஸ்ரீ காமாட்சி சுவாமிகள் மற்றும் பட்டாச்சாரியார்கள்

பூலோகத்தில் உள்ள 106 திவ்ய தேசங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட திருமண் மற்றும் 40 சாலக்கிராமங்களைக் கொண்டு சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இரு நாட்களும் யாக கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை ஆறாம் கால பூஜைகள் நடந்தன.

இதைத் தொடர்ந்து, கோவிந்த நாமகீர்த்தன கோஷங்கள், மங்கள வாத்தியங்கள், சங்கு நாதங்கள், வேத மந்திரங்கள் முழங்க, கலசங்கள் சந்நிதிக்கு எழுந்தருளின. விமான ஸம்ப்ரோஷணத்தைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சஹஸ்ர நாம பெருமாள், ஸ்ரீ ராதிகா சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி, ஸ்ரீ ருக்மாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்க சுவாமி ஆகிய சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மஹா ப்ரதிஷ்டாபன மகா ஸம்ப்ரோஷணம் (மகா கும்பாபிஷேகம்) விமரிசையாக நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ தேவி,
பூதே வி சமேத ஸ்ரீ சஹஸ்ரநாம பெருமாள்,
ஸ்ரீ ராதிகா சமே த ஸ்ரீ நந்த கோபால சுவாமி,
ஸ்ரீ ருக்மாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்க சுவாமி.

மகா ஸம்ப்ரோஷணத்தை ஸ்ரீ நித்ய முக்தானந்த சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் மற்றும் திருவெள்ளரை கோயில் தலைமை அர்ச்சகர்கள் ரமேஷ் பட்டாச்சாரியார், கமலமலர்க்கண்ணன், அச்சுதன் பட்டாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேக விழாவில், ஈரோடு ராஜாமணி பாகதவர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானமும், மாலை திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை நந்த கோகுலம் தலைவர் கண்ணப்பன், பொருளாளர் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x