Published : 02 Dec 2017 04:43 PM
Last Updated : 02 Dec 2017 04:43 PM
நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ளது திருவெண்காடு திருத்தலம். இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்வேதாரண்யர். மிகப் பிரமாண்டமான ஆலயம். நவக்கிரக ஆலயங்களில் இந்தத் தலத்தை, புதன் பரிகாரத் தலம் என்று போற்றுகின்றனர்.
இங்கு புதன் பகவானுக்கு தனிச்சந்நிதியும் உள்ளது. இந்தத் தலத்துக்கு வந்து புதன் பகவானை வேண்டிக் கொண்டால், மனதில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். காரியத்திலும் செயலிலும் திட்டமிட்டபடி செயல்பட்டு வெற்றி கிடைக்கும்.
இந்தக் கோயிலின் விசேஷம்... மூன்று தீர்த்தங்கள் கொண்ட தலம் இது. அதாவது சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சந்திர தீர்த்தம் என தீர்த்தப் பெருமைகள் கொண்ட ஆலயம்.
அதேபோல், வில்வம், ஆல், கொன்றை என மூன்று தல விருட்சங்களைக் கொண்ட திருத்தலம் இது. மேலும் ஸ்வேதாரண்யர், நடராஜர் பெருமான், அகோர மூர்த்தி என மூன்று தெய்வங்களின் ஆதிக்கமும் நிறைந்த திருத்தலம். இவர்களில் அகோரமூர்த்திக்கு ருத்ராபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதேபோல், இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், பில்லி முதலான சூனிய காரியங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். துஷ்ட தேவதைகள் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.
இடது காலை முன்வைத்து, வலது கால் கட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி கைகளில் திரிசூலம் ஏந்திக் கொண்டு அசுரனை வதம் செய்யக் கிளம்பும் தோரணையுடன், கடும் உக்கிரத்துடன் காட்சி தருகிறார் அகோர வீரபத்திர சுவாமி.
கார்த்திகையின் 3வது ஞாயிற்றுக் கிழமை அன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அகோரமூர்த்திக்கு சிறப்பு பூஜைகளும் ருத்ராபிஷேகமும் அமர்க்களமாக நடைபெறும்.
இந்த முறை ஞாயிற்றுக்கிழமையுடன் பெளர்ணமியும் சேர்ந்து வருவது இன்னும் சிறப்பு. கார்த்திகை ஞாயிறு மற்றும் பெளர்ணமி நாளில், அகோர வீரபத்திரரை வழிபடுங்கள். அல்லல்கள் யாவும் விலகும். தொல்லைகள் அனைத்தும் காணாமல் போகும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT