Published : 14 Dec 2017 08:50 AM
Last Updated : 14 Dec 2017 08:50 AM
நமக்குத் தேவையானது எதுவோ அதைத் தொலைத்துவிடுவதுதான் வாழ்வின் மிக முக்கியமான சுவாரஸ்யம். ஒருவிஷயத்தை, ஒரு பொருளை, ஒரு நபரை... கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவால். அப்படிக் கண்டுபிடித்ததைக் கோட்டை விடுவது, அதைவிட பெரிய சவால். திரும்பவும் தேடவேண்டும். தேடிப் பெறவேண்டும்.
1854ம் வருடம், கண்டோபா கோயிலில் பிரமாண்டமாக நடந்துகொண்டிருந்தது திமீதித் திருவிழா. ஊரே கூடியிருந்த ஒப்பற்ற விழா அது. எல்லோரும் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த, கனிந்த மனதுடன் வந்திருந்த திருவிழா.
விழாவில், கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அருள் வந்தது. தன்னை மறந்து, தன்னிலை மறந்து ஆடினாள். அப்போது கூட்டத்தில் நின்றவர்களில், கூட்டத்தோடு கூட்டமாக நின்றவர்களில், அந்த இளைஞனைப் பார்த்தாள். இன்னும் ஆட்டம் அதிகரித்தது.
‘எங்க ஊரையும் குலத்தையும் காக்க வந்தவனே. தெய்வீகத்துக்குச் சொந்தக்காரன் நீ. இங்கேயே இரு. எங்களையெல்லாம் காப்பாற்று. எங்கேயும் போய்விடாதே’ என்றாள் அந்த இளைஞனைப் பார்த்து!
அருள் வந்து ஆடிய பெண் சுட்டிக்காட்டிய திசையப் பார்த்தார்கள் எல்லோரும். அந்த இளைஞனை நோக்கி ஓடினார்கள். ‘இங்கேயே இருங்கள்’ என்று வேண்டினார்கள்.
ஆனால் அந்த இளைஞன் அன்றைய தினமே அங்கிருந்து நகர்ந்தான். திருவிழாவில் காணாமல் போனவர் போல், மொத்த ஊரும் அந்த இளைஞனைத் தேடியது. தொலைத்தது உணர்ந்து தவித்தது.
‘என்ன பாவம் பண்ணினோமோ... இப்படி விட்டுட்டோமே’ என்று பதறினார்கள். ‘இந்த ஊரே பாவப்பட்ட ஊர் போல இருக்கு... என்னத்தச் சொல்றது போங்க’ என்று அலுத்துக் கொண்டார்கள். ‘கண்டோபா தெய்வ சந்நிதில, கண்டோபா தெய்வமே அடையாளம் காட்டியும், கோட்டை விட்டுட்டோம்’ என்று ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டார்கள்.
எல்லோருக்கும் ஆறுதல் சொன்னார் பகத்மகல்சாபதி. அந்தக் கோயிலின் அர்ச்சகர் அவர். ஆனால், உள்ளுக்குள் ரொம்பவே நொந்துபோனார். ஆழ்ந்த பக்தியும் நேர்மையும் கொண்டிருந்த அவர்,கண்டோபா தெய்வத்தை மனமுருக வேண்டினார்.
விழாவில் இருந்து நகர்ந்த இளைஞன், பக்கத்து ஊரில் ஒரு வீட்டில் தங்கியிருந்தான். அந்த வீட்டில் யாருக்கோ திருமணம். ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன. அக்கம்பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் தெரிந்தவர்களும் உறவுக்காரர்களுமாக வந்து கொண்டிருந்தார்கள். அது மாப்பிள்ளைப் பையனின் வீடு.
பெண் வீட்டைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள். விடிந்தால் கல்யாணம். பெண் வீட்டாருக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் என கிட்டத்தட்ட பலரும் வந்துவிட்டார்கள். அந்தப் பெண்ணின் சொந்த ஊர்...ஷீர்டி. ஆகவே, திருமணத்துக்கு, ஷீர்டியில் இருந்தும் எண்ணற்ற மக்கள், அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். முக்கியமாக, கண்டோபா கோயிலின் குருக்கள், பகத்மகல்சாபதியும் வந்திருந்தார்.
உள்ளுக்குள் வருத்தம் இருந்துகொண்டே இருந்தது அவருக்கு. மனம் முழுக்க அந்த இளைஞனே வியாபித்திருந்தான். அப்போதுதான், அது நிகழ்ந்தது.
அந்த இளைஞனை, அங்கே பகத்மகல்சாபதி பார்த்துவிட்டார். கண்ணில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. முகம் முழுக்க சிரிப்பு பரவியது. உதடுகள் கண்டோபா தெய்வத்தின் பெயரை உச்சரித்தது. உற்சாகத்தில் ஓடிவந்தார். இளைஞனைக் கட்டிக் கொண்டார். ‘சாயி... சாயி... சாயி...’ என்று சொல்லிக் கொண்டே ஆரத்தழுவினார். விலகி வந்து, இரண்டடி பின்னே சென்று விழுந்து நமஸ்கரித்தார். ‘சாயி... சாயி... சாயிபாபா...’ என்று அரற்றியபடியே இருந்தார். பரவசம் பொங்க, சொல்லிக் கொண்டே இருந்தார்.
அங்கே இருந்த ஷீர்டிக்காரர்கள் ஓடிவந்தார்கள். மெய்சிலிர்த்துப் போனார்கள். அனைவரும் தடாலென விழுந்து வணங்கினார்கள். ‘சாயிபாபா... சாயிபாபா...’ என்று கைகூப்பிச் சொன்னார்கள்.
பகவான் சாயிபாபாவை, அந்த மகோன்னதமான குருவை, இறையருள் பெற்ற சித்தபுருஷனை அனைவரும் போற்றினார்கள். கொண்டாடினார்கள். வணங்கினார்கள்.
இன்றைக்கு உலகமே கொண்டாடி வணங்கிக் கொண்டிருக்கும் பகவான் சாயிபாபாவை, அருளாடிய அந்தப் பெண் அடையாளம் கண்டு சொன்னாள். கண்டோபா கோயிலின் குருக்கள் பகத்மகல் சாபதி பார்த்துவிட்டு, ஊருக்கே சொன்னார். சொன்னது மட்டுமின்றி, ‘சாயிபாபா...’ என்றும் பெயர் வைத்தார். அந்தப் பெண்மணி செய்த புண்ணியம் இது. கோயிலின் அர்ச்சகரின் இறைபக்திக்கு, அந்த இறைவனே வழகிய கொடை.
எல்லோரும் பூரித்துப்போனார்கள். புளகாங்கிதம் அடைந்தார்கள்.
அந்த இளைஞனின் பெயர் யாருக்கும் தெரியாது. அவரின் பெயர் என்ன... அதையெல்லாம் சொல்லிக் கொள்ளும் நிலையில் இருந்து நகர்ந்து வந்திருந்த இளைஞருக்கு அங்கே புதுப்பெயர் சூட்டப்பட்டது. புதிய நாமகரணம் சொல்லி, அழைக்கப்பட்டது. திருவிழாவில் தொலைத்தவரை, திருமணவிழாவில் கண்டறிந்தார்கள். அது... ஷீர்டி செய்த புண்ணியம்!
பாபாவின் அருள், அந்த ஊருக்குள் பரவியது. ஷீர்டியின் செடிகொடிகளுக்கும் அவரின் அருள் போய்ச் சேர்ந்தது. வேர் வரை பரவி, வளர்ந்தன. இது ஷீர்டி தாண்டியும் மெல்ல மெல்லப் பரவியது.
‘யாரோ இளைஞராம். அவருக்கு முன்னே போய் நின்றாலே போதுமாம். நம் தரித்திரமெல்லாம் விலகச் செய்துவிடுகிறாராம்’ என்று பாபாவைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். பார்த்துவிட்டு, வியந்து சொல்லிக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து கேட்டு ஆச்சரியத்துப்போனவர்கள் சொன்னார்கள். ஷீர்டி பாபாவின் புகழ் இப்படித்தான் பரவியது. அந்த மகானின் மகத்துவம், இப்படியாகத்தான் எல்லோராலும் அறியப்பட்டது.
‘பாபாவை போய்க் கும்பிட்டேன். எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்தார்’ என்று குதூகலித்தார்கள். ‘என் நோயைத் தீர்த்த மகான் அவர்’ என்று நெகிழ்ந்தார்கள். ‘எனக்கு நல்ல உத்தியோகம் கிடைத்ததே சாயிபாபாவால்தான்’ என்று நெக்குருகிப் போனார்கள்.
இந்த சமயத்தில்தான்... ஒருமுறை அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஷீர்டிக்கு அருகில் தூலியா என்றொரு கிராமம். ஒருநாள்... பெரும் பரபரப்புக்குள்ளானது. ஊரே ஓரிடத்தில் கூடியது. அங்கே நடுவில் நின்றவனையே விழிகள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தது. அவன் திருடன். போலீஸிடம் சிக்கிக் கொண்டான்.
அவனிடம் ஏகப்பட்ட நகைகள். கைகொள்ளாத தங்க நகைகள். எல்லோரும் அவனைப் பார்த்தார்கள். நகைகளைப் பார்த்தார்கள். மாறி மாறிப் பார்த்தார்கள். அவனைப் பிடித்து வைத்திருந்த போலீஸார், பிடிப்பதற்கு முன்பும் அடித்திருந்தார்க்ள். அதாவது அடித்து உதைத்துதான் பிடிக்கவேண்டியிருந்தது அவனை. இப்போது திமிறியதால், மீண்டும் அடித்தார்கள்.
‘சொல்லுடா... இந்த நகைகளை எங்கே திருடினே. ஏது இந்த நகைகள்’ என்று கேட்டுக் கேட்டு அடித்தார்கள். அடி உதையை பொறுத்துக் கொண்டிருந்தவன், ஒருகட்டத்தில் தாங்கமுடியாமல் துடித்துப் போனான். கதறினான்.
‘சொல்லுடா... எதுடா இந்த நகையெல்லாம்’ என்று மீண்டும் கேட்டுவிட்டு, அடிக்க கை ஓங்கினார்கள்.
அந்தத் திருடன் சொன்னான்... ‘இதெல்லாம் நான் திருடலை’ என்றான்.
‘அப்புறம்... நகை எப்படி வந்துச்சு உங்கிட்ட...’ என்று கேட்டார்கள்.
சட்டென்று அவன் சொன்னான்... ‘‘ஷீர்டியில இருக்காரே... சாயிபாபா... அவருதான் கொடுத்தாருங்க...’’ என்றான்.
அதிர்ந்து போனார்கள் அனைவரும்.
- அருள்வார்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT