Published : 06 Dec 2017 03:13 PM
Last Updated : 06 Dec 2017 03:13 PM
காவிரிப்பூம்பட்டினத்து வணிகர் அரதனகுத்தனின் மகள் ரத்னாவதி, உண்மையிலேயே புண்ணியம் செய்தவள்தான். பாக்கியசாலிதான். பின்னே... உலகையே ஆளும் சிவனாருக்கு அருமையான பெயரைப் பெற்றுத் தந்தவளாயிற்றே இவள். ஆமாம்... இவளால்தான் ஈசனுக்கு இன்னொரு திருநாமம் வந்தது. அது... தாயுமானவ சுவாமி.
ரத்னாவதியை, திருச்சியில் வாழ்ந்த தனகுத்தனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். ரத்னாவதியின் தந்தை இறந்துவிட, கர்ப்பிணியான ரத்னாவதிக்குப் பேறு காலம் நெருங்கியது. அவளுக்கு உதவ காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து அவளின் தாயார் புறப்பட்டார்.
அப்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அவளின் அம்மா கலங்கிப் போனாள். ‘எம் பொண்ணுக்குத் துணையா பக்கத்துல இருக்கமுடியலியே...’ என்று தவித்தாள். ரத்னாவதியோ பிரசவ வலியால் துடித்தாள். ‘அம்மா இன்னும் வரலையே!’ என வருந்திய அவள், ஈசனைத் தொழுதாள்.
அந்தத் தருணத்தில்தான்... சரியான நேரத்தில் ஈசனே தாய் வடிவில் வந்து, வேண்டிய உதவிகளைச் செய்தார். வெள்ளம் வடிந்ததும் ரத்னாவதியின் அம்மா ஓடோடி வந்தார். அங்கு, தன்னைப் போலவே தன் உருவ அமைப்புடன் பெண்மணி ஒருவர், மகளுக்கு உதவுவதை அறிந்து வியந்தார்!
இந்த இருவரில் தன் உண்மையான தாய் யாரென்று அறிய முடியாமல் குழம்பினாள் மகள். அப்போது பேறு காலத்தில் உதவிக்கு வந்த தாய் மறைந்து ரிஷப வாகனத்தில், மட்டுவார் குழலம்மையுடன் செவ்வந்தி நாதராக காட்சி தந்தார் சிவனார்.
ரத்னாவதியும் அவள் தாயாரும் ஈசனை தொழுது வணங்கினர். அன்று முதல் சீராப்பள்ளி என்றும் திரிசிராமலை ஸ்ரீசெவ்வந்தி நாதருக்குத் தாயுமானவர் எனும் திருப்பெயர் அமைந்தது.
அவரை வழிபட்ட ரத்னாவதி, தனி அடியார்களுள் ஒருவராகத் திகழ்கிறார். இந்த நிகழ்வுகளை விளக்கும் சித்திரங்கள் கோயிலின் சித்திர மண்டப திருச்சுற்றிலும், மேல் விதானத்திலும் இன்றைக்கும் இடம்பெற்றுள்ளன..
அம்மையாகவும் அப்பனாகவும் சிவன் குடிகொண்டிருக்கும் தலம்... திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி, உச்சிப்பிள்ளையார் கோயில். இங்கு தன்னை நாடிவருவோரை, தாயாக இருந்து காத்தருள்கிறார் தாயுமானவ சுவாமி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT