Last Updated : 28 Dec, 2017 02:25 PM

 

Published : 28 Dec 2017 02:25 PM
Last Updated : 28 Dec 2017 02:25 PM

அரங்கனின் திருவடி! - வைகுண்ட ஏகாதசி விரதம்!

அன்னையை விட சிறந்த தெய்வம் இல்லை. காயத்ரியை விட சிறந்த மந்திரம் இல்லை. ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை என்பார்கள். மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் உன்னதமானது. நாளை 29.12.17 வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நன்னாள்!

திருமங்கையாழ்வார், இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்ஸவமாகக் கொண்டாடப் பணித்தார் என்கின்றன புராணங்கள். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் நாள் என்று அர்த்தம். அதாவது, ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் ஐந்து. மனம் ஒன்று என பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி, தியானித்து, பக்தி செலுத்துகிற திருநாள்தான் இந்த ஏகாதசி விரதம் என்கிறார் மதுரை அழகர்கோவில் ஸ்தானீக அர்ச்சகர் அம்பி பட்டர்.

உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம் எனப்படும் விரதம்! இந்த வைகுண்ட ஏகாதியை முன்னிட்டுதான் பகல்பத்து உத்ஸவ விழாக்களும் சிறப்பு பூஜைகளும் விசேஷமாக நடைபெற்று வருகின்றன.

இப்படித்தான் விரதம்!

தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபனாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரத நாளில், சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும் என்பது ஐதீகம்!

குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். குளிர்ந்த மாதமான மார்கழி மாதம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும் என்று முன்னோர் சொல்லிவைத்திருக்கின்றனர். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை இன்னும் சுத்தமாக்குகிறது.

இறந்தால் முக்தி!

வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும் என்கிறது புராணம். ஏகாதசி திதியில் முழுமையாகவே திறந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லோரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று இறந்து போனவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பது ஐதீகம்.

எனவே இந்த நாளில் இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில், திருவடியைப் பற்றிக் கொண்டுவிட்டார் . வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய அன்பான, வஞ்சனையற்ற குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர்கள் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x