Published : 10 Jul 2014 10:19 AM
Last Updated : 10 Jul 2014 10:19 AM
திருநெல்வேலியிலுள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆனித் தேரோட்டம் பக்தர்களின் அரகர மகாதேவா ஓம் நமச்சிவாய என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன் வெகு விமரிசையாக இன்று நடைபெறுகிறது. இதற்காகக் கோவிலின் நான்கு ரதவீதிகள் திருவிழாக் கோலம் கொள் கின்றன. வீதிகளுடன் சேர்ந்தே திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்மக்களின் உள்ளங்களும் விழாக்கோலம் பூணுகின்றன.
எல்லாக் கோவில்களிலும் கொடிநிலை உண்டு. அரசனுடைய ஆற்றலுக்கு அடையாளமாகக் கொடி அமைவது போல சிவபெருமானுடைய ரிஷபக்கொடியும் அவருடைய அருளாற்றலை உணர்த்துவதாகும். மக்கள் நன்றாக வாழ வேண்டுமென்று வேண்டப்படுகிறது. கொடியில் ரிஷபம் தர்ம உருவமாகவும், ஆத்மாவின் உருவமாகவும் மதிக்கப்படுகிறது.
புற்றுமண் எடுத்தலும், முளையிடுதலும், கொடியேற்றுதலும் சிருஷ்டி அல்லது படைத்தல் தொழிலை உணர்த்துகின்றன. வாகன உற்சவங்கள், யாகம், பலியிடுதல் முதலியன காத்தல் தொழிலைக் குறிக்கும். தேர்த் திருவிழா, பரிவேட்டை, சாந்தணிதல் முதலியன சம்ஹாரம் அல்லது அழித்தல் தொழிலை உணர்த்துகின்றன. சத்தமிடாமல் மௌனமாக நடத்தும் திருவிழா, திரோபவத்தை (மறைத்தலை) குறிக்கும்.
நடராஜர் உற்சவம், மட்டையடி, முதலியன அனுக்கிரகத்தைக் குறிக்கும். பத்து நாள் திருவிழாக்களில் முலலைந்து நாள் விருத்திக் கிரம ஐந்தொழில்கள் நடக்கின்றன. பிற்பகுதி ஐந்து நாள் லயக்கிரம ஐந்தொழில்கள் நடக்கின்றன. இதற்குத் தக்கபடி வாகனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
முளைப்பாலிகை (முளைப்பாரி):
முளைப்பாலிகை எடுத்தல் என்பது தமிழர்க்குப் புதிதன்று. நல்ல மழை பொழிந்து விளைச்சல் பெருக வேண்டும் என்பது கருதி எடுப்பதாகும். முளைப்பாலிகை எடுக்கும் நாளில் வீடு வாசல் சுத்தம் செய்து கழுவிவிடுவர். நெல், பயறு வகைகள் முதலியவற்றை சட்டி, பாத்திரங்களில் போட்டு அவை முளைவிட்டதும் இரவில் சுமங்கலிகள் ஊர்வலமாக அவற்றை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் விட்டுவருவர்.
கொடியேற்றம் (துவஜாரோகணம்):
கொடியில் ரிஷபத்தையும், அஸ்திரதேவரையும் வரைந்து முறைப்படி செய்து கொடியேற்றுகின்றனர். ஆத்மாக்களையும், தர்மத்தை யும் கீழ் நிலையிலிருந்து உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் இறைவனின் கருணைத் திறம் இவ்விழாவில் விளக்கப்படுகிறது. இங்கு உயிர்ப்பலி இல்லை, இது காத்தல் தொழிலின் அடையாளமாகும். பொது வகையில் உயிர்களுக்கு அருள்புரியும் இறைவன், சிறப்பு வகையில் அருள்புரிய இப்பத்து நாளும் ஆயத்தமாகக் காத்திருக்கிறான் என்பதை இக்கொடி உணர்த்துகிறது.
பத்து நாள்களில் இரண்டு பகுதிகளாக நடத்தப்படும் ஐந்தொழில்களையும் பத்தாந்திருநாளில் ஒரே நாளில் தொகுத்துக் காட்டப்படுகிறது. இறையின்ப அனுபவத்தில் ஆன்மாக்கள் முற்றும் ஆழ்ந்து ஆனந்திருப்பதைத் தீர்த்தவாரி குறிப்பிடுகின்றது. இதனை மகாருத்ரபாத தீர்த்தம் என்பர். இதற்குப்பின் சண்டேசானுக்கிரக உற்சவமும், கொடியிறக்கமும் நிகழ்ந்து விழாக்கள் முடிவுறும்.
ஆனிப் பெருவிழா:
இம்மாதத்தில் தான் பிரம்மோற்சவம் எனப்படும் பெருவிழா நடைபெறுகிறது. முதலில் கோவிலுக்கு வெளியே வடக்கு மூலையில் உள்ள பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்று பத்து நாள் விழா நடைபெறுகிறது. பிறகு விநாயகர் கோவிலில் மணிமண்டபத்துக்கு முன் கொடியேற்றம் செய்யப்பட்டு 5½ நாள் விழா நடக்கிறது. முதல் மூலவர்க்கும் 6½ நாள். பிறகு சந்திரசேகரர்க்குத் திருவிழா 7½ நாள் நடக்கிறது. இவ்வாறு விநாயகர், முதல் மூவர், சந்திரசேகரர்க்குத் திருவிழாக்கள் முதலில் நடைபெற்ற பின்னரே, ஆனித் திருவிழா ஆரம்பமாகிறது. எனவே 45 நாட்கள் நடைபெறும்
நெல்லையின் பெருவிழா:
மகநட்சத்திரத்தில் கொடியேற்றம் நடைபெறு கிறது. அன்றிரவு இறைவனும் இறைவியும் பூங்கோவில் சப்பரத்தில் வீதியுலா வருகின்றனர். எல்லாவற்றையும் அடைத்துவரும் சப்பரம் அனைவருக்கும் அனுக்கிரகம் அளிப்பது எனும் குறிப்புடையது.
வாகனங்கள்:
2-ம் நாள் காலை மாலை வெள்ளிச் சப்பரத்தில் வீதியுலா முறையே கற்பக விருட்சம், கமலவாகனம், 3ஆம் நாள் காலை இரவு கமல வாகனம் பூத, சிம்ம வாகனம், 4-ம் நாள் காலை இரவு குதிரை, காமதேனு இடபவாகனம், 5-ம் நாள் காலை இரவு ரிஷபவாகனம், இந்திரவாகனம், 6-ம் நாள் காலை இரவு ஆனை அன்னவாகனம், 7-ம் நாள் காலை இரவு பல்லக்கு குதிரை, காமதேனு நடராசர் சப்பரத்தில் வீதியுலா, 8-ம் நாள் காலை மாலை நடராசர் பச்சைசாத்தி வீதியுலா சப்பரம் இறைவனும், இறைவியும் பல்லக்கில் கோவிலுக்குள் உலா கங்காள நாதர் - பிச்சைக்காக வீதியுலா, 9-ம் நாள் காலையும் இரவும் தேர்த் திருவிழா, சத்தாபரணத்தில் வீதியுலா இறைவியைப் பாலகிருஷ்ணன் வேடத்தில் அலங்காரம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.10-ம் நாள் காலை தந்தப் பல்லக்கில் ரதவீதி சுற்றி சிந்துபூந்துறைக்குத் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நடக்கிறது.
சாதி, மத பேதமின்றி குழந்தைகளும், பெண்களும், இளைஞர்களும், பெரியவர்களும் உற்சாகமாகக் கூடித் திரளும் திருவிழாவாக ஆனித் தேரோட்டம் ஐநூறு ஆண்டுகளைத் தாண்டி கொண்டாடப்பட்டு வருகிறது. சமய முக்கியத்துவம் மட்டுமின்றி கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இது இருக்கிறது. திருநெல்வேலியின் அடையாளங்களில் ஆனித் தேர்த் திருவிழாவும் ஒன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT