Published : 01 Dec 2017 12:27 PM
Last Updated : 01 Dec 2017 12:27 PM
கார்த்திகை தீப நன்னாளில், கோயில்களில் தீபமேற்றுவார்கள். வீட்டு பூஜையறை துவங்கி, வாசல், மாடிப்படிப் பகுதிகள், என வரிசைக் கட்டி தீப ஒளி ஜொலிப்பதே பேரழகு. இப்படி வீடும் கோயிலும் ஒளிமயமானதாக இருக்க... தெருவில் சிறுவர்களும் சிறுமிகளும் மாவளி சுற்றி விளையாடுவார்கள். இதிலென்ன ஆச்சரியம் தெரியுமா... இந்த மாவளியிலிருந்தும் வட்டமாக ஒளிச் சுடர் பிரகாசித்துச் சுற்றும்.
நீங்கள், உங்கள் சிறுவயதில் மாவளி சுற்றியிருக்கிறீர்களா?
கார்த்திகைத் தீப நாளில் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும், ஞாபகம் இருக்கிறதுதானே? இன்றைக்கு உள்ள சிறுவர்களுக்கு இந்த விளையாட்டெல்லாம் தெரியாது. அதாவது, பனம் பூளையை அதாவது, பனம் பூக்கள் மலரும் காம்பு. இதை நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள்.
பிறகு, அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டிக் கட்டுவார்கள். அடுத்து, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவார்கள். . பிறகு அதை உறியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள்.
இதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடினால் எப்படி இருக்குமோ... அப்படியாகக் காட்சி தரும்.
அப்போது மாவளியோ மாவளி என்று சத்தமிடுவர் சிறுவர்களும் சிறுமிகளும்!
வீடு, கோயில். வீதி என எல்லா இடங்களிலும் ஒளி வடிவில் நீக்கமற நிறைந்து, ஈசன் அருள்கிறான் என்பதாக ஐதீகம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT