Published : 22 Dec 2017 04:22 PM
Last Updated : 22 Dec 2017 04:22 PM
திருவாடானை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது திருவெற்றியூர். இந்த ஊருக்கு அருகில் உள்ளது திருவாடானை. காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக, திருவாடானையை அடையலாம். மதுரையில் இருந்து சிவகங்கை, காளையார்கோவில் வழியாகவும் திருவாடானைக்குச் செல்லலாம். இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெற்றியூர். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட ஆலயம் இது.
இந்தத் தலத்தின் வாசுகி தீர்த்தமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏதேனும் விஷக்கடியில் அவதிப்பட்டு நடக்க முடியாமல் சிரமப்படுபவர்களை இங்கே அழைத்து வந்து, வாசுகி தீர்த்தத்தில் நீராடச் செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் படுக்க வைக்கின்றனர். பிறகு, அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள... விஷக் கடியில் இருந்து விரைவில் நிவாரணம் பெறுவர் என்பது ஐதீகம்!
சித்திரை மாதத்தின் பிரம்மோத்ஸவம், ஆடி மற்றும் தை மாத வெள்ளிக் கிழமைகளில், கோயிலில் கூட்டம் களைகட்டும்! ஆடியின் கடைசி திங்களன்று, நள்ளிரவில் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது பூச்சொரிதல் விழா. அப்போது, ஸ்ரீபாகம்பிரியாளைத் தரிசித்தால், வீட்டில் செல்வம் பெருகும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
மனசுக்கு நிறைவான, அன்பும் பண்புமாகத் திகழ்பவர் கணவராக அமைந்தால்தானே, புகுந்த வீட்டில் ஒரு பெண், நிம்மதியும் சந்தோஷமுமாக வாழமுடியும்? உடலின் சரி பாதியைத் தந்த கணவர் அமையப்பெற்ற தேவியை... ஒரு பொழுதும் கணவரைப் பிரியாத மனம் கொண்ட அம்பிகையை... ஸ்ரீபாகம்பிரியாளை, தரிசித்து வணங்கினால், நல்ல கணவரைக் கிடைக்கப் பெறுவீர்கள், பெண்களே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT