Last Updated : 11 Dec, 2017 08:41 AM

 

Published : 11 Dec 2017 08:41 AM
Last Updated : 11 Dec 2017 08:41 AM

சுவாமி சரணம் 25: பிரம்மா எடுத்த முடிவு!

அந்த ஆசாமிக்கு முன்னே கடவுள் வந்து நின்றார். ‘என்ன வரம் வேண்டுமோ கேள். ஆனால் ஒருவிஷயம்... ஒரேயொரு வரம்தான் கேட்கவேண்டும்’ என்றார்.

அதைக் கேட்டு ஆடிப்போய்விட்டான் அவன். அவனுக்கு நான்கைந்து ஆசைகள் இருந்தன. ஆனால் ஒரேயொரு வரம்தான் தருவேன் என்கிறாரே கடவுள் என்று வருந்தினான்.

நல்ல, அழகான மனைவி அமைய வேண்டும் என்பது அவனுடைய ஆசை. முதல் ஆசை. வறுமையில்லாமல், வசதி வாய்ப்புகளுடன் வீடு பங்களா என்று சொத்துகளுடன் வாழ ஆசைப்பட்டான். இது அவனுடைய இரண்டாவது ஆசை.

அழகான மனைவி இருந்துவிட்டால் போதுமா. வீடுவாசல் என்று சொந்தமாக இருப்பது மட்டுமே போதுமா. குழந்தைகள் வேண்டுமே. ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரண்டு குழந்தைகள் இருந்தால்தானே வீடு கலகலவென இருக்கும் என்று ஆசைப்பட்டான். ஆனால் ஒரு வரம்தான் தருவேன் என்கிறார் கடவுள்.

திகைத்துப் போனான். திகைத்தபடி யோசித்தான். சட்டென்று முகம் மலர்ந்தான். ‘சரி சாமீ... நீங்க ஒரேயொரு வரம் கொடுத்தாப் போதும்’ என்றான். கேள் என்றார் கடவுள்.

அவன் சொன்னான்... ‘‘என் அழகான மனைவி, கழுத்துகொள்ளாத நகைகளுடன் இருக்க... என் வீட்டின் நான்காவது மாடியில் நானும் அவளும் நின்றுகொண்டு, என் மகனும் மகளும் வாசலில், என்னுடைய சொந்தக் காரில், பள்ளிக்குக் கிளம்பிச் செல்வதைப் பார்க்கவேண்டும். இந்த ஒரு வரம் மட்டும் போதும் சாமீ’’

அதைக் கேட்டு, அவனுடைய சாமர்த்தியத்தைக் கண்டு, கடவுளே கிறுகிறுத்துதான் போனார் என்றொரு கதையை விளையாட்டாகச் சொல்வார்கள்.

இன்னொரு கதையையும் சொல்வார்கள்.

யாரோ ஒரு பிரபலம் என்பதாக நினைவு. ‘கடவுள் உங்கள் முன் வந்து நின்று, ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டால்... என்ன கேட்பீர்கள் என்று கேள்வி.

அதற்கு அவர்... ‘‘கடவுள் நம் எதிரில் நின்று காட்சி தருவதே மிகப்பெரிய வரம். இதைவிட மிகச்சிறந்த வரம் இருக்கிறதா என்ன?’ என்று பதில் அளித்ததாகப் படித்திருக்கிறேன்.

மகிஷி கேட்டது முதல் ஆசாமி கேட்ட வரம் போல! மகிஷி எனும் அரக்கி கேட்ட வரமும் இப்படியான தெளிவுடன் சாமர்த்தியமாகக் கேட்கப்பட்டதுதான்!

சாகாவரம் இல்லையென்று ஆகிவிட்டது. அப்படியெல்லாம் தரமுடியாது என்று பிரம்மா சொல்லிவிட்டார். அடுத்து யோசித்தவள் பிரம்மாவிடம் கேட்டாள்.

‘‘என்னை பஞ்சபூதங்கள் கொல்லக் கூடாது. தேவர்களாலும், என்னைப் போலான அசுரர்களாலும், கந்தர்வர்களாலும், தேவதை சக்திகளாலும், மிருகங்களாலும் நான் கொல்லப்படக்கூடாது. பறவைகளோ நாகங்களோ என்னை கொல்லக் கூடாது. இவற்றாலெல்லாம் எனக்கு மரணம் நிகழக்கூடாது’’ என்றாள்.

உடனே பிரம்மா... ‘‘கிட்டத்தட்ட ஒருவகையில் இதுவும் சாகாவரம் போலத்தான். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற விதமாக, இப்படிப் பட்டியலிட்டு, இவைகளெல்லாம், இவர்களெல்லாம் கொல்லக் கூடாது எனக் கேட்கிறாய். சரி... உன்னை யார் கொல்லவேண்டும். அதையும் சொல்லிவிடு’’ என்றார்.

‘‘மகாவிஷ்ணு காக்கும் கடவுள். சிவபெருமான் அழிக்கும் தெய்வம். காக்கும் கடவுளும் அழிக்கும் கடவுளும் இணைந்து கலந்து பிறக்கும் புத்திரனால் மட்டுமே எனக்கு அழிவு வேண்டும். இவனே என்னை அழிக்கும் வலிமை கொண்டவனாக இருக்கவேண்டும். மகாவிஷ்ணுவுக்கும் சிவபெருமானுக்குமாகப் பிறக்கிறவன், மானுடனாகப் பூமியில் பிறந்திருக்கவேண்டும். குறைந்தது, 12 வருடங்களாவது பிரம்மச்சர்யத்துடன் வாழ்ந்தவனாக இருக்கவேண்டும். இந்த வரம் கொடுங்கள் எனக்கு. இந்த வரத்துக்காகத்தான் தவமிருந்தேன், இத்தனைக் காலமும்!’’ என்று சொல்லிவிட்டு, செருக்குடன் கர்வத்துடன் கிடுக்கிப்பிடியான வரம் கேட்ட ஆணவத்துடன் பிரம்மாவைப் பார்த்தாள்.

வேறுவழியில்லாமல், பிரம்மாவும் அந்த வரத்தை அரக்கிக்குக் கொடுத்தார்.

மகிஷிக்கோ மனம் கொள்ளாத மகிழ்ச்சி. எல்லையே இல்லாத பேரானந்தம். ஆணும் ஆணும் சேர்வது எப்படிச் சாத்தியம். ஆணும் ஆணும் சேர்ந்து குழந்தை பிறப்பது எவ்விதம் நிகழும்? அரக்க இனத்தைச் சேர்ந்த என்னை, கேவலம் மானுடன் எப்படி அழிக்கமுடியும்? அதிலும் 12 வயது என்பது பால பருவம். சின்னப் பையன். ஒரு பொடிப்பயல் எப்படி என்னை வீழ்த்தமுடியும்?

தன் புத்திசாலித்தனத்தை தானே மெச்சிக் கொண்டாள். தன் சாமர்த்தியத்தை நினைத்து கர்வப்பட்டுக் கொண்டாள். ‘இனி என்னை வெல்லும் சக்தி, எவருக்கும் இல்லை’ என்று இன்னும் திமிருடன் நெஞ்சு நிமிர்த்தி நின்றாள். இந்த உலகையே ஒருபுழுவெனப் பார்த்தாள். உலகை அழிப்பதும் உலகத்தாரை அழிப்பதும் மட்டுமே என் வேலை என்று கண்களில் வன்மத்துடன் உக்கிரத்துடன் திரிந்தாள்.

மகிஷியின் ஆட்டம் இன்னும் வேகமெடுத்தது. அவளின் அட்டூழியம் பன்மடங்காகப் பெருகியது. தேவர்களை அழிக்கப் புறப்பட்டாள். வழியில் தென்படுகிற முனிவர்களை வதைத்தாள். ஞானிகளின் தவத்தையெல்லாம் கலைத்தாள். காட்டுக்குள் இருந்த மிருகங்களே நடுங்கின. காடு எது நாடு எது என்று திக்குத்திசை தெரியாமல் அலைந்தன. காட்டில் இருந்து நாட்டுக்குள் புகுந்து மறைந்து கொண்டன.

மனிதர்களின் நிலை இன்னும் மோசம். பரிதாபம். கண்ணில் படுகிற மனிதர்களையெல்லாம் கண்மண் தெரியாமல் தாக்கினாள். தலைதெறிக்க ஓடினார்கள் மக்கள். சொந்தம் ஒருபக்கம் இவர்கள் ஒருபக்கம் என்று ஓடினார்கள். காடுகழனியெல்லாம் விட்டுவிட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.

வீடு விட்டு ஓடினார்கள். ஆசை ஆசையாக வளர்த்த ஆடுகோழிகளைத் துறந்து ஓடினார்கள். விவசாயத்துக்குப் பயன்படுத்துகிற மாடுகளையும் பால் தர வளர்த்த பசுக்களையும் பயணத்துக்கு வண்டியில் இணைக்கப் பயன்படுகிற மாடுகளையெல்லாம் விட்டு எங்கோ ஓடினார்கள். காட்டுக்குள் ஓடினார்கள். தஞ்சம் புகுந்தார்கள். தலைமறைவாய் வாழ்ந்தார்கள். வாழ்ந்தால் போதும் என்று வாழ்ந்தார்கள். உயிருடன் இருப்பதே போதும் என்று இருந்தார்கள். காட்டில் கிடைக்கும் இலைதழைகளை, காய்கனிகளைச் சாப்பிட்டு வாழ்ந்தார்கள்.

தேவர்கள் எல்லோரும் கூடினார்கள். பிறகு முனிவர்கள் அனைவரும் கூடினார்கள். ஞானிகள் ஒன்றாகச் சேர்ந்தார்கள். மக்கள் அங்கங்கே குழுவாகக் கூடிப் புலம்பினார்கள். பிறகு மக்களும் ஞானிகளும் முனிவர்களும் சந்தித்துக் கொண்டார்கள். அவரவரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டார்கள். எல்லோரும் சேர்ந்து தேவர்களைப் பார்த்தார்கள். கூடிப் பேசினார்கள். கொடுமைகளை விவரித்தார்கள். கொடுமைக்கு முடிவு கட்டவேண்டும் என்று ஆக்ரோஷமானார்கள். அழுதார்கள்.

எல்லோரும் சென்று பிரம்மாவைச் சந்திப்பது என்று அந்தக் கூட்டத்தில் ஏகமனதுடன் முடிவு செய்யப்பட்டது. படைத்தவரே பொறுப்பு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. படைத்தவரே, அழிப்பதற்கான வரம் கொடுத்தது என்ன நியாயம் என்று கேட்பது என உறுதிகொண்டனர்.

அங்கே... ஐயப்ப அவதாரத்துக்கான தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. மணிகண்ட சுவாமி பூமியில் தவழும் வேளை வந்துவிட்டது என்பதாக சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

இங்கே... பிரம்மாவிடம் சென்றனர். வணங்கினர். எல்லாக் குறைகளையும் சொல்லி முறையிட்டனர். அழுதனர். கதறினர். கண்ணீர்விட்டனர்.

ஒரு தேசம் கதறுவதை, கண்ணீர் விடுவதை, கண்ணீர்விட்டு அழுவதை, துடித்துக் கலங்குவதை எந்தத் தெய்வமும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்துவிடுவதில்லை.

பிரம்மா ஒரு முடிவுக்கு வந்தார். சிவனாரையும் மகாவிஷ்ணுவையும் சந்திப்பது எனத் தீர்மானித்தார்.

- ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x