Published : 27 Dec 2017 03:40 PM
Last Updated : 27 Dec 2017 03:40 PM
திருநாடு என்று வைகுண்டத்தைப் போற்றுவார்கள். அந்தத் திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவார்கள். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், தூக்கம் என்று எந்த உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கித் திளைப்பார்களாம்!
அவர்கள், பரசவநிலையில் பெருமாளைப் புகழ்ந்து ஆடுவார்கள். பாடுவார்கள். ஆடிப்பாடுவார்கள். இந்தக் காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்று நாதமுனிகள் மிகுந்த ஆர்வம் கொண்டார்.
அரையர் எனும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. காண்போரை, பக்திப் பரவசத்தில் ஆழ்த்தக் கூடியது.
வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் பகல்பத்து ராப்பத்து உத்ஸவங்களும் விழாக்களும் விமரிசையாக இதோ... துவங்கிவிட்டன. இந்த வேளையில், அரையர் சேவையில் பெருமாளை சேவிக்க காணக் கண் கோடி வேண்டும்.
அரையர் சேவைக்கு என தனி உடையோ அலங்காரங்களோ எதுவுமில்லை. கூம்பு வடிவ தொப்பி ஒன்றை தலையில் அணிந்து கொள்வார்கள். பெருமாளுக்கு சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் ஆகியவற்றை மட்டும் அணிந்து கொண்டு அபிநயம் செய்வார்கள். நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளே இந்தச் சேவையைத் தொடங்கிவைத்தார். பாசுரங்களைப் பாடும்போது, அதற்கேற்ப முகம், கை முதலான பாவங்களைக் காட்டி நடிப்பார்கள். பக்தர்கள் இதில் சிலிர்த்துப் போவார்கள்.
அரையர் சேவையில் முத்துக்குறி எனும் பகுதி ஒன்று உண்டு. குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. இதைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவதைப் பார்த்து மெய்ம்மறந்து விடுவார்கள் பக்தர்கள்!
தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்கள் (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்கள் என்றும் சொல்வார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி தவிர ஆடி, தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும் அரையர் சேவை இன்றைக்கும் நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT