Published : 13 Dec 2017 08:13 AM
Last Updated : 13 Dec 2017 08:13 AM
உங்கள் எதிரியை என்று யாரென்று கேட்டால்... என்ன சொல்வீர்கள். வேண்டாதவரைச் சொல்லுவோம். பிடிக்காதவரைச் சொல்லுவோ. ஒருகாலத்தில் பிடித்திருந்து, இப்போது பிடிக்காது போனவர்களைப் பட்டியலிடுவோம். அவர்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்போம். அவர்களின் மகிழ்ச்சி, இன்னும் இம்சை பண்ணும். அவர்கள் வீழ்ச்சியோ, நம்மை மகிழ்ச்சிப்படுத்தும்.
அவதூறுப் பரப்பியவர்களையும் நம் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டு, சூழ்ச்சி செய்பவர்களையும் கேட்ட போது உதவி செய்யாதவர்களையும் உதவி செய்ததை, நன்றியுடன் நினைத்துப் பார்க்காதவர்களையும் எதிரிகள் பட்டியலில் சேர்த்துக் கொண்டு, சிக்கிக் கொள்கிறோம். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் இன்னும் ஆவேசம் கொள்கிறோம்.
இப்படி யார்யாரையோ எதிரி என்று சொல்லிக்கொண்டு நாம் ஏமாந்து போகிறோம் என்பதே உண்மை. கோபம்தான் உண்மையான எதிரி. கோபமே, நம் புத்தியை, செயலை மழுங்கடிக்கிறது. புத்தியில் தெளிவும் நிதானமும் இல்லையெனில், செயலில் வேகம் இருக்காது. செயல் வேகம் இல்லாது போனால், காரியத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுவிடும். காரியத் தடைகள், இன்னும் செயலிழக்கச் செய்துவிடும்.
கோபம் பற்றிச் சொல்லும்போது, துர்வாச முனிவரே சட்டென்று நினைவுக்கு வந்துவிடுவார். கடும் தபஸ்வி. அவரால் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, எத்தனை நாளானாலும், மாதமானாலும் வருடங்கள் கடந்தாலும் தபஸ் செய்யமுடியும். மனதை ஒருநிலைப்படுத்தி, கடவுளை நோக்கிச் செலுத்தமுடியும். உண்ணாமல், உறங்காமல், எவருடனும் பேசாமல், எதையும் பார்க்காமல், அமர்ந்தது அமர்ந்தபடி, மூடிய கண்கள் மூடியபடி, தவத்தில் இருக்க முடியும். இந்தப் பாழாய்ப் போன கோபம்தான் பொசுக்பொசுக்கென வந்துவிடும் அவருக்கு!
அவருக்குப் பிடிக்காத எந்தவொரு செயலை, எவரொருவர் செய்தாலும் அவ்வளவுதான்... ருத்ரதாண்டவம் ஆடிவிடுவார். கண்களில் உக்கிரம் பொங்க, வார்த்தைகளிலும் ரௌத்திரம் வழியும். ‘இந்தா... வைச்சுக்கோ’ என்று சட்சட்டென்று சாபத்தைக் கொடுத்துவிடுவார். மூக்குக்கு மேல் கோபம் வருதுப்பா... என்று சொல்லுவோமே. இவருக்கு மூக்கு, காது, நெற்றி, தலை என்று கோபம் பீரிட்டுக் கிளம்பிவிடும். அவனுக்கு உடம்பெல்லாம் மூளை என்று சொல்லுவோம்தானே. துர்வாசருக்கு உடம்பெல்லாம் கோபம்... கோபம்... கோபம்!
ஒருமுறை... இந்திரனும் தேவர்களும் செய்த செயல் இவருக்குப் பிடிக்கவில்லை. கோபமூட்டியது. கோபத்தில் பூமிக்கும் வானுக்குமாகக் குதித்தார். ‘இந்தா... வைச்சுக்கோ...’ என்று இந்திராதி தேவர்களுக்குச் சாபத்தைக் கொடுத்தார்.
அவ்வளவுதான். இந்திரன் தன் அழகை இழந்தான். பொலிவை இழந்தான். அவனுடைய தேஜஸ் காணாதுபோனது. வலிமை குன்றிப்போனான். வலுவிழந்து துவண்டுபோனான். இந்திரன் மட்டுமா... அவனைச் சுற்றியிருந்த, அவனுடைய தேவர்களும் அழகையும் பொலிவையும் தேஜஸையும் வலிமையையும் இழந்து நின்றார்கள்.
இந்திரலோகமே களையிழந்திருந்தது. மொத்த அழகையும் பறிகொடுத்து, பரிதாபமாக காட்சி தந்தது. வீட்டின் அழகு என்பது அலங்காரங்களைக் கொண்டு மெருகேறுவது அல்ல. வீட்டில் இருக்கும் மனிதர்களைக் கொண்டு, அவர்களின் மனங்களை வைத்து, அந்த மனங்களில் உதிக்கின்ற எண்ணங்களின் மூலமாகவே அவர்கள் அழகிய முகங்களைப் பெறுகிறார்கள். அவர்களின் சிந்தனையால், சுற்றுச் சூழலும் பொலிவைப் பெறுகிறது. அவர்கள் குடியிருக்கும் இடம் கூட மெருகேறி, அழகாகிவிடுகிறது.
ஆனால் இந்திராதி தேவர்களின் எண்ணங்கள் நன்றாக இருந்தும் கூட, துர்வாச முனிவர் இட்ட சாபத்தால், மொத்தமும் கையைவிட்டுப் போனது. இழந்ததை மீட்டெடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் கைபிசைந்து தவித்தார்கள்.
புதிதாக ஒன்றைப் பெறுவது சாதாரணம். மிகவும் எளிது. சட்டென்று கடைக்குப் போனோமா, வாங்கினோமா என்று வாங்கிவிடலாம். ஆனால் இருந்ததை இழப்பது கொடுமை. இழந்ததை மீட்டெடுப்பது சுலபம் அல்ல.
பணம் வந்ததும் நகை வாங்கியிருப்போம். ஓர் அவசரத் தேவைக்கு நகையை அடகு வைத்திருப்போம். ஆனால் அந்த நகையை மீட்பதுதான் பெரும்சவாலாக இருக்கும். அதையடுத்து ஒவ்வொரு செலவாய் வந்துவிட, அங்கே நகைக்கடையில் நகைக்கான வட்டி, வளர்ந்துகொண்டே இருக்க... நகையை மீட்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். மீட்க வழி தெரியாமல் அல்லாடுவதே இன்னும் நொய்மைப்படுத்திவிடும்.
இங்கே... தேவர்பெருமக்கள், அல்லாடினார்கள். தவித்தார்கள். துடித்தார்கள். துவண்டார்கள். மனம் புழுங்கினார்கள். வழி என்ன... வழி என்ன... என்று யோசித்தார்கள். கூடிகூடிப் பேசிக்கொண்டார்கள். பேசியதை, தனித்து உட்கார்ந்து யோசித்தார்கள். அப்படி யோசனையால் ஏதோவொரு விஷயம் கிடைக்க... மீண்டும் கூடி, ‘இப்படிச் செய்யலாமா... அப்படிச் செய்தால் என்ன...’ என்று விவாதித்துக் கொண்டார்கள்.
இந்த பெரும்யோசனைக்குப் பிறகு, உதித்ததுதான் ‘பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்கும் திட்டம்’. இழந்ததைப் பெற வேண்டுமெனில், பழையபடி பொலிவை அடைய வேண்டும் என்றால், களையிழந்த இந்திரலோகம் மீண்டும் தன் அழகுடன் மிளிர வேண்டும் என்றால்... பாற்கடலைக் கடைய வேண்டும். அப்படிக் கடைவதால் வருகிற அமுதத்தைப் பருக வேண்டும். அந்த அமுதத்தைப் பருகினால், இழந்தவை அனைத்தையுமே பெற்றுவிடலாம்.
தேவாதிதேவர்களுக்கு, தேவர்கள் கூட்டத்துக்கு இந்த யோசனையைச் சொன்னார் மகாவிஷ்ணு. அனைவரும் சந்தோஷமானார்கள். உற்சாகம் அடைந்தார்கள். ஏதோ இழந்ததைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவே நினைத்துப் பூரித்தார்கள். புளகாங்கிதப்பட்டார்கள்.
ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. தேவர்கள், தங்கள் வலிமையை இழந்துவிட்டிருந்த நிலையில், அவர்களால் மட்டுமே பாற்கடலைக் கடைய முடியாது. அத்தனை வலு அவர்களிடம் இல்லை. எனவே அசுரர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வேறு வழியே இல்லை என்றார் திருமால்.
இப்படித்தான் சிலசமயங்களில் நடக்கும். கத்தி என்பது ஆயுதம். ஓர் உயிரையே எடுக்கும் கூர்மை கத்திக்கு உண்டு. ஆயுதங்களுக்கு உண்டு. ஆனாலும் ஆபரேஷனுக்கு சிகிச்சைக்கு கத்தியே மிக முக்கிய உபகரணம். முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்று சொல்வது போல, சாபத்தில் இருந்து மீள, அசுரக்கூட்டத்தின் உதவி. பாற்கடலைக் கடையும் பலம், அசுரர்களிடம் இருக்கிறது. அந்தப் பலத்தைக் கொண்டு, அமுதம் எடுப்பதே சிறந்த வ்ழி. மகாவிஷ்ணு இந்த யோசனையையும் தெரிவித்தார்.
ஆனால் தேவர்களுக்கு வருத்தம். ஓர் கலக்கம். எல்லோருக்கும் குழப்பம். சின்னதான பயம்.
இங்கே இப்படித்தான். எப்போதும் எதற்கெடுத்தாலும் எந்த நிலையிலும் தவித்து மருகுவதே நம்முடைய வழக்கமாக இருக்கிறது. ஓர் நல்ல விஷயத்துக்கு, நல்லவர்களின் துணையும் ஆலோசனையும் இருந்தால் கூட, தயங்கிக் குழம்பி, குழம்பித் தவித்து, மருகிச் செயல்படாமல்தான் போகிறோம்.
இந்திரனும் தேவர்களும் அந்த நிலையில்தான் இருந்தார்கள்.
‘அமுதத்தில் பங்கு கேட்பார்களே அசுரர்கள்’ என்று தங்கள் தவிப்பை மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தார்கள்.
மகாவிஷ்ணு சொன்னார்... ‘அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இது உங்கள் கவலை. என்னுடைய கவலை இது. என்னுடைய செயல் இது. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார்.
கடவுள்... எப்போதும் நம்மைப் பார்த்துக் கொள்கிறார். ஆனால் நாம்தான் கடவுளைப் பார்ப்பதே இல்லை. உணருவதே கிடையாது.
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT