Published : 19 Dec 2017 04:53 PM
Last Updated : 19 Dec 2017 04:53 PM
திருவாடானை வன்மீகநாதரை வணங்கி, புற்று விநாயகரையும் நாகர் சிலைகளையும் வணங்கி வழிபட்டால், நாக தோஷம் உள்ளிட்ட சர்ப்ப தோஷங்களும் களத்திர ஸ்தான தோஷங்களும் விலகும். விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்கின்றனர் பக்தர்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது திருவெற்றியூர். இந்த ஊருக்கு அருகில் உள்ளது திருவாடானை. காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக, திருவாடானையை அடையலாம். மதுரையில் இருந்து சிவகங்கை, காளையார்கோவில் வழியாகவும் திருவாடானைக்குச் செல்லலாம். இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெற்றியூர். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட ஆலயம் இது.
‘வள்ளலெனப் பேரெடுத்த தர்மவான் மகாபலியை அழைத்துக்கொண்டீர்களே... அவரின்றி உலகம் என் செய்யும்? தர்மமின்றி மனிதர்கள் வாழ்வது எங்ஙனம்?’ என தர்மதேவதை, திருமாலின் திருப்பாதத்தில் விழுந்து கதறினாள்; கண்ணீர் சிந்தினாள். அந்தக் கண்ணீர் பட்டு, திருமாலின் பாதங்களில் புற்று உருவானதாம். புற்றே உருவெனக் கொண்ட ஸ்ரீவன்மீகநாதர், திருமாலின் புற்றுநோயைக் குணப்படுத்தி அருளினார் என்று விவரிக்கிறது தல புராணம். இதனால், பழம்புற்றைத் தீர்த்த பழம்புற்றுநாதர் எனும் திருநாமம் ஈசனுக்கு அமைந்ததாகச் சொல்வர்!
இன்றைக்கும், புற்று நோய் மற்றும் தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்தத் தலத்தில் தரப்படும் தீர்த்தம், வேப்பிலை மற்றும் விபூதிப் பிரசாதங்களை உட்கொண்டால், விரைவில் குணமாவார்கள் என்பது ஐதீகம்!
பிராகாரத்தில், அகத்திய முனிவர் வழிபட்ட விநாயகர், அகத்திய விநாயகர் எனும் திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். புற்றடி விநாயகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இங்கே உள்ள புற்றடி விநாயகருக்கு பாலபிஷேகம் செய்து, அருகில் உள்ள நாகர் சிலைகளுக்கு மாங்கல்யம் அணிவித்து வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், நாக தோஷம் நீங்கி நலம் பெறலாம்; களத்திர ஸ்தான தோஷமெல்லாம் விலகும். கல்யாண மாலை கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்!
திருவாடானை மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள், விதை நெல்லை பாகம்பிரியாள் அம்பாளின் திருவடியில் வைத்து வணங்கிய பின்பே, அதை எடுத்து வந்து, தங்களது நிலங்களில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், அறுவடையானதும் முதல் வேலையாக நெல்லைக் கொண்டு வந்து அம்மனுக்குக் காணிக்கையாக்கி நன்றி தெரிவித்து வணங்குகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT