Published : 14 Dec 2017 12:57 PM
Last Updated : 14 Dec 2017 12:57 PM
இனிமையான உலகம்தான் இது. ஆனால் கவலைகளாலேயே சூழப்படுகிற மனோபாவம் எல்லோருக்கும் இருக்கிறது. ‘என்ன செய்றதுன்னே தெரியலை. எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ துக்கம்’ என்று புலம்பாதவர்களே இல்லை.
சரி... உங்களைப் போல் துக்கம் யாருக்குமில்லை. துக்கத்தின் அளவு உங்களுக்குத்தான் அதிகம். அதற்காக என்ன செய்யப்போகிறீர்கள். எதுவுமே செய்யாமல், முடங்கிக் கிடப்பதால், அழுது தீர்ப்பதால், உங்கள் துக்கமெல்லாம் பறந்தோடிவிடும் என்பதாக இருந்தால், தாராளமாக முடங்கியிருங்கள். நன்றாக செளகர்யமாக உட்கார்ந்து கொண்டு ஒருபாட்டம் அழுது முடித்துவிடுங்கள். ஏனென்றால், முடங்கிவிட்டதாலும் அழுவதாலும் துக்கம் போய்விடுமே!
அப்படியெல்லாம் போகாதுதானே. துக்கத்தை விரட்டும் வழி, இக்கட்டில் இருந்து தப்பிக்கும் உபாயம் இன்னும் இன்னும் செயல்படுதல். தேவர்கள் அனைவரும் துக்கத்தின்பால், துடித்துக் கதறிய வேளையில், மகாவிஷ்ணு அவர்களிடம் ‘பாற்கடலைக் கடைவோம்... அமுதெடுப்போம்’ என்றுதான் சொல்கிறார்.
பாற்கடல் அது. அதைக் கடைந்தால்தான் அமிர்தம் கிடைக்கும். அந்த அமிர்தத்தை சாப்பிட்டால்தான், இழந்த பொலிவையும் பலத்தையும் பெறமுடியும். ஆகவே அமிர்தம் எடுங்கள் என அருளினார் திருமால்.
ஆனால், வலுவில்லை. வலுவைத் தரும் அமிர்தத்தைப் பெறுவதற்கான , கடலைக் கடைவதற்கான வலுவே இல்லை. இது இன்னொரு சிக்கல்... அடுத்த பிரச்சினை.
வேறு வழியே இல்லை. இப்போதைக்கு பலம் தேவை. பலம் பொருந்தியவர்கள். அசுரர்களே பலம் மிக்கவர்கள். எனவே அவர்களை துணைக்கு வைத்துக் கொள்வது தவிர, வேறு வழியே இல்லை.
அமிர்தத்தில் பங்கு கேட்பார்களே. சும்மா இருக்க மாட்டார்களே. அப்படி பங்கு கேட்டால், அவர்களும் அமிர்தம் அருந்தினால், இன்னும் பலம் மிக்கவர்களாகிவிடுவார்களே. என்ன செய்வது? இன்னும் குழம்பினார்கள் தேவர்கள்.
‘கவலை வேண்டாம். அவர்களை அழைப்போம். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார் மகாவிஷ்ணு.
அதன்படி அசுரர்கள் அழைக்கப்பட்டார்கள்.
மந்திரமலையே மத்தானது. வாசுகிப் பாம்பு கயிறானது. இந்த பிரமாண்ட மலை மத்தாகி, வாசுகிப் பாம்பு கயிறாகி... அங்கே பாற்கடல் கடையும் பணி தொடங்கியது. தேவர்களும் அசுரர்களும் ஒன்றிணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டார்கள். வாசுகியின் தலைப் பகுதியை அசுரர்கள் பிடித்துக் கொள்ள... வால் பகுதியை தேவர்கள் பிடித்துக் கொண்டு செயல்பட்டார்கள்.
ஆனால் வாசுகியால் முடியவில்லை. மந்திர மலை... உயிரில்லை. ஆகவே அதற்கு எந்தச் சேதாரமும் நிகழவில்லை. ஆனால் வாசுகிப் பாம்பு... உயிரல்லவா. அதைக் கொண்டு அமுதுக்காக கடையக் கடைய... பாவம்... அதற்கு வலித்தது. துடித்தது. வலி பொறுக்க முடியாமல், ஆலகால விஷத்தைக் கக்கியது.
இதைக் கண்டு எல்லோரும் பதறினார்கள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரன், சட்டென்று அந்தக் காரியத்தைச் செய்தார். அதாவது தேவர்களைக் காக்க, அந்த ஆலகால விஷத்தை எடுத்துச் சாப்பிட்டார். தேவர்கள் அனைவரும் தப்பித்தார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடி இருந்தார்கள்.
சும்மா எதுவுமே கிடைத்துவிடுவதில்லை. அப்படிக் கிடைப்பது எதுவுமே நிலைக்கவும் செய்யாது. பிரம்மபிரயத்தனச் செயல்களுக்குப் பிறகு, தன்வந்த்ரி பகவானிடம் அமிர்தக் கலசத்தைக் கண்டார்கள். மகாவிஷ்ணுவின் அம்சம் தன்வந்த்ரி பகவான். ஆயுர்வேத புருஷன். நம் ஆயுளைக் காக்கும் மாமருந்து கொண்ட மகராசன்.
அந்தச் சமயத்தில்தான் யாரும் எதிர்பாராத விதமாக, அது நடந்தது. ‘துன்பம் துரத்தித் துரத்தி அடிக்குதுப்பா’ என்று நாமெல்லாம் சொல்வோம். கிட்டத்தட்ட தேவர்களின் நிலை அப்படித்தான் இருந்தது. ‘அப்பாடா... துன்பத்தில் இருந்து விடுதலை’ என்று நினைக்கும் போதே, அடுத்த துன்பம் அடுத்த துன்பம் என வரிசைகட்டி வந்தது.
ஆமாம்... தன்வந்த்ரி பகவானிடம் இருந்த அமிர்தக் கலசத்தை, அசுரர்கள் வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு ஓடினார்கள். தேவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் புலம்பினார்கள். திருமாலிடம் ஓடிச்சென்று தகவல் சொன்னார்கள். ‘சுவாமி... இப்படி ஆயிருச்சே..’ என்று பொருமித் தள்ளினார்கள்.
நடப்பவற்றையெல்லாம் முன்கூட்டியே அறியாமலா இருப்பார் மகாவிஷ்ணு.
அங்கே... அந்தத் தருணத்தில்... அப்படியொரு வினோதம் நிகழ்ந்தது.
மகாவிஷ்ணு, சர்வ லட்சணங்களும் பேரழகும் கொண்ட பெண்ணாய் மாறினார். அவள்... மோகினி.
எல்லோரும் வியந்து போனார்கள்.
அசுரர்களை வழிக்குக் கொண்டு வர, மகாவிஷ்ணு எடுத்த அஸ்திரம்... மோகினி எனும் அவதாரம்!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT