Published : 07 Dec 2017 10:55 AM
Last Updated : 07 Dec 2017 10:55 AM

தெய்வத்தின் குரல்: வாக்கு வரமா? சாபமா?

த்தனையோ விதமான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனுக்கு மட்டுமே பரமேசுவரன் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். உலகத்தில் அநேக பாஷைகள் இருக்கின்றன. பேச்சிலிருந்து எழுத்து பிறந்து, உலகம் முழுவதும் பல லிபிகளும் இருக்கின்றன. வாக்கை மூலதனமாக வைத்தே எங்கு பார்த்தாலும் பள்ளிக்கூடம், காலேஜ், லைப்ரரி, பத்திரிகைகள் எல்லாம் பரவியிருக்கின்றன.

மிருகங்களின் உலகில் காலேஜ் இல்லை, லைப்ரரி இல்லை, பிரிண்டிங் பிரஸ் இல்லை. அவற்றுக்கு வாக்கு கிடையாது. ஆனால் இவையெல்லாம் இல்லாததால் அவை மனிதனைவிட கஷ்ட நிலையில் இருக்கின்றனவா? அப்படித் தோன்றவில்லை. நமக்கு இருக்குமளவுக்கு அவற்றுக்கு வியாதி இல்லை; அவை சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டு தவிக்கிறதில்லை; நேற்று என்ன செய்தோம்; நாளைக்கு என்ன செய்வோம் என்ற விசாரம் அவற்றுக்கு இல்லை. அவற்றுக்கும் எப்படியோ ஆகாரம் கிடைக்கிறது. ஏதோ விதத்தில் வாழ்ந்து பிழைத்துப் போகின்றன. ஒன்றையொன்று அடித்துச் சாப்பிட்டாலும் எல்லா விலங்கு இனங்களும் விருத்தியாகிக்கொண்டேதானிருக்கின்றன.

அனுக்கிரகமா சுமையா

மனிதப் பிரபஞ்சத்துக்கே வந்தாலும்கூட காலேஜும் லைப்ரரியும், பிரிண்டிங் பிரஸும் இல்லாத ஆதிவாசிகளைப் பார்த்தால் அவர்கள் நம்மைவிட நிம்மதியாகவும் நல்லவர்களாகவும் இருப்பதாகவே தெரிகிறது. ஆப்பிரிக்கக் காடுகளிலும், அமெரிக்காவில் செவ்விந்தியக் காடுகளிலும் காலேஜும் லைப்ரரியும் இல்லாதது போலவே கோர்ட்டுகளையும் காணோம். அதாவது எழுத்தறிவற்ற காட்டுக்குடிகள், நாகரிகமடைந்த நம்போல் இவ்வளவு குற்றம் செய்வதில்லை.

நாகரிகத்தால் எத்தனைக்கெத்தனை செல்வத்தைப் பெருக்கிக் கொண்டோமோ, அத்தனைக்கத்தனை அநவரதமும் அதிருப்திப்படும் மனோபாவமும் பெருகியிருக்கிறது. எத்தனை வந்தும் போதவில்லை. தேவை அதிகமாகவே இருக்கிறது. வாக்கும் எழுத்தும் எல்லாவித அகாரியங்களையும் பரப்புவதிலேயே தடபுடலாகப் பிரயோஜனமாகிவருகின்றன.

படிப்பு முறை, பத்திரிகைகள், புஸ்தகங்கள் எல்லாம் மனிதனுக்கு நிம்மதியும், நிறைவும் தருவதற்குப் பதில் அவனை அதிருப்தியிலும் அகாரியத்திலும் கொண்டுவிடுவதாகவே உள்ளன. மனிதனுக்கு மட்டும் ‘ஸ்பெஷ’லாக ஸ்வாமி தந்திருக்கும் வாக்குச் சக்தி அனுக்கிரகமா, சாபமா என்றே புரியவில்லை.

சித்திரகுப்தனுக்கு வேலை வைக்கும் மனிதன்

இதை யோசித்துப் பார்க்கும்போது ஏன் வாயில்லாத மிருக ஜன்மா தாழ்வானது, மனித ஜன்மா உயர்வானது என்று சொல்லி வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு மிருகம் பிறந்ததிலிருந்து இறக்கிற வரையில் உள்ளுணர்ச்சி (Instinct) மீதே நடப்பதால், அதற்குப் புத்தி பூர்வமாகச் செய்கிற பாபம் எதுவும் இல்லை. மனிதன்தான் ஓயாமல் கணக்கெழுத வைக்கிறான். எவ்வளவுக்கெவ்வளவு படிப்பும் நாகரிகமும் அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு வஞ்சனை, மோசம், பொய் வேஷம் எல்லாவற்றிலும் நிபுணர்களாகி, சித்ரகுப்தனுக்கு நிறைய வேலை வைக்கிறோம்.

‘நர ஜன்மம் துர்லபம்; அதுவே உயர்ந்தது’ என்பது ஏன் என்று யோசித்தேன். யோசனை செய்ததில் மிருக ஜன்மத்தில் உள்ள பெரிய ஒரு குறை தெரியவந்தது. மிருகங்களுக்குப் பாபம் இல்லாவிட்டாலும் பயம் இருக்கிறது. எப்போது யார் தன்னைக் கொல்வார்களோ என்ற பிராண பயம் கொடிய மிருகத்துக்கும்கூட நிறைய உண்டு. மனிதனுக்கும் பலவிதமான பயங்கள் உண்டு. ஆனால் பயமில்லாமல் செய்துகொள்ள மனிதனுக்கு மட்டுமே வழி இருக்கிறது.

மிருகத்துக்கு இந்த வழி இல்லை. பயம் இல்லாமல் செய்துகொள்வது எப்படி? பிறவி இல்லாமல் செய்துகொண்டால்தான் பயம் இல்லாமல் இருக்கலாம். ‘எல்லாம் நாம்தான்’ என்கிற ஞானம் வந்துவிட்டால் எதனிடமும் பயம் இராது. அந்த ஞானத்துக்குப் பின் சரீரம் விழுந்தால் இன்னொரு சரீரம் எடுக்க மாட்டோம். இந்த ஞானத்தை, அபய நிலையை, ஜன்ம நிவிருத்தியை அடையவே மகான்கள் வாக்கைப் பயன்படுத்தினார்கள். வேத, வேதாந்த, இதிஹாச, புராண, தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வாக்கு இருப்பதால்தானே உண்டாயின!

பாஷை, லிபி, புத்தி இவற்றுக்கு இப்பேர்ப்பட்ட உயர்ந்த பிரயோஜனம் இருப்பதைப் புரிந்து கொண்டபின் ஆறுதலாக இருந்தது.

பகவான் தந்திருக்கும் புத்தியால், வாக்கால், பிறருக்கோ தனக்கோ கெடுதல் உண்டாகாமல் எவ்வளவோ நல்லது செய்யலாம். பாபமும், துக்கமும், பயமும் நீங்க வாக்கைப் பயன்படுத்தலாம். நாம் அப்படியே செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் அடிப்படை பக்தி. வாக்கு, தெய்வ சம்பந்தமாகப் பயனாக வேண்டும். இதனால்தான் அக்ஷராப்யாச காலத்தில், ஆரம்பிக்கும்போதே ‘நமோ நாராயணாய’ என்று விரலைப் பிடித்து எழுதவைக்கிறார்கள். பகவான், தான் கொடுத்திருக்கும் வாக்கை ‘இவன் எப்படிப் பிரயோஜனம் செய்கிறான்’ என்று பார்த்துக்கொண்டே இருக்கிறான். லோக க்ஷேமத்துக்கும் ஆத்ம க்ஷேமத்துக்கும் அதைப் பயன் செய்யாவிட்டால், அடுத்த ஜன்மாவில் வாக்கைப் பிடுங்கிக்கொண்டுவிடுவார். அதாவது மிருகமாகப் படைப்பார்.

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x