Published : 17 Dec 2017 04:43 PM
Last Updated : 17 Dec 2017 04:43 PM
புதுப்பாக்கம் வீர அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால், தடைபட்ட காரியம் நடந்தேறும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். எடுத்த காரியம் யாவும் வெற்றியைத் தரும் என்பது ஐதீகம்!
சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்து உள்ளது. இந்தத் தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம். சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
சீதாதேவியை மீட்பதற்காக ராம & ராவண யுத்தம் நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின் போது மாயப் போரில் வல்லவனான ராவணனின் மைந்தன் இந்திரஜித், பலம் பொருந்திய பாணம் ஒன்றை விட்டான். அந்த மூர்க்கத்தனமான பாணத்திற்கு, லட்சுமணன் மற்றும் வானரப் படை வீரர்கள் பலர் மூர்ச்சையாகிப் போனார்கள்.
அவர்களுக்கு மீண்டும் சுயநினைவு வர சஞ்ஜீவி மலையில் உள்ள அமிர்த சஞ்ஜீவினி மூலிகை தேவைப்பட்டது. காற்றை விட வேகமாகச் செல்ல, வாயுவின் புத்திரனைத் தவிர வேறு யாரால் முடியும்? எனவே அவரையே மூலிகையை கொண்டு வரும்படி ஜாம்பவான் பணித்தார். ராமபிரானின் ஆசியுடன் மூலிகையை தேடிப் புறப்பட்ட அனுமன், மூலிகையை அடையாளம் காண முடியாமல், மூலிகை இருப்பதாக கூறப்பட்ட சஞ்ஜீவி மலையையே பெயர்த்தெடுத்து தூக்கியபடி பறந்தார்.
அப்படி வரும்போது, மாலை வேளையாகிவிட... இருள் சூழத் துவங்கியது. அதனால் நித்திய கர்மாவாகிய அனுமன், சந்தியா வந்தனம் செய்வதற்காக ஓரிடத்தில் இறங்கினார். தன் வழிபாடு முடிந்ததும் ஆஞ்சநேயர் புறப்பட்டுச் சென்றார். முசுகுந்தச் சக்கரவர்த்திக்காக, மகான் வியாச ராஜ தீர்த்தர் ஆஞ்சநேயர் பாதம்பட்ட மலை உச்சியில் அனுமனின் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இந்த மலை ஆஞ்சநேயப் பெருமானுக்கு, திருமங்கை ஆழ்வார் கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. பின்னாளில் செங்கல்வராய மகாராஜா மற்றும் பல்லவ மன்னர்களால் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்று தல வரலாறு கூறுகிறது.
அற்புதமான இந்த வீர ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால், எதிர்ப்புகள் அகலும். எடுத்த காரியம் யாவும் வெற்றியைத் தரும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT