Published : 23 Dec 2017 02:42 PM
Last Updated : 23 Dec 2017 02:42 PM
கந்த சஷ்டி என்றில்லாமல், எந்த சஷ்டியாக இருந்தாலும் வழிபட்டால், வரம் தருவான் வடிவேலன் என்று போற்றுவார்கள் பக்தர்கள்.
மாதந்தோறும் வருகிற சஷ்டியே விசேஷம்தான். இந்த நாளில், விரதம் இருந்து, அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் தருவான்; எல்லா நலமும் தந்து காத்தருள்வான் கந்தபெருமான் .
நாளை 24ம் தேதி வருகிற சஷ்டி ரொம்பவே விசேஷம். கூடுதல் சிறப்பானது. அதாவது, மார்கழியில் வரும் சஷ்டி திதியே மகத்துவமானது என்பார்கள். சொல்லப் போனால், மார்கழி மாதம் என்பதே புண்ணியம் நிறைந்த மாதம். சஷ்டி, ஏகாதசி, திருவாதிரை, கிருத்திகை என நல்ல பல நாட்கள் உள்ளன. இந்த நாட்களிலெல்லாம் முறைப்படி விரதமிருந்து, அந்தந்த தெய்வங்களை வழிபடுவது மகத்தான பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்!
குறிப்பாக, நாளைய தினம் மார்கழி மாதம் சஷ்டி. சுக்கில பட்சத்தில் வரக்கூடிய சஷ்டி. ஞாயிற்றுக் கிழமை நாளில் சஷ்டி வருவது, அதீத பலன்களை வழங்கக் கூடியது என்று சொல்லியிருக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
நாளைய தினம் விடுமுறை நாள்தான். காலை 6 முதல் மாலை 6 மணி வரை ஏதேனும் ஒரு நேரத்தில், அருகில் உள்ள முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் செல்லுங்கள். சுக்கில பட்ச சஷ்டி, ஞாயிறு சஷ்டி என பல வீரியமான சூழல்கள் ஒருசேர வந்திருப்பதால், முருகப் பெருமான் சந்நிதிக்கு எதிரே ஒரு ஐந்து நிமிடம் நின்று பிரார்த்தனை செய்யுங்கள். செவ்வரளி மாலை விசேஷம். முருகனுக்கு அணிவியுங்கள். நாளைய நாளில் வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வீடு, மனை முதலான விஷயங்களில் உள்ள சிக்கல்கள் யாவும் தீரும். வழக்கில் வெற்றி கிடைக்கும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
மார்கழி மாதம், சுக்கில பட்சம், சஷ்டி திதி, ஞாயிற்றுக் கிழமை என்பதுடன் சத்ய நட்சத்திரமும் சேர்ந்து வருவதை சிலாகித்துச் சொல்கிறார்கள். எனவே இந்த நாளில், கந்தனை வணங்கி, கோயிலில் 36 முறை பிராகார வலம் வந்தால், கிரகங்களால் உண்டான தோஷம் முதலானவை விலகிவிடும். திருமணத் தடை நீங்கிவிடும். நோய்கள் அனைத்தும் அண்டாமல் காத்தருள்வார் கந்தபிரான். சந்ததி பாக்கியம் கிடைத்து, இனிதே வாழ்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!
நாளை 24ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை நாளில்... விடுமுறை நாளில்... கந்தனைத் தரிசியுங்கள். கவலையெல்லாம் பறந்தோடும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT