Published : 02 Dec 2017 10:52 AM
Last Updated : 02 Dec 2017 10:52 AM
திருவண்ணாமலையில் கோலோச்சும் அம்பாளின் திருநாமம் உண்ணாமுலை அம்பாள். வடமொழியில் அம்பாளின் பெயர் ‘பிதகுசாம்பாள். கருணையும் கனிவும் கொண்டவள். அண்ணாமலையாரைப் போலவே, தன்னை நாடி வந்து, சந்நிதியில் நிற்பவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை அன்னை!
ஆறு பிராகாரங்களையும், ஒன்பது கோபுரங்களையும் கொண்டது திருவண்ணாமலை கோயில். நான்கு திசைகளிலும் நான்கு உயரமான கோபுரங்கள் கம்பீரமாகக் காட்சி தருகின்றன. ஒவ்வொரு கோபுரத்தின் பின்னணியிலும் சுவையான வரலாறு பொதிந்திருக்கின்றன.
ராஜகோபுரத்தில் நுழைந்தால் ஏறக்குறைய நூறடி தூரத்தைக் கடந்தால்தான் ஆலயத்தின் முதல் பிராகாரத்தையே அடைய முடியும். ராஜகோபுரத்தின் உட்புறம் நடக்கும்போது வலப் புறமும், இடப்புறமும் பார்த்தால் கோபுரத்தின் உட்புறத்தில் அவ்வளவு அற்புதமான சிற்பங்கள்!
வலப்புறம் எதிரே... ஆயிரங்கால் மண்டபம். இந்த ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் இருக்கும் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி, ரொம்பவே விசேஷமானது. இந்த பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில்தான் பகவான் ரமண மகரிஷி இளமையில் தியானம் செய்தார்.
இடது புறம் எதிரே கம்பத்து இளையனாராக அருணகிரிநாதருக்குக் காட்சி கொடுத்த முருகப் பெருமானின் சந்நிதி. இந்த முருகன் கோயிலுக்குத் தெற்கில் சிவகங்கை தீர்த்தக் குளம் அமைந்து உள்ளது.
முருகன் கோயிலுக்கு நேர் பின்புறம் சர்வ ஸித்தி விநாயகர் கோயில் உள்ளது. இவரை வழிபட்டு வலம் வந்து வெளிப்பட்டால், உத்திராட்ச மண்டபம் எனும் அழகிய நாற்கால் மண்டபத்தையும், அதை அடுத்து இருக்கும் நந்தி மண்டபத்தையும் காணலாம். இந்த மண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தியம்பெருமான் ஆலயத்துச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் அண்ணாமலையை நோக்கியவாறு அமையாமல் ஆலயத்துக்குப் பின்னால் காட்சி தரும் மலையையே தரிசித்த வண்ணம் அமர்ந்திருக்கிறார். ஏன்? எதனால்? மலையே சிவமென இருக்கிறார் அல்லவா சிவபெருமான்.
இந்த நந்தி மண்டபத்தைக் கடந்து சென்றால் எதிர்ப்படுவது வல்லாள மகாராஜா கோபுரம். நீண்ட நெடிய கோபுரத்தின் உச்சியிலிருந்துதான் அருணகிரிநாதர் தன் வாழ்வை முடித்துக் கொள்ளக் கீழே குதித்திருக்கிறார். அவரை முருகப் பெருமான் தாங்கி, தடுத்தாட் கொண்டார்.
இந்த கோபுரத்துக்கு அடுத்து இருக்கும் பிராகாரத்தில், தெற்கில் பிரம்மதீர்த்தம் உள்ளது. இந்தப் பிராகாரத்தில் இருக்கும் வினை தீர்க்கும் விநாயகர் சந்நிதியிலும் மக்கள் வந்து வணங்குகிறார்கள். இந்தப் பிராகாரத்தில் புரவி மண்டபம் இருக்கிறது. நளேஸ்வரர், வித்யாதரேஸ்வரர், பிரம்ம லிங்கம் ஆகியோரும் எழுந்தருளியிருக்கும் பிராகாரம் இது.
இதை அடுத்து இருக்கும் மூன்றாம் கோபுரம் கிளிக் கோபுரம் எனப்படுகிறது. இந்தக் கோபுரத்தில்தான் அருணகிரிச்சித்தர் தனது பூதவுடலை விட்டு, கூடு விட்டுக் கூடு பாயும் சித்து வேலை செய்து, தன் உயிரை ஒரு கிளியின் உடலில் புகுத்தி, பாரிஜாத மலரைத் தேடிக் கொண்டுவரச் சென்றார்.
கிளி உருவில் பாரிஜாத மலருடன் திரும்பி வந்து பார்த்தால், அவரது பூத உடல் அங்கே இல்லை. கிளி உருவிலேயே இந்த கோபுரத்தில் இருந்து அவர் கந்தர் அனுபூதியைக் களிப்புடன் பாடியிருக்கிறார்.
கிளிக் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், மூன்றாம் பிராகாரத்தை அடையலாம். இங்கேதான் மங்கையர்க்கரசி எனும் சிவனடியார் எழுப்பிய பதினாறு கால் மண்டபம் உள்ளது. இதற்குத் தீப தரிசன மண்டபம் என்றும் பெயர் உண்டு. இங்கு திருக்கார்த்திகைத் திருநாளில் பஞ்சமூர்த்திகள் மலையை நோக்கி நிற்க, மலை மீது தீபம் ஏற்றும் விழா நடைபெறும்.
ஆக, திருவண்ணாமலை கோயிலின் மிக முக்கியமான இடம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT