Published : 25 Dec 2017 07:22 PM
Last Updated : 25 Dec 2017 07:22 PM
நீலகண்ட தீட்சிதரின் ஆராதனை விழா, மார்கழி மாத சுக்கில பட்ச அஷ்டமியில் வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். நாளை 26.12.17 செவ்வாய்க் கிழமை, நீலகண்ட தீட்சிதரின் ஆராதனை விழா, அவர் அதிஷ்டானம் அமைந்துள்ள பாலாமடையில் நடைபெறுகிறது. மூன்று நாள் விழாவாக நடைபெறும் இந்த விழா, வைதீக முறையில் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ளது பாலாமடை. திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது பாலாமடை. டவுன் பஸ் வசதி உண்டு. தாழையூத்து, ராஜவல்லிபுரம் வழியே பாலாமடையை அடையலாம்.
சின்னஞ்சிறிய கிராமம். அழகான கோயில் உள்ளது. அமைதியான சங்கர மடம் அமைந்திருக்கிறது. சலசலப்பே இல்லாமல் தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது.
இங்கே உள்ள சுவாமியின் திருநாமம் மங்களாங்குரேஸ்வரர். அம்பாள் மங்களேஸ்வரி. பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அற்புதமான கோயில். ஆனால் இப்படியொரு ஊரில், இப்படியொரு ஆலயம் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை.
அம்மையும் அப்பனும் கிழக்குப் பார்த்த சந்நிதியில் காட்சி தருகிறார்கள். எனவே இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக் கொண்டால், வாழ்வில் விடியல் நிச்சயம் என்கிறார்கள் பக்தர்கள்.
கோயிலின் ஸ்தல விருட்சம் காட்டாத்தி எனும் ஒருவகை மரம். இதன் கிளைகள் வளைந்து முடிச்சிட்டிருக்கும் அமைப்பைக் கொண்டது. வில்வ மரங்களும் இருக்கின்றன. சிவபூஜைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
தை மாதம் உத்திர நட்சத்திரம் அன்று திருக்கல்யாணம் நான்கு நாட்கள் உற்ஸவ விழாவாக நடைபெறுகிறது. உதயநேரி ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில் பட்டர் மகாவிஷ்ணுவாக சகோதர பாவத்தில் வந்து அம்பாளுக்குச் சீர் வகைகளுடன் தாரை வார்த்துக் கொடுப்பதைக் காணவே கண் கோடி வேண்டும் என்கின்றனர் ஊர்க்காரர்கள். ஐந்தாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். ,
பாலாமடைக்கு இன்னொரு பெயர் உண்டு. அது... நீலகண்ட சமுத்திரம்.
என்ன காரணம்? ஏனிந்தப் பெயர்?
மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் அவையில் மந்திரியாக இருந்தவர் நீலகண்ட தீட்சிதர். பிரசித்தி பெற்ற, அப்பய்ய தீட்சிதரின் சகோதரரின் பேரன். இவர் அமைச்சராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான், மதுரை மீனாட்சி அம்பாள் ஆலயத்தில், புதுமண்டபம் கட்டி ஏராளமான திருப்பணிகள் செய்தார்.
அந்த மண்டபத்தில், சுமந்திர ஆசாரி எனும் சிற்பி, திருமலை நாயக்கரின் உருவத்தையும் பட்டமகிஷியின் உருவத்தையும் வடிவமைத்துப் பொறிப்பதற்குக் காரணமாக இருந்தவரும் இவரே!
அதைப் பார்வையிட வந்த நீலகண்டர், ராணியின் உருவத்தின் இடது தொடைப்பகுதியில், லேசாகப் பெயர்ந்த இடத்தைச் சுட்டிக்காட்டினார். என்ன காரணம் என்று கேட்டார். அந்தச் சிற்பி வருத்தத்துடன், எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் சரிசெய்ய முடியவில்லை என விவரித்தார். சற்று நேரம் கண்மூடி யோசித்த நீலகண்ட தீட்சிதர், ‘அப்படியெனில் அந்த இடத்தில் மரு ஒன்று இருந்திருக்கவேண்டும்’ என்றார்.
இது அரசரின் காதுக்கு எட்டியது. அதிர்ந்து போனார் மன்னர். தீட்சிதரின் மீது சந்தேகம் வந்தது. இதைக் கேட்டதும் அடுத்த நொடியே, தீட்சிதர் கற்பூரத்தை எரிய வைத்து, அந்த நெருப்பை, அப்படியே கண்களில் வைத்துக் கொண்டார். எல்லோரும் பதறிப் போனார்கள். பிறகு விசாரிக்கும் போது சாமுத்திரிகா லட்சணப்படி இப்படித்தான் அமைந்திருக்கும் என தீட்சிதர் விவரிக்க, அவரின் திறன் கண்டு மலைத்துப் போனார் மன்னர். மன்னிப்புக் கேட்டார். ’என்னை மன்னித்து, மீண்டும் பார்வையைப் பெறுங்கள் தீட்சிதரே!’ என்று மன்றாடினார்.
அதையடுத்து, அன்னை மீனாட்சியை நினைத்து, ஸ்ரீஆனந்த சாகரஸ்தவம் எனும் ஸ்லோகத்தை, ஸ்தோத்திரத்தைப் பாடினார். பாடலின் 60வது பாடும்போது, இழந்த பார்வையை மீண்டும் பெற்றார் நீலகண்ட தீட்சிதர்.
இவரின் பக்தியையும் புலமையையும் மகாசக்தியையும் உணர்ந்து சிலிர்த்த மன்னர், கோழியே கூவாத, மிலேசர்கள் எவரும் வாழாத பாலாமடை கிராமத்தை அளித்தார் என்கிறது வரலாறு.
இதன் பிறகு, பாலாமடையில் இருந்துகொண்டு, சந்நியாசம் பெற்று, ஆன்மிக வழியில் வாழ்ந்து, தொண்டுகள் பல செய்து ஸித்தியடைந்தார்.
சிவாலயத்தில், தெற்குப் பக்கமாக இவரின் அதிஷ்டானம் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
மார்கழி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் நீலகண்ட தீட்சிதருக்கு ஆராதனை விமரிசையாக நடைபெறுகிறது. வைகாசி மாதத்தில் ஜயந்தித் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சிருங்கேரி சுவாமிகள், 92ம் வருடம் இங்கு வந்து, ஆதிசங்கரருக்கு ஸ்தாபிக்கப்பட்ட மடத்துக்கு வந்து கும்பாபிஷேகம் நடத்தி அருளியுள்ளார்.
இத்தனை பெருமை மிகுந்த நீலகண்ட தீட்சிதரின் ஆராதனை விழா, நாளை செவ்வாய்க்கிழமை 26ம் தேதி நடைபெறுகிறது இதையொட்டி இன்றும் நேற்றுமாக ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ருத்ரைகாத சனி, வஸோர்த்தாரா ஹோமம், உபநிஷத் பாராயணம், மகா அபிஷேகம், தீபாராதனை, முதலானவற்றுடன் நெல்லை பாலாமடையில் நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா விமரிசையாக நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை, மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் பவுண்டேஷன் அமைப்பினர் சிறப்புறச் செய்து வருகின்றனர்.
நாளை நடைபெறும் ஆராதனையில் கலந்து கொள்ளுங்கள். நீலகண்ட தீட்சிதரின் தெய்வாம்சமும் பெரும்பக்தியும் நம்மையும் நம் குழந்தைகளையும் செம்மையாக்கும். சீர்படுத்தும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள் என்கின்றனர் ஆராதனை விழாக் குழுவினர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT