Last Updated : 24 Nov, 2017 09:31 AM

 

Published : 24 Nov 2017 09:31 AM
Last Updated : 24 Nov 2017 09:31 AM

சுவாமி சரணம்.. 8: ‘தம்பி மூலமாக ஐயனின் திருவிளையாடல்!’

தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகியவற்றால்தான் ஒவ்வொரு ஆலயமும் தன் சாந்நித்தியத்தை பக்தர்களுக்கு எடுத்து உணர்த்துகின்றன. இப்படி எந்தத் தலமாக இருந்தாலும் அவை, பக்தர்களின் வருகையால் இன்னும் இன்னும் சந்துஷ்டியைப் பெற்று, அதைக் கொண்டு, மக்களுக்கு, அதாவது பக்தர்களுக்கு பேரருளை அள்ளி வழங்குகின்றன. தலம், தீர்த்தம், மூர்த்தம் என மூன்று முத்தான விஷயங்கள் மட்டுமின்றி, இன்னும் கூடுதலான பெருமைகளும் உண்டு என்கின்றன சாஸ்திரங்கள்.

முதலாவதாக, தலமானது... சுயம்பு பூமியாக வந்திருக்கும். அல்லது இறைவனின் ஜோதிர்லிங்கம் அங்கே அருள்பாலித்துக் கொண்டிருக்கும்.

அடுத்து, யாகபூமி என்பார்கள் தெரியும் அல்லவா. அதாவது அங்கே, அந்தத் தலத்தில், பிரமாண்டமான யாகங்கள் ஒருகாலத்தில் செய்யப்பட்டிருக்கும்.

பக்தி மார்க்கத்தில், பலியிடுவதற்கு முக்கிய பங்கு உண்டு. எனவே, அந்தத் தலத்தில், மகா யுத்தமும் யுத்தத்தால், பலிகளும் நடந்திருக்கும்.

நான்காவதாக, ரிஷிகளாலும் முனிவர் பெருமக்களாலும் கடும் தவங்கள் மேற்கொண்ட ஸ்தலமாக, பூமியாக இருந்திருக்க வேண்டும்.

அதேபோல், யோகிகள் அங்கே வாழ்ந்து, கடும் தபஸ் செய்து, சிரத்தையுடன் மனமொன்றி பூஜைகள் செய்திருக்கவேண்டும்.

தேவர்கள், பூமிக்கு வந்து இறைவனைத் தொழுத பூமியை தேவ பூமி என்றே சொல்வார்கள். அப்படி தேவர்கள் அங்கே குழுமி, பூஜித்த இடமாக, பூமியாக இருந்திருக்க வேண்டும்.

ஏழாவதாக, நதிகள் சங்கமிக்கும் அற்புதமான பூமியாக இருக்க வேண்டும்.

இந்த ஏழில் ஒன்றே ஒன்றைக் கொண்டிருந்தாலும் அது புண்ணிய பூமி என்று சாஸ்திரம் சொல்கிறது. அத்தகைய புண்ணிய பூமிக்குச் செல்வதும் அங்கே சுவாமி தரிசனம் செய்வதும் மிகப் பெரிய புண்ணியம் என்கின்றன ஞான நூல்கள்.

இந்த ஏழில் ஒன்றே ஒன்றைக் கொண்ட தலத்துக்கு சென்றாலே, நம் அனைத்து பாவங்களும் விலகிவிடும்; கோடி புண்ணியங்களை கிடைக்கப் பெறலாம் என்கின்றன ஆகமங்கள்.

சபரிமலை எனும் சாஸ்தா குடிகொண்ட அந்த பூமியானது, மலையானது, ஏழு அம்சங்களையும் பெருமைகளையும் சாந்நித்தியங்களையும் கொண்ட திருத்தலமாகத் திகழ்கிறது.அதனால்தான் வருடந்தோறும் பக்தர்கள் கூடிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி அதிகரித்துக் கொண்டே இருக்கிற சாமிமார்கள் அனைவரின் பாவங்களையும் தொலைத்து, புண்ணியங்களைத் தந்துகொண்டிருக்கிறார் சபரிகிரிவாசன்.

சபரிமலை எனும் புண்ணியபீடத்துக்கு, சாஸ்தா குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்கு வந்தவர்கள் தொடர்ந்து வருவதும் புதிதாக மாலையணியும் கன்னிச்சாமிகளின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருப்பதும் இந்தத் தலத்தின் சக்திக்கும் அருளுக்கும் சாட்சி சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

‘சாமி அண்ணா’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கல்பாத்தி ஸ்ரீநிவாஸ ஐயர், தன் பால்ய வயதில் கர்மானுஷ்டங்களில் முழுதுமாக ஈடுபட்டார். ஆனால், கல்விப்படிப்பைத் தொடரமுடியவில்லை. குடும்பச் சூழல் படிப்புக்கு இடம் கொடுக்கவில்லை. ஆகவே படிப்பு பாதியில் நின்றது. ஆனால் வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்பதில் இருந்த ஆர்வமும் குறையவில்லை. சூழலும் வெகுவாகவே அமைந்தன.

சிறுவயதிலேயே வீட்டு நிர்வாகத்தை கையில் எடுக்க வேண்டிய சூழ்நிலையும் சேர்ந்து கொண்டது. ஒருபக்கம் வேலை, இன்னொரு பக்கம் கர்மானுஷ்டங்கள் மற்றொரு பக்கம் குடும்பப் பொறுப்பு என அனைத்தையும் சமாளித்தார்.

சென்னையில் டிராம் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு, பாலக்காட்டுக்கே வந்தார். தன் சகோதரியின் மகளான பார்வதியை மணந்துகொண்டார். இவரின் தலைமைப் பண்பு, நேர்மை,உழைப்பு, பக்தி ஆகியவற்றால் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றார்.

பாலக்காட்டில் இருந்த துணிக்கடை ஒன்றை விலைக்கு வாங்கினார். இவர் கைபட்டதாலோ என்னவோ, அந்த ஊரின் முக்கிய ஜவுளிக்கடையாக அது திகழ்ந்தது. எல்லோரும் இவரை, ‘அங்காடி மாமா’ என்று அழைத்தார்கள். வெற்றி, லாபமாகக் கொட்டியது. வீட்டின் வறுமை ஓடியது. தெய்வ பக்தி இன்னும் இன்னும் அதிகரித்தது. லௌகீக வாழ்வில், முன்னுக்கு வந்துகொண்டே இருந்தார்.

ஆனால் காசு பணத்துக்கும் ஆடம்பரத்துக்கும் இவர் செல்லவே இல்லை. ஏதோ பற்றற்றவராகவெ இருந்தார். குடும்பத்தின் மீதும் கடவுளின் மீதும் கொண்ட பற்று மட்டும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இந்த சமயத்தில்தான், சாஸ்தா தன் விளையாடலைத் தொடங்கினான். பிறந்த கையோடே இவரிடம் விளையாடிவனாயிற்றே மணிகண்டன்.

சாமி அண்ணாவின் இளைய சகோதரர் கிருஷ்ண ஐயர். ஸ்ரீஐயப்ப சுவாமி, சாமி அண்ணாவைக் கவர, கிருஷ்ண ஐயரைக் கொண்டுதான் லீலையைத் தொடங்கினார். இந்தக் குடும்பத்துக்குள் ஐயப்பன் எனும் கண்கண்ட தெய்வம் உள்ளே வருவதற்கு, கிருஷ்ண ஐயரே காரணம்.

அது 1930 முதல் 1940 வரையிலான காலம். பல குருசாமிமார்களுடன் இணைந்து, சபரிமலை யாத்திரையை பலமுறை மேற்கொண்டிருந்தார் கிருஷ்ண ஐயர். பிரம்மச்சாரியாகவே இருந்தவர். இம்மியளவு கூட அனுஷ்டானங்களில் இருந்து மாறாமல், மீறாமல், இறை பக்தியிலேயே ஐயப்ப சுவாமியின் பக்தியிலேயே இருந்தார்.

‘என்னடா இவன். பக்தி இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா? கடவுளை நினைக்க வேண்டும்தான். அதற்காக, கடவுளையே நினைத்துக் கொண்டா இருப்பது? இயல்பு வாழ்க்கைக்கு வரவே மாட்டேன் என்கிறானே... இறைவனே கதியென்று சுற்றிக் கொண்டிருக்கிறானே...’ என்று தம்பியை நினைத்துக் கவலைப்பட்டார் சாமி அண்ணா.

அப்படிக் கவலைப் பட்ட சாமி அண்ணவுக்கு அப்போது தெரியாது... ‘நாம் தம்பியை விட பல படிகள் கடந்து, ஐயப்பனே கதியென்று வாழப் போகிறோம்’ என்று!

கடவுளையே நினைத்துக் கொண்டிருக்கிறானே என்று தம்பியின் அதீத பக்திக்காக கவலை கொண்ட சாமி அண்ணா, பின்னாளில் கடவுளையே பற்றிக் கொண்டார். ஐயப்பன் நாமத்தையே சதாசர்வ காலமும் சொல்லிக் கொண்டிருப்பவராக மாறினார்.

அது ஐயப்ப லீலை. குருவான சபரிமலையானின் விளையாடல்.

சுவாமியே சரணம் ஐயப்பா.

-ஐயன் வருவான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x