Last Updated : 28 Nov, 2017 02:36 PM

 

Published : 28 Nov 2017 02:36 PM
Last Updated : 28 Nov 2017 02:36 PM

ஏழு நிலை... ஏழு தாமரை... ஏழு ஜென்ம பாவம் தீரும்! 7-ன் ஆதிக்கம் கொண்ட திருப்பட்டூர் திருத்தலம்!

திருப்பட்டூர். இன்றைக்கு இந்த ஊரைச் சொல்லாதவர்களே இல்லை. இந்த ஊருக்குச் சென்று பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசிக்காதவர்கள் மிகக் குறைவு. திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில், 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து 5 கி.மீ. பயணித்தால், திருப்பட்டூர் எனும் திருத்தலத்தை அடையலாம்.

சிவனாரின் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். அம்பாள் பிரம்மசம்பத் கெளரி. இந்தத் தலத்தின் விசேஷங்களும் சிறப்புகளும் பல உண்டு.

கோபுர நுழைவாயிலில் இருந்து ஏழுநிலைகளைக் கடந்து, பிரம்மபுரீஸ்வரரைத் தரிசிக்க வேண்டும். சூரிய பகவான் தன் கதிர்க்கரங்களால், அந்த ஏழு நிலைகளையும் கடந்துதான் நமஸ்கரித்து வணங்குகிறார். சூரிய பகவானின் ரதத்தில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருப்பது தெரிந்ததே!

எனவே, ஏழாம் தேதி பிறந்தவர்கள், ஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள், இங்கு வந்து தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். அதேபோல், ஏழாம் தேதியில் வந்து எவர் தரிசித்தாலும் அவர்களின் ஏழேழு ஜென்மப் பாபங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்! ஏழ்பிறவியிலும் நல்லதொரு கருத்தொருமித்த வாழ்க்கைத் துணை அமைந்து, இனிமையையும் வளமையையும் தந்தருளும்!

அதேபோல், ஏழு தாமரைப் பூக்கள் கொண்டு, ஏழு முறை இங்கு வந்து பிரம்மாவை வணங்குவதும் வளம் சேர்க்கும். சந்ததிக்கு பலம் தரும். ஏழு முறை பிராகார வலம் வந்து, பிரார்த்தனை செய்வதும் நன்மை தரும். நம் வாழ்க்கையையே நல்ல விதமாகத் திருப்பிப் போடும் என்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள்.

‘கலியுகத்துக்கு காலபைரவர்’ என்று புகழ்மிக்க வாசகமே உண்டு. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் காலபைரவ மூர்த்தி. இங்கே அவர், பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், சக்தியுடனும் சாந்நித்தியத்துடனும் காட்சி தந்து அருள்கிறார். தேய்பிறை அஷ்டமி நாளில், ராகுகால வேளையில் இங்கு வாருங்கள். ஒரு நட்சத்திரத்துக்கு ஒரு மிளகு வீதம், 27 நட்சத்திரங்களுக்கு 27 மிளகு என எடுத்து, ஒரு துணியில் கட்டி, அதை அகல்விளக்கில் இட்டு, நல்லெண்ணய் ஊற்றி தீபமேற்றி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x