Last Updated : 24 Nov, 2017 03:40 PM

1  

Published : 24 Nov 2017 03:40 PM
Last Updated : 24 Nov 2017 03:40 PM

ஸ்ரீவாஞ்சியம் வந்தால்... ஏழு ஜென்மப் பாவம் தீரும்!

கோயிலும் கோபுரமும் குளமும் என கொள்ளை அழகுடன் திகழும் தலங்கள் எல்லாமே, மனதைக் கவர்ந்துவிடும். கொஞ்சம் குழப்பமும் தவிப்பும் இருந்தால் கூட, அங்கே கால் வைத்த கணமே, தெளிவும் அமைதியும் வந்துவிடும். ஸ்ரீவாஞ்சியத்தில் இதை பல முறை உணர்ந்திருக்கிறேன், அப்படித்தான் உணர்ந்து சிலிர்க்கச் செய்யும். காரணம்... காசிக்கு நிகரான தலங்களில் ஸ்ரீவாஞ்சியமும் ஒன்று.

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் அமைந்து உள்ள அற்புதமான திருத்தலம், ஸ்ரீவாஞ்சியம். வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது, கோயிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீவாஞ்சிநாதர். அம்பாளின் பெயர் ஸ்ரீமங்களாம்பிகை. இந்தத் தலத்தில் தேவர்களும் முனிவர்களும் கடும் தவமிருந்து சிவபூஜை செய்திருக்கிறார்கள். தெய்வங்களே இங்கு வந்து, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்... எமதருமருக்கு சிவனார் அருளிய பேறு பெற்ற திருத்தலம் இது. ஆகவே இந்தத் தலத்தின் அம்மைக்கும் அப்பனுக்கும் வாகனத் தொண்டு செய்து வருகிறார். இதனால் எமதருமருக்கு இங்கு தனிச்சந்நிதி உள்ளது. இவரை வணங்கிய பிறகுதான் மூலவரை வழிபடுகின்றனர்.

நால்வர் பெருமக்கள், அருணகிரிநாதர், வள்ளலார் பெருமான் ஆகியோரால் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. இந்தத் தலத்துக்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் இருந்தால்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்பது ஐதீகம்.

அற்புதமான ஆலயம். தலம், தீர்த்தம், மூர்த்தம் என விசேஷங்கள் கொண்ட கோயில். எம பயம் முதலான பலவற்றுக்கு பரிகாரத் தலமும் இதுவே! இந்த இப்பிறவியில் ஒருமுறையேனும் வாஞ்சியம் வந்து வாஞ்சிநாதரை தரிசித்துவிட்டு, எமதருமனையும் வணங்கினால், இந்த வாழ்க்கை நிம்மதியாகவும் நிறைவுடனும் அமைந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

இந்தக் கோயிலின் தீர்த்தம், குப்த கங்கை எனப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில், இங்கு வந்து நீராடிவிட்டு, இறைவனைத் தரிசித்தால் ஏழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்! குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷமாகவும் கூட்டமாகவும் இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!

நவம்பர் 26ம் தேதி, டிசம்பர் 3ம் தேதி மற்றும் 10ம் தேதி ஆகியவை கார்த்திகை ஞாயிறு. எனவே இந்த நாட்களில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில், ஸ்ரீவாஞ்சியம் வாருங்கள். பிறவிப்பயனைப் பெறுங்கள். ஏழு ஜென்மப் பாவம் நீங்கி, புத்துணர்வுடன் வாழ்வீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x