Last Updated : 11 Nov, 2017 11:48 AM

 

Published : 11 Nov 2017 11:48 AM
Last Updated : 11 Nov 2017 11:48 AM

பைரவா... பைரவா..!

தஞ்சை பெரிய கோயிலில் அருள்பாலிக்கும் பைரவர் எட்டுத் திருக்கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். வாராஹிதேவிக்கு இங்கே சிறப்பு வழிபாடுகள் நடப்பது போலவே, தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கான பூஜைகள் இங்கே அமர்க்களப்படுகின்றன!

நெல்லை மாவட்டம், குற்றாலம்- செங்கோட்டை சாலையில் உள்ள இலஞ்சி எனும் அற்புதமான ஊரில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் அழகன் குமரன். இந்தக் கோயிலில் அருள் புரியும் பைரவரது வாகனமான நாய், இடப் பக்கம் திரும்பி இருப்பது சிறப்பு அம்சம். இது... காணக் கிடைக்காத தரிசனம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

சங்கரன்கோவில் ஸ்ரீசங்கர நாராயணர் கோயிலில் கோயிலில், நின்ற திருக்கோலத்தில் செங்குத்தாக பாம்பை கையில் ஏந்தியபடி அற்புதமாகக் காட்சி தருவார் பைரவர். இவரை ‘சர்ப்ப பைரவர்’ என்கிறார்கள். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் இந்த பைரவரை வணங்கினால், அரளி மலர்கள் சார்த்தி, மிளகு வடை மாலையோ வெண் பொங்கலோ நைவேத்தியம் படைத்து வணங்கி வழிபட்டால், எல்லா செளபாக்கியங்களும் தடையின்றித் தந்தருள்வார் பைரவர். சர்ப்ப தோஷம் முதலான சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எட்டு திருக்கரங்களுடனும் மூன்று கண்களுடனும் கொண்ட ஐம்பொன்னாலான பைரவரின் உற்ஸவர் விக்கிரகம் கொள்ளை அழகு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பத்தூர் சிவாலயத்தில், பைரவர் அமர்ந்த திருக்கோலத்தில் யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். கல்வி கேள்விகளில் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்!

திருவண்ணாமலை திருக்கோயிலில், மேற்கு முகமாக, நின்ற திருக்கோலத்தில் 8 கரங்களுடன், 7 அடி உயரத்தில் அருள் பாலிக்கிறார் பைரவர். வாராஹிக்கு இங்கே எப்படி சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறதோ... அதேபோல் விமரிசையாக நடைபெறுகிறது பைரவருக்கான பூஜையும் வழிபாடுகளும்!

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில், 8 கரங்களுடன், ஜடாமண்டல கால பைரவர் அருள் புரிகிறார். ஞானம் தரும் பைரவர் என்கிறார்கள் பக்தர்கள். குழப்பத்தைக் களையச் செய்வார். மனதைத் தெளியச் செய்வார் இந்த பைரவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x