Last Updated : 15 Nov, 2017 10:59 AM

 

Published : 15 Nov 2017 10:59 AM
Last Updated : 15 Nov 2017 10:59 AM

வாழ்வை வளமாக்கும் எட்டு பிரதோஷங்கள்!

வருடத்திற்கு மொத்தம் 24 பிரதோஷங்கள் இருக்கின்றன. பொதுவாகவே, இந்தப் பிரதோஷ நாளிலேனும் சிவாலயம் சென்று சிவபெருமானையும் நந்திதேவரையும் வணங்க வேண்டும் என்பார்கள். அப்படி இயலாதவர்கள், சித்திரை மாதத்தில் வருகிற பிரதோஷங்களையும் வைகாசி மாதத்தில் வருகிற பிரதோஷங்களையும் தவறாமல் கோயிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும்.

அதேபோல் ஐப்பசியிலும் கார்த்திகையிலுமாக வருகிற பிரதோஷங்கள் மிக மிக முக்கியமானவை. ஆக, இந்த நான்கு மாதங்களையும் சேர்த்தால், எட்டு பிரதோஷங்கள் வருகின்றன. இந்த எட்டுப் பிரதோஷ நாளிலும், மறக்காமல் சிவாலயம் செல்வதும் அபிஷேகப் பொருட்கள் வழங்கி, வில்வமும் செவ்வரளியும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் வழங்கிப் பிரார்த்தனை செய்தால், எல்லா நலமும் வளமும் பெற்று இனிதே வாழலாம்!

மேலும் இந்த எட்டுப் பிரதோஷங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்தால், ஒரு வருடம் முழுவதும் உள்ள 24 பிரதோஷங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

அடுத்து... சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்றொரு வாசகம் உண்டு. இந்தச் சத்திய வார்த்தையின் படி சனிப் பிரதோஷ நாளில், ஏராளமான பக்தர்கள் சிவாலயம் சென்று தரிசிப்பார்கள். அதிலும் தேய்பிறை சமயத்தில் வருகிற சனிப்பிரதோஷம் ரொம்பவே சாந்நித்தியமான நாள் என்கிறார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில்... உங்களின் நட்சத்திர நாளும் பிரதோஷமும் இணைந்து வந்தால்... அந்த நாளில் மறக்காமல் சிவனாரை வழிபடுங்கள். எல்லாச் சிக்கல்களில் இருந்தும் மீட்டெடுப்பான் பரமேஸ்வரன். அனைத்துக் கவலைகளையும் காணடித்து விடுவான், கந்தவேளின் தந்தை!

இதோ... புதன் கிழமை. பிரதோஷ நன்னாள். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்குச் செல்லுங்கள். முடிந்த அளவு, வில்வமும் செவ்வரளியும் வழங்குங்கள். பால், தயிர், பன்னீர், திரவியப்பொடி, சந்தனம், விபூதி, தேன் என உங்களால் முடிந்த அளவு அபிஷேகப் பொருட்களை வழங்கி, அதில் ஈடுபடுங்கள்.

தென்னாடுடைய சிவன் எந்நாளும் காப்பான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x