Last Updated : 11 Nov, 2017 02:14 PM

 

Published : 11 Nov 2017 02:14 PM
Last Updated : 11 Nov 2017 02:14 PM

பைரவரின் கோலங்கள்... திருத்தலங்கள்!

கால பைரவரின் விசேஷமான திருத்தலங்களைப் பார்ப்போம்.

கோயில் நகரம் கும்பகோணம்- திருவாரூர் சாலையில் உள்ள சிவபுரம் ஸ்ரீசிவகுருநாத ஸ்வாமி ஆலயத்தில், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பைரவர்.

கோரைப் பற்கள் மற்றும் பயங்கர உருவத்துடன், கையில் சூலாயுதம் தாங்கி அருள் புரிகிறார் பைரவர். வாகனமான நாய், இடப் புறம் திரும்பி பைரவரின் முகத்தைப் பார்த்தபடி இருப்பது விசேஷம்!

கும்பகோணம் அருகில் உள்ள திருவிசலூர் திருத்தலத்தில் உள்ள சிவயோகநாதர் கோயிலில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

சென்னை- திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழு பைரவர் சந்நிதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமியின் போது, ஏராளமான பக்தர்கள் இங்கு வடைமாலை சார்த்தி, வழிபடுகின்றனர். இன்னும் நிறைய பக்தர்கள் தயிர் சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

காளஹஸ்தி கோயிலில் இரண்டு பைரவர்களைத் தரிசிக்கலாம். அவர்களில் ஒருவர், பாதாள பைரவர். கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு முன்னதாக இந்த பைரவரை வழிபட்டால், வீடு கட்டும் பணிகள் தடையின்றித் தொடரும் என்பது நம்பிக்கை. மனை, பூமி, வீடு தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கும் என்பதாக ஐதீகம்!

தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு வடைமாலை சார்த்தி வழிபடுவது விசேஷம். தேய்பிறை அஷ்டமியான இன்று நவம்பர் 11ம் தேதி, சிவாலயங்களில், காலபைரவர் சந்நிதியில் அபிஷேகங்களும் விசேஷ பூஜைகளும் நடைபெறும்.

அவருக்கு தயிர்சாதம் நைவேத்தியமாகப் படைத்து வணங்கினால், வாழ்க்கையே குளிர்ந்துபோகும்! தீயசக்திகளால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். சத்ரு பயம் அகலும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் காலத்துக்கும் துணை நின்று காத்தருள்வார் காலபைரவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x