Last Updated : 02 Nov, 2017 09:31 AM

 

Published : 02 Nov 2017 09:31 AM
Last Updated : 02 Nov 2017 09:31 AM

துளி சமுத்திரம் சூபி 06: பாஸ்ராவின் ஹஸன்

துறவறம் என்பது உலகைத் துறப்பதில் இல்லை, அதன் இழப்புகளை ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. இந்த ஏற்புத் தன்மை நம்மை முழுமையாக்கும் என்று சொன்னவர் பாஸ்ராவைச் சேர்ந்த ஹசன். இவர் ஆரம்ப கால இஸ்லாம் மார்க்கத்தின் ஆகச் சிறந்த புலவரும் தலைசிறந்த ஆன்மிக ஞானியும் சூபி ஞானத்தின் முன்னோடியுமானவர்.

முகமது நபி (ஸல்) அவர்கள் மறைந்த பத்தாம் வருடமான 642-ல் மதினாவில் மூஸாவுக்கும் ஹைராவுக்கும் இவர் மகனாகப் பிறந்தார். மூஸா சயித் பின் தபித்திடம் அடிமையாக இருந்தார். பின் அவரிடம் இருந்து விடுதலையடைந்து காலிஃப் அபு பகர் சித்திக்கின் முன்னிலையில் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார்.

ஒரு அடிமைக்கு மகனாக இவர் பிறந்தபோதிலும் பின்னாளில் வளர்ந்து இறைமையியல் வல்லுநராகத் திகழ்ந்தார். ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னும் இன்றும் இவர் இஸ்லாம் மார்க்கத்தின் மிகப் பெரிய மகானாகப் போற்றப்படுகிறார்.

ஹசனின் தாயார் முகமது நபி (ஸல்) அவர்களுடைய மனைவியான உம்மு சல்மாவின் பணிப்பெண் ஆவார். இவரது ஒளி வீசிய அழகிய முகத்தைப் பார்த்த காலிஃப் உமர் பின் அல்-கத்தாப் இவருக்கு ஹசன் என்று பெயர் சூட்டினார்.

ஏழு சகாபாக்களில் (சட்டங்களை இயற்றுவோர்) ஒருவரான சயித் பின் தாபித் அவர்களின் வீட்டில்தான் ஹசன் வளர்ந்தார். இவர் திருக் குரானைத் தொகுப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உம்மு சல்மாவால் வளர்க்கப்பட்டார். இவருக்கு நபிகள் நாயகத்தின் (ஸல்) போதனைகளை உம்மு சல்மா போதித்தார்.

வளர்ந்த பின்பு ஹசன் நபிகள் நாயகத்தின் (ஸல்) பள்ளியில் மாணவரானார். அங்கு முகமது நபிகளின் (ஸல்) நெருங்கிய சகாக்களிடமிருந்து ஞானத்தைப் நேரடியாகப் பெற்றார். ஹஸன் குரானை முழுவதும் மனனம் செய்தார். ஹஸன் பதினான்காம் வயதில் அலி பின் அபி தாலிப்பின் சீடரானார். அதன் பின் அவரது ஒப்பற்ற பக்தியின் காரணமாக அவரது தலைமுறையின் முக்கியமான ஆன்மிக ஞானியாகத் திகழ்ந்தார்.

தன்னை அறியும் பயணம்

ஹஸனின் பதினைந்து வயதில் அவருடைய பெற்றோர்களுடன் பாஸ்ராவில் குடியேறினார். இந்தக் குடியேற்றம் அவருக்கு ஹஸன் பாஸ்ரி என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அந்தக் காலத்தில் பாஸ்ரா (ஈராக்) ஞானத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தது. அங்கு அப்துல்லா பின் அப்பாஸ் மற்றும் ஹத்தான் பின் அப்துல்லா ஆகியோரிடம் மறை ஞானத்தை முழுவதும் கற்றுத் தேர்ந்தார். பின் விரைவில் அங்கு ஹதீஸ் சொல்வதில் புகழ் பெற்றவராக மாறினார். இவர் ஒன்பது புத்தகங்களில் 1,400 ஹதீஸ்களைப் பதிவுசெய்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் முதிர்ச்சியடையாத சமூகத்தில் நிலவிய ஊழலும் பொருள் சார்ந்த வாழ்வின் மீதான ஆசையும் அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. இந்தப் போக்கை எதிர்க்கும் விதமாக ஹசன் தன்னலம் மறுத்து பக்தி சார்ந்த வாழ்வில் முழுவதும் மூழ்கினார். பின் ஒரு துறவியாக மாறித் தன்னை அறியும் பயணத்தை மேற்கொண்டார்.

மரணத்துக்குப் பின்னான வாழ்வைப் பற்றி இவர் அதிகம் பேசுவார். தன் உரையைக் கேட்பவர்களிடம், அவர்களது ஒழுக்கக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவார். பின் அதைச் சரிசெய்வதற்கான வழிமுறையை, குரானில் இருந்து கற்றவற்றின் மூலம் எடுத்துரைப்பார்.

பாஸ்ராவில் உள்ள மிகப் பிரம்மாண்டமான மசூதியில் நீண்ட வகுப்புகளை நடத்துவது ஹஸன் அல் பாஸ்ரியின் வழக்கம். மக்கள் நிறைந்து வழியும் அந்த வகுப்புகளில் குரானையும் ஹதீஸ்களையும் ஒழுக்க நியதிகளையும், அரபி மொழியையும் தஜ்வீத்தையும் மக்களுக்குப் போதித்தார். ஹஸன் இயற்கையிலேயே மிகச் சிறந்த பேச்சாற்றலை வரமாகப் பெற்றிருந்தார். இவருக்கு எண்ணற்ற சீடர்களும் மாணவர்களும் இருந்தனர்.

ஹஸனின் உரைகளையும் மணிமொழியையும் கடிதங்களையும் அரேபிய ஞானிகள் பாதுகாத்து வைத்துள்ளனர். ஹஸன் பெற்ற புகழுக்கும் மரியாதைக்கும் ஆன்மிக ஞானமும் அறிவும் மட்டும் காரணமல்ல, வாழ்வில் ஹஸன் கடைப்பிடித்த எளிமையும் தன்னடக்கமும் இறைப்பற்றும் அதற்கு முக்கியக் காரணங்கள். எண்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்த ஹஸன், தன் வாழ்நாள் முழுவதும் தன் சமுகத்துக்கு ஞானத்தையும் ஆன்மிக அறிவையும் வாரி வழங்கிக்கொண்டே இருந்தார்.

துறவு பற்றிய பார்வை

துறவு வாழ்வின் மூலம் ஹஸன் பெற்ற உள் நோக்கிய பார்வை அவருக்குத் துறவைப் பற்றி ஒரு புதுப் பார்வையை அளித்தது. ஆசையை மட்டுப்படுத்தி வறுமையை விரும்பி ஏற்றுத் தன்னை இழந்து கடவுளை நாடுவது துறவின் நோக்கமாக இருந்தாலும், பெரும்பாலும் இந்தத் தன்னலத் துறப்பு தன் சுயம் பற்றிப் பெருமை கொள்ள வைத்து, தான் என்ற அகங்காரத்தை வளர்ப்பதாக உணர்ந்தார். துறவின் மூலம் எதை இழக்க விழைந்தோமோ அதையே தூபம் போட்டு வெறிகொண்டு வளர்ப்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது.

தன்னலம் மறுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) ஒருபோதும் ஆதரித்தது இல்லை. மேலும், இஸ்லாம் மார்க்கத்தின்படி, ஆன்மிக வாழ்வு என்பது உலகை நிரந்தரமாகத் துறந்து தனிமையில் துறவறம் பூணுவதில் இல்லை. ஆன்மிக வாழ்வு என்பது உலகோடு ஒட்டி இருந்து மக்களுக்கு சேவை ஆற்றுவதில் இருக்கிறது என்று தன் சீடர்களுக்கும் மாணவர்களுக்கும் போதித்தார்.

ஹஸன் தன் வாழ்வின் மூலமும் போதனையின் மூலமும் பொருள் சார்ந்த வாழ்வில் மூழ்கி உழல்பவர்களுக்கும் தன்னை வருத்திக் கடும் துறவை விரும்பி ஏற்றவர்களுக்கும் இடையே பாலமாகத் திகழ்ந்தார். இந்த இரண்டு தரப்பையும் இரு பக்கங்களாகக் கொண்ட நாணயமாக இவர் இருந்தார்.

மனம் பற்றி அறிதல்

மனிதனின் மனம் பற்றி அறிவதுதான் எல்லா ஆன்மிக வழிமுறைகளின் முக்கிய அம்சம். சந்நியாசம் மற்றும் மனிதனின் அகங்காரம் பற்றிய இவரது பார்வை மனித உளவியல் துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் அரேபியர்களால் சிக்மண்ட் பிராய்ட் மற்றும் கார்ல் யுங் போன்ற நவீன உளவியல் மேதைகள் தோன்றுவதற்கு முன்பே உளவியல் துறையைக் கற்று அதில் சிறந்து விளங்க முடிந்தது.

ராபியா பாஸ்ரி ஹஸனுடன் மேற்கொண்ட நீண்ட விவாதங்கள் ராபியாவின் ஆன்மிக வாழ்வுக்குப் பெரும் வழிகாட்டியாகத் திகழ்ந்த அல்லாவைத் தவிர ஹஸன் யாரிடமும் பயம் கொள்ளாததால், இவர் அடிக்கடி மன்னர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அறிவுரைகளை வழங்கினார். அரசர்களைக் கடுமையாக விமர்சித்த போதிலும், அவர்கள் இவர் அறிவுரையை விரும்பி ஏற்றது, இவரது ஆளுமையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இந்த உலகம் நம்மைச் சுமந்து செல்லும் ஒட்டகம். நாம் அதை வழிநடத்தினால் நமது பயணத்தின் இலக்கை அடைவோம். மாறாக நம்மை அது வழி நடத்தினால் நாம் அழிந்து போவோம் என்று அவர் சொன்ன வாக்கியத்துக்குச் சாட்சியாகத் திகழ்ந்த ஹஸனின் வாழ்வு 731-ம் வருடம் அவரது 89-ம் வயதில் முடிவுற்றது.

“ சிறுவன் ஒருவன்

கையில் ஒளியேந்தி

எதிரில் வந்தான்,

அவனை நிறுத்தி

ஒளியை எங்கேடா

பெற்றாய் என்று

ஆர்வமாகக் கேட்டேன்?

அதை ஊதி அணைத்தான்.

பின் என்னிடம், அது

எங்கே போயிற்று என்று

அப்பாவியாகக் கேட்டான்?”

என்று அவர் எழுதிய கவிதையில் ஒளியைப் போன்று அவர் அணைந்த அந்த நாளில் ஒட்டுமொத்த பாஸ்ராவும் அவரை வழியனுப்பக் கூடியது. முதன் முறையாக பாஸ்ராவின் அந்தப் பிரம்மாண்ட மசூதி சாயங்காலம் அஸர் தொழுகைக்கு யாரும் வராமல் தனிமையில் நின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x