Published : 06 Nov 2017 04:53 PM
Last Updated : 06 Nov 2017 04:53 PM
அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஐப்பசி திருக்கல்யாணப் பெருவிழா. அடைமழையிலும் காலையிலும் மாலையிலுமாக, அம்மையும் அப்பனும் திருவீதியுலா வந்து, இன்னும் குளிர்விக்கிறார்கள், நெல்லைச் சீமையை!
இந்த வேளையில்... நெல்லையப்பர் ஆலய அழகைக் கொஞ்சம் பார்ப்போம். கலை நுட்பத்தை அறிந்து வியப்போம்!
நெல்லையப்பர் கோயிலின் சுவாமி சந்நிதி வழியாக கோயிலுக்குள் வரும்போதே, ஸ்ரீவிநாயகரையும் ஸ்ரீகந்தபெருமானையும் தரிசிக்கலாம். தெற்குப் பக்கம் சைவசமயக் குரவர்களுடன் சேக்கிழாரையும் வழிபடலாம். அடுத்து, சர்வ நல்வாத்திய மண்டபத்தில் அமர்ந்து பாசம் எனும் பலிபீடம் பின்னதாகவும் பசுவான ரிஷபம் இடையேயும் பதி எனும் சிவம் முன்னதாகவும் உள்ள தத்துவக் குறியீடை நினைத்து உருகியபடியே நெல்லையப்பர் சந்நிதியை அடையலாம்!
இந்த மண்டபத்துக்கு ரிஷப மண்டபம் என்று பெயர். கி.பி. 1654-ல் சிவந்தியப்ப நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது எனத் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு. இதன் முன்னே இருக்கிற பெரிய கொடிமரமானது, கி.பி.1555-ல் காளயுக்தி வைகாசி மாதத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகப் பழமையானது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
அடுத்து மணி மண்டபம். ஒரே பெருங்கல்லில் 64 தூண்கள் அமையும்படியும், ஒவ்வொரு சிறு தூணையும் கொஞ்சம் தட்டினால் வேறு வேறு இசை வெளிப்படும்படியாகவும் அமைந்திருப்பது அந்தக் கால சிற்பநுட்பத்துக்கும் கலைநயத்துக்கும் ஒருசோறு பதம்! இந்த மண்டபம் கி.பி. 7-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்றும் மன்னன் நின்றசீர் நெடுமாறன் அமைத்துக் கொடுத்தான் என்றும் நெல்லையப்பர் கோயிலின் ஸ்தல வரலாறு கூறுகிறது.
மணி மண்டபத்திலிருந்து மேற்கில் உள்ள மகாமண்டபம் வழியே நேரே சென்று வேணுவன நாதரை, நெல்லையப்பரை, தென்னாடுடைய சிவனை வழிபடலாம். இந்த சந்நிதிக்கு வடக்கே, திருமால் நெல்லைக் கோவிந்தரும் வெளியே நடு மண்டபத்தில் உள்ள பிள்ளையார், சந்திரசேகர், உட்பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, தாருகா முனிவரின் பிறப்பு ஈடேற சிவனார் எடுத்த பிட்சாடனர் திருக்கோலம், சண்டேஸ்வரர் ஆகியோரை அடுத்தடுத்துத் தரிசிக்கலாம். முக்கியமாக, வடக்குப் பிராகாரத்தில் பள்ளத்தில் வேணுவன நாதர் வெளிப்படுவதற்கு முன்தோன்றியத் திருமூல நாதர் எனும் திருநாமம் கொண்ட சிவனாரைத் தரிசிக்கலாம்.
அதையடுத்து, ஸ்ரீசிவ துர்கை, ஸ்ரீபாலவயிரவர், தெற்குப் பக்கம் உள்ள நெல்லையப்பர் - காந்திமதியின் உற்ஸவ மூர்த்திகள், தெற்குப் பிராகாரத்தில் உள்ள சைவசமயக்குரவர்கள், சந்தானக்குரவர்கள், சப்தகன்னிகள், சப்த ரிஷிகள், அறுபத்துமூவர் ஆகியோரையும் ஸ்ரீபொல்லாப் பிள்ளையாரையும் தரிசித்து வணங்கலாம். ஸ்ரீராவணேஸ்வரர் தாங்கி நிற்கும் முறையிலான உயர்ந்த பீடத்தில் திகழும் திருக்கயிலாயத்தையும் சிவபார்வதியின், அம்மையப்பனின் திருமணக் கோலத்தையும் தரிசித்து நெகிழலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT