Published : 30 Nov 2017 11:19 AM
Last Updated : 30 Nov 2017 11:19 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 10: எத்துணை கொள்கின்றீர் பித்து உலகீரே?

 

பொ

ருள் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் எந்த இன்பத்தையும் பெற முடியாது. அவ்வாறே, அருள் இல்லாதவர்கள் அவ்வுலகத்தில் எந்த இன்பத்தையும் பெற முடியாது. பொருள் இல்லாதவர்களுக்காவது, இன்றைக்கு இல்லாவிட்டாலும் பின்னாளில் என்றைக்காவது பொருள் வரும்; செல்வத்தில் பூத்து விளங்கிப் பொலிவார்கள். ஆனால், அருள் இல்லாதவர்களுக்குப் பின்னாளில் என்றைக்குமே அது வரும் வாய்ப்பில்லை; அவர்கள் விளங்கப் போவதும் இல்லை என்கிறது வள்ளுவம்.

தற்போதைய சமூக நிகழ்வுகள் அதைக் காட்டிக்கொடுக்கின்றன. பொருள் இல்லாமல் வாழ்வைத் தொடங்கியவர்கள் எப்படியோ கொஞ்சம் பொருளைப் பெறுகிறார்கள். கந்து வட்டிக்குக் கொடுக்கிறார்கள்; கசக்கிப் பிழிகிறார்கள்; இன்னும் பல்வேறு வகைகளில் பெற்ற பொருளைப் பெருக்குகிறார்கள். பெருக்கிய பொருளில் கொஞ்சத்தைக் கொடுத்துப் புகழை வாங்குகிறார்கள். இப்படியாகப் பொருள் வருகிறது; புகழ் வருகிறது; அரசாங்கத்தின் சார்புநிலைகளைப் பொறுத்து அரிதாகச் சில சமயங்களில் பிடியாணைகள்கூட வருகின்றன. ஆனால், அருள் வருமா? சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.

இருக்கட்டும். அதென்ன அருள்? அறம் விளக்கும் வள்ளுவர் அருள் விளக்காமல் விடுவாரா? அருள் என்பது அன்பின் குழந்தை. அன்பு என்பது என்ன? அருள் என்பது என்ன? தொடர்புடையவர்கள்மேல் உறுவது அன்பு; தொடர்பே இல்லாதவர்களுக்காகவும் உருகுவது அருள்.

இறையருள் பெற ஜீவகாருண்யம்

அருளை இறை அருள், உயிர் அருள் என்று இரண்டாக வகுக்கிறார். உயிர் அருளை ஜீவகாருண்யம் என்று அழைக்கிறார் வள்ளலார். இறையருள் பெறவேண்டுமானால் உயிர் அருள் என்ற ஜீவகாருண்யம் வேண்டும் என்கிறார்.

உடல்களால் வேறுபாடுகள் காணப்பட்டாலும் உயிர்கள் என்ற நிலையில் எந்த வேறுபாடும் இல்லை. உயிர்களுக்கு உடம்பு செய்துகொடுப்பவன் இறைவன். ஒரு தாயின் வழியாக வந்தவர்கள் எல்லோரும் உடன்பிறப்புகள் ஆவதுபோல, இறைவனின் வழியாக உடம்பெடுத்து வந்தவர்களும் உடன்பிறப்புகள்தாம்; ஒரே மாதிரியான உரிமை உடையவர்கள்தாம். உடன்பிறப்புகளில் ஒருவர் துன்பமடையும்போது மற்றவர் அதற்காக உருகுவது இயற்கை. தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும். அதுபோல, ஓர் உயிர் துன்பமடைகிறபோது, மற்றோர் உயிர் அதற்காக உருகுவதும் இயற்கையே. சிலர் அப்படி உருகுவதில்லையே என்றால், அதற்குக் காரணம் அவர்கள்மேல் அறியாமையின் அழுக்குப் படிந்திருக்கிறது; அதன் காரணமாக அவர்களது அறிவு, உணர்ச்சியில்லாமல் தடித்துப் போயிருக்கிறது. அழுக்குப் படிந்த கண்ணாடி உருவம் காட்டுவதில்லை அல்லவா?

சரி, என்ன செய்ய வேண்டும்? அறிவுதான் முதன்மையானது. ஏனென்றால் உண்மை-பொய், நல்லது-கெட்டது, நிலையானது-நிலையற்றது என்று எல்லாவற்றையும் ஒருவர்க்கு அடையாளம் காட்டுவது அறிவுதான். எனவே, அதை அடைந்தாக வேண்டும். அடையவிடாமல் தடுக்கிறது பசி. அது ஒருவருடைய குடிப் பிறப்பை அழிக்கும்; தனிச் சிறப்புகளை ஒழிக்கும்; கற்றவற்றையெல்லாம் கைவிடச் செய்யும்; வெட்கத்தை விரட்டும்; மாண்பைச் சீர்குலைக்கும் பசிப் பிணி என்னும் பாவி! அதைத் தீர்த்தவர்களின் புகழைச் சொல்வதற்கு என் நாக்குக்குத் தெம்பு கிடையாது என்கிறது மணிமேகலை.

குடிப்பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்;

நாண்அணி களையும்; மாண்எழில் சிதைக்கும்;

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி! அது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது

(மணி., பாத்திரம் பெற்ற காதை, 76-81)

அதையே சொல்கிறார் வள்ளலார். நல்லது கெட்டதை வேறுபடுத்திக் காட்டுகிற நல்லறிவை அடைவதுதான் முதன்மையானது என்ற நிலையில், பசி அதை அடைய விடாமல் தடுக்கிறது என்ற நிலையில், வள்ளலார் சொல்கிறார்: ‘பசி என்ற நச்சுக் காற்று, ஒருவருடைய அறிவு என்ற விளக்கை அணைக்க முயல்கிறபோது, அவருக்கு உணவு கொடுங்கள்; அவருடைய அறிவு விளக்கு அணைந்துவிடாமல் பாதுகாத்துக் கொடுங்கள். இதுவே ஜீவகாருண்யம். இந்தத் திறவுகோலைக் கொண்டுதான் அவ்வுலகம் என்ற மேல்வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போக முடியும்; புண்ணியமூர்த்திகளை வலம் செய்தல், தீர்த்தமாடுதல், தோத்திரம் செய்தல், யாகம் செய்தல், பூசை செய்தல், ஐம்புலன்களை அடக்குதல் ஆகியவற்றினால் அன்று. சடங்குகளைச் செய்கிறவர்களுக்கு அவற்றால் சிறு பலன்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும்; ஆனால் நினைவிருக்கட்டும், மேல்வீட்டுக் கதவைத் திறக்கும் திறவுகோல் ஜீவகாருண்யம்தான்; கடவுள் வழிபாடு என்பதே ஜீவகாருண்யந்தான்’ என்று ஐயந்திரிபின்றி அறிவிக்கிறார் வள்ளலார்.

வள்ளலாரின் முன்னோடி திருமூலர்

வள்ளுவம், மணிமேகலை என்று ஒரு தொடர்மரபில் வருகின்ற அருள் என்ற கருதுகோளை மேலும் வளமாக்கி வள்ளலாருக்குக் கையளித்தவர் திருமூலர். வள்ளலாரின் முன்னோடி அவர். அவர் சொல்கிறார்:

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா;

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

(திருமந்திரம். 1857)

படம்போல எழுப்பி வைத்திருக்கிற மாடக் கோயிலின் இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், அது நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்குப் போய்ச் சேராது. ஆனால் நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்கு ஒன்று கொடுத்தால், அது படமாடக் கோயிலின் இறைவனுக்கு மிக உறுதியாய்ப் போய்ச் சேரும்.

மேற்படிப் பாடலில் ‘நம்பர்’ என்பதற்கு உரைகாரர்கள் ‘சிவனடியார்’ என்று பொருள் கொண்டிருக்கிறார்கள். வள்ளலார் அதற்கு ‘உயிர்கள்’ என்று பொருள் கொண்டிருக்கக்கூடும். ஏனென்றால், எல்லா உயிர்களும் உடன்பிறப்புகள் இல்லையா? ஆகவே நம்மவர்கள் இல்லையா?

மேற்படிப் பாட்டால் வள்ளலாரின் கருத்தைக் கெட்டிப்படுத்தும் திருமூலர் மற்றொரு பாட்டால் மிக எளிய வழிமுறையில் அந்தக் கருத்தைச் செயலாக்கும் விதத்தைக் கற்பிக்கிறார்:

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை;

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

(திருமந். 252)

இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை; எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். கோபூசை செய்ய வேண்டும் என்பதில்லை, பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை; உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்துப் புகழ்ந்துரை செய்து முதுகு சொறிய வேண்டும் என்பதில்லை; யாருக்கும் இன்னுரை சொன்னாலே போதும் என்று எல்லார்க்கும் இயல்கிற வழிமுறை சொல்கிறார் திருமூலர். பகட்டல்ல; பற்றுதலும் பரிதவிப்புமே கணக்கில் வரும் என்பது திருமூலர் கருத்து.

அதனால்தான் வள்ளலார் சொல்கிறார்: ‘சாத்திரங்களில் சிறந்தது திருமந்திரம்; தோத்திரங்களில் சிறந்தது திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.’ (உபதேசக் குறிப்புகள்)

எல்லாம் சரி. சட்டியில் அருள் இல்லாத வட்டிக்காரர்களைப் பற்றித் திருமூலரும் வள்ளலாரும் ஒன்றும் சொல்லவில்லையா?

திருமூலர் எழுதுகிறார்:

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன

ஒட்டிய நல்அறம் செய்யாதவர் செல்வம்

வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்

பட்டிப் பதகர் பயன் அறியாரே

(திருமந்.260)

எட்டி மரத்திலும்கூடத்தான் பழங்கள் பழுக்கின்றன. என்ன பயன்? யார் உண்ண முடியும்? பழுத்துப் பழுத்து உதிர வேண்டியதுதான். அறத்தின் வழியில் அருள் சேர்க்காமல், வட்டிக்கு மேல் வட்டியிட்டுப் பாவிகள் சேர்க்கும் பொருளால் யாருக்குப் பயன்? பயன் தெரியாமல் பொருள் சேர்க்கிறார்கள் முட்டாள்கள்.

அதே தடத்தில், எடுத்துக்காட்டைக்கூட மாற்றாமல் வள்ளலார் எழுதுகிறார்:

...பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர்; வயிற்றுப்பெட்டியை நிரப்பிக்கொண்டு

ஒட்டிஉள் இருந்தீர்;

பட்டினி கிடப்பவரைப் பார்க்கவும் நேரீர்;

பழம் கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்;

எட்டிபோல் வாழ்கின்றீர்;

கொட்டிபோல் கிளைத்தீர்;

எத்துணை கொள்கின்றீர் பித்து உலகீரே?

(அருட்பா, VI, உறுதிகூறல், 6)

‘கிறுக்கர்களே! இன்னும் எவ்வளவு சேர்த்தால் உங்களுக்கெல்லாம் நிறையும்?’ என்று கேட்கிறார்கள் அருளாளர்கள். இந்தக் கேள்வியை நம்மால் யாரிடமும் கேட்க முடிகிறதா? அல்லது நம்மிடந்தான் இந்தக் கேள்விக்கு விடை இருக்கிறதா?

(கேள்விகள் தொடரும்)
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x