Published : 10 Nov 2017 02:50 PM
Last Updated : 10 Nov 2017 02:50 PM
திருவண்ணாமலையில் இருந்து புரோகிதர் ஒருவர், மாதம் தவறாமல் காஞ்சி மகாபெரியவரைத் தரிசிக்க வந்து விடுவார். ஒருமுறை அவர் பெரியவரைத் தரிசிக்க வரிசையில் காத்து நின்றார். அப்போது பெரியவர் தன் சீடரை அழைத்து, 'அந்த திருவண்ணாமலை புரோகிதரை வெளியே போகச் சொல்' என்றார்.
சீடருக்கு காரணம் ஏதும் புரியவில்லை. குழம்பிப் போனார். அவர் தகவலை புரோகிதரிடம் சொல்ல அதிர்ந்து போன அவர், தயங்கியபடியே வெளியேறினார். ஆனால் அதேசமயம் மடத்து வாசலில் நின்று கொண்டே இருந்தார்.
விஷயம் பெரியவர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மகாபெரியவர் சீடரை அழைத்து, ''அவன் ஊர்லேருந்து கிளம்பறச்ச, ஒரு வீட்டில் இருந்து வந்தவர்கள் அவங்க வீட்ல ஒரு இறப்பு நடந்துருத்துன்னு சொன்னா. காரியங்கள் செய்து கொடுங்கோனு கேட்டுண்டிருக்கா. ஆனா அவனோ அதைச் செய்யாம, மறுத்துட்டு மடத்துக்குப் போறதாச் சொல்லி, இங்கே வந்துட்டான். அவனை உடனே ஊருக்குப் போய் அந்தக் காரியங்களை உரிய நாட்களுக்குள் முடித்துக் கொடுத்து, 'சுபநிகழ்வு' முடிந்தப்புறமா, இங்கே வந்தாப் போதும்னு சொல்லு'' என்றார்.
இதை சீடர் அவரிடம் சொல்ல... அந்தப் புரோகிதர் அதிர்ந்து போனார். ஊரில் நடந்த விஷயம் இந்த மகானுக்கு எப்படி தெரிந்தது ? ஆச்சரியப்பட்டார்.
மகா பெரியவரின் உத்தரவுப்படி ஊருக்குப் போய், நடந்ததை அவர்களிடம் சொல்லி, அந்த குடும்பத்திற்குத் தேவையான காரியங்களையெல்லாம் செய்து முடித்த பிறகு ஒருநாள் மடத்துக்கு வந்தார். அவரை அழைத்தார் மகாபெரியவர்.
''சுபகாரியங்களைக் கூட மறுக்கலாம். ஆனா இதுமாதிரியான துக்க விஷயங்களுக்கு வரமாட்டேன்னு சொல்லாதே. ஒரு புரோகிதரா இருந்துண்டு இப்படிச் சொல்லவே கூடாது. அதுமட்டுமில்லாம... துக்கக் காரியங்கள் செய்றதுக்கு சம்பாவனை (பணம்) கேக்கக் கூடாது. நீ படிச்ச வேதத்துக்கு நீ கொடுக்கற மரியாதை அதுதான்!'' என்றார் மகாபெரியவர்.
அந்தப் புரோகிதர் கண்ணீருடன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT