Last Updated : 22 Nov, 2017 03:10 PM

 

Published : 22 Nov 2017 03:10 PM
Last Updated : 22 Nov 2017 03:10 PM

மனிதனும் தெய்வமாகலாம்! - காஞ்சி மகானின் அன்புமொழி!

காஞ்சி மகாபெரியவர், வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து, இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு பேசத் துவங்கினார். அவர் பேசத் தொடங்கியதும் எல்லோரும் இன்னும் அமைதியானார்கள்.

காஞ்சி மகானின் வேதவுரை இது...

‘‘ஒரு வழியில் பார்த்தால், மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை சுவாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால், திருப்பி அடிக்க ஒரு ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் திருப்பி அடிக்க கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்கு கொம்பு இல்லை: நகம் இல்லை.

குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடலில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டிருக்கிறார். யாராவது அடிக்கவந்தால் எதிர்க்க முடியவில்லை. ஓடலாம் என்றாலும் வேகமாக ஓடமுடியாது. குதிரைக்குக் கொம்பு இல்லாவிட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை. இருந்தாலும் சுவாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.

இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான்; துக்கப்படுகிறான். பிறந்துவிட்டதனாலே இவ்வளவு கஷ்டம். இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால், என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்பு பண்ணியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக இத்தனை கசை அடி வாங்கவேண்டும் என்று விதித்திருப்பதால், இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆனபிறகு, இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது.

காமத்தினாலே பாபத்தைச் செய்வதனாலே, ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால், ஜனனம் இல்லை. கோபத்தினாலே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்கவேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்துவிட்டால் பாவம் செய்யாமல் இருக்கலாம்.

ஆசைக்குக் காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால், அதனிடம் ஆசை வருகிறது. உண்மையில், சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.

ஒரு மாடு, கண்ணாடியில் தன்னைப் பார்த்து விட்டு இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப் போகிறது. ஒரு மனிதன் தன் பிரதிபிம்பத்தை பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான்.

இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால், கோபம் வருகிறது. கோபம் வருவதினால், பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாபம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பம் இல்லை.

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால் கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாவிந்தத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்!

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்கவேண்டும். அப்புறம் தெய்வமாகவே உயர்த்திவிடவேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன.

சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்கவிடக் கூடாது. இவனை நல்லவனாக ஆக்கி, அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ணவேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன’’ என அருளினார்.

பக்தர்கள் கூட்டம் அதைக் கேட்டு, இன்னும் அமைதியானது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x