Last Updated : 10 Nov, 2017 03:19 PM

 

Published : 10 Nov 2017 03:19 PM
Last Updated : 10 Nov 2017 03:19 PM

தானத்தில் சிறந்த கன்னிகா தானம்!

பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்பார்கள் சிலர். ஆனால், தானங்களிலேயே மிகப் பெரிதாக, மகா புண்ணியமாக, உயர்ந்த தானமாக கன்னிகாதானத்தைத் தான் சொல்லவேண்டும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர்தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆணுக்கு அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்று போற்றுகிறார்கள்.

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், மம த்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..'என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகா தானத்தைச் செய்கிறேன் என்பது மந்திரத்தின் அர்த்தம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

உங்களின் வம்சத்துக்காக, வம்ச விருத்திக்காக எங்கள் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப் பெரியது என்று சாஸ்திரம் போதிக்கிறது. ஞானநூல்களும் அவ்விதமே கொண்டாடுகின்றன.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும். ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x