Last Updated : 15 Nov, 2017 03:53 PM

 

Published : 15 Nov 2017 03:53 PM
Last Updated : 15 Nov 2017 03:53 PM

நரசிம்மருக்கும் பிரதோஷ பூஜை!

எல்லா சிவாலயங்களிலும் பிரதோஷ தினத்தன்று சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், சிவாலயம் சென்று பிரதோஷ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.

இதேபோல், நரசிம்மருக்கும் பிரதோஷ பூஜை உகந்தது. அந்த நாளில் நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இரணியன் வித்தியாசமாக வரம் ஒன்றை வாங்கியிருந்தான். அதாவது என்னைக் கொல்லும் சக்தி மனிதருக்கும் இருக்கக் கூடாது; மிருகத்துக்கும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கியிருந்தான். அதனால்தான் மனித உடலும் சிங்க முகமும் கொண்டு அவதரித்தார் நரசிம்மர்.

அடுத்து, வீட்டுக்குள்ளேயும் கொல்லக் கூடாது. வெளியேயும் சாகடிக்கக் கூடாது எனும் வரத்தைக் கேட்டிருந்தான். அதனால்தான் இரணியனை வீட்டுக்குள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், வாசலுக்குக் கொண்டுவந்து, மடியில் கிடத்தி சம்ஹரித்தார் பெருமாள்.

என்னைக் கொல்லும் நேரம் காலையாகவும் இருக்கக் கூடாது இரவாகவும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கி ஆணவத்துடன் திரிந்தான். அதனால்தான் காலையும் இல்லாமல் இருளும் இல்லாத அந்திசாயும் வேளையாகப் பார்த்து, நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது.

அப்படி நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது... மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளான நேரம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில்... அவதரித்தது ஓர் பிரதோஷ நாளில் என்றும் சொல்வார்கள்.

ஆகவே, பிரதோஷ நாளின் போது, நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்ம தரிசனம் செய்வார்கள்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 28 வது கிலோமீட்டரில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் அமைந்து உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில். தலையெழுத்தையே திருத்தி அருளும் பிரம்மா தனிச்சந்நிதியில் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற தலம் இது.

கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகிய தரிசனங்கள். பிரதோஷத்தின் போது நந்திதேவருக்குத்தான் அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும் என்பது தெரியும்தானே. அப்போது நந்திதேவருக்கு அருகில் உள்ள தூண் ஒன்றில், நரசிம்மர் வதம் செய்யும் சிற்பத்தைத் தரிசிக்கலாம்.

இதேபோல், நரசிம்ம க்ஷேத்திரங்களிலும் பெருமாள் கோயில்களில் உள்ள நரசிம்மர் சந்நிதியிலும் பிரதோஷ பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x