Published : 08 Nov 2017 01:11 PM
Last Updated : 08 Nov 2017 01:11 PM
விநாயகருக்கு சிதறுகாய் பிரார்த்தனை எல்லோருக்கும் தெரியும்தான். நல்ல செயலை எப்போது தொடங்கினாலும் விநாயகருக்கு சிதறு காய் உடைத்து வழிபடுவோம். அதன் பிறகே காரியத்தில் இறங்குவோம். கணபதியைத் தொழுவதும் அவருக்கு சிதறுகாய் உடைப்பதும் நன்மைகள் பயக்கும் என்கிறது சாஸ்திரம்.
தேங்காயை ஓங்கி தரையில் அடித்து உடைக்கும்போது, அது உடைந்து சில்லுச்சில்லாகச் சிதறி ஓடும். அது போல விநாயகரின் அருளால் நம்மைப் பீடித்திருக்கும் தோஷங்களும், பாவங்களும், விக்னங்களும் வேதனைகளும் இந்தக் காய் உடைந்து சிதறுவது போல, நம்மை விட்டு சிதறி ஓடும். தடை நீங்கும் என்பதாக ஐதீகம் என்கிறார் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் பாஸ்கர குருக்கள். .
சகல தோஷங்களையும், பாவங்களையும் போக்கி அருளவேண்டும். நான் செய்யவிருக்கும் செயலுக்குப் பக்கத்துணையாக இருந்து அருள்பாலிக்கவேண்டும் . அந்தச் செயலுக்குக் குறுக்கே நிற்கும் தடைகள் அனைத்தையும் இதோ... இந்தச் சிதறுகாய் உடைந்து சிதறுவது போல என்னைவிட்டு சிதறி ஓடவேண்டும் என்று விநாயகரை வழிபடவேண்டும் என்கிறார்.
தேங்காயின் நார்ப் பகுதியை, முழுவதுமாக நீக்கி உடைக்க வேண்டும். தேங்காய் முற்றி இருக்க வேண்டும். தேங்காய் சில்லு சில்லாக உடைந்து சிதறும்படி உடைக்கவேண்டும். தேங்காய் உடைந்து சிதறுவதை பொருத்து காரியம் சித்தி பெரும். தேங்காய் சரியாக உடையவில்லை என்றால் மீண்டும் வேறு தேங்காய் வாங்கி உடைக்கவும். இதில் எந்த தோஷமும் இல்லை.
நாம் எதையாவது செய்யும் நாள், நேரம் சரியில்லை என்றால் சிதறுகாய் உடைப்பது நல்லது. வெளியூர் பயணம் செய்யும்போது, பத்திரம் பதிவு செய்வது, கல்யாண வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, பிறந்த நாள் மற்றும் கல்யாண நாள் முதலான விசேஷ நாட்கள், சரியான முடிவை எடுக்க சிரமப்பட்டுத் தவிக்கும் தருணம், என வாழ்வின் முக்கியமான வேளைகளில் சிதறுகாய் உடைத்துவிட்டு தொடங்க வேண்டும். அப்படித் தொடங்கினால், காரியத் தடையும் இருக்காது. காரியமும் வீரியமாகி, வெற்றியையேத் தரும் என்கிறார் அவர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT