Last Updated : 03 Nov, 2017 06:31 PM

 

Published : 03 Nov 2017 06:31 PM
Last Updated : 03 Nov 2017 06:31 PM

பூரச்சலங்கை விழா, திருக்கல்யாணம்: சிதம்பரத்தில் கோலாகலத் தொடக்கம்!

தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாணம், பூரச்சலங்கை விழா முதலான விழாக்கள் கொடியேற்றுடன் தொடங்கி, தினமும் வீதியுலா வைபவங்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.

இந்த ஆண்டு சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் சூரசம்ஹார உத்ஸவம் கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது. வருகிற நவம்பர் 13ம் தேதி அன்று ஸ்ரீ சுப்ரமணியர் பிறப்பும், நவம்பர் 19ம் தேதி தொடங்கி 24ம் தேதி சஷ்டி அன்று சூரசம்ஹாரம் வைபவமும் நடைபெறுகிறது. மறுநாள் 25ம் தேதி, வள்ளி தெய்வயானை ஸ்ரீசுப்ரமணியர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

சிதம்பரம் திருத்தலத்தில், ஸ்ரீசிவகாம சுந்தரி அன்னைக்கு, ஆண்டுதோறும் ஐப்பசி பூர உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் சிவகங்கை தீர்த்தக் குளத்தின் மேற்குக் கரையில் திருக்காமக் கோட்டம் சிறப்பாக அமைந்துள்ளது.

ஹேவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 17ம் தேதியான 3.11.17 இன்று வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளுக்கு கொடியேற்றத்துடன் உத்ஸவம் தொடங்குகிறது.

இதையடுத்து தினமும் காலையும் மாலையும் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறுகின்றன. 11ம் தேதி சனிக்கிழமை திருத்தேர் உத்ஸவம் நடக்கிறது.

12ம் தேதி மாலையில் பட்டு வாங்கும் உத்ஸவமும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பூரசலங்கை உத்ஸவமும் மறுநாள் 13ம் தேதி காலையில் தபசு உத்ஸவக் கோலத்திலும் அம்பாள் வீதியுலா வரும் வைபவம் நடைபெறுகிறது. அன்றைய இரவு, ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீசோமாஸ்கந்தர் திருக்கல்யாண உத்ஸவ வைபவம் விமரிசையாக நடைபெறும் என்று சிதம்பரம் நடராஜர் கோயிலின் வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார்.

உத்ஸவத்தை முன்னிட்டு, காலை மாலை இரண்டு வேளையும் அம்பாள் நான்கு வீதிகளிலும் வலம் வருவார். கொடியேற்றத்தின் முதல் நாள் சூரிய பிரபை வாகனத்திலும் இரண்டாம் நாள் சந்திர பிரபை வாகனத்திலும் 3ம் நாள் பூதகி வாகனத்திலும் அம்பாள் வீதியுலா வருவார்.

4ம் நாள் சிம்ம வாகனத்திலும் 5ம் நாள் ரிஷப வாகனத்திலும் 6ம் நாள் காமதேனு வாகனத்திலும் 7ம் நாள் கைலாய வாகனத்திலும் 8ம் நாள் குதிரை வாகனத்திலும் எழுந்தருளும் அம்பாள், 9ம் நாள் திருத்தேரில் திருவீதியுலா வருவார். 10ம் நாள் தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும். 11ம் நாள் விழாவில், சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெறும்.

பட்டுவாங்கும்உத்ஸவம்

இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் பட்டு வாங்கும் நிகழ்வும் ஒன்று. அம்பாள், கோயிலில் இருந்து புறப்பட்டு சபையின் சந்நிதியில் ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானிடம் முதன்முதலில் ஆசி வாங்கி, பட்டு வாங்கும் வைபவம் கண் கொள்ளாக் காட்சி. அதையடுத்து எல்லோரும் பட்டு சாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சுண்டல் நைவேத்தியம் செய்து பக்தர்கள் அனைவருக்கும் வழங்குவார்கள்.

ஐப்பசி திருக்கல்யாணம், பூரச்சலங்கை முதலான விழாக்களையொட்டி தினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள். தினமும் பிரசாதம் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் ஆகியன நடைபெறும்.

சில ஆண்டுகளில் ஐப்பசி மாதம் பூர நாளுக்கு முன்பாகவே வளர் பிறை சஷ்டி வந்து விடும். அப்படி வந்தால் அந்த சஷ்டியைக் கொண்டாடாமல் அடுத்த சஷ்டியில்தான் விழா கொண்டாடப்படும். சிதம்பரம் தலத்தில் இதுவே நடைமுறையாக இருந்து வருகிறது. அதாவது, சிவ - பார்வதி திருக்கல்யாணத்திற்குப் பிறகே கந்தனின் பிறப்பும் சூரசம்ஹாரமும் நிகழ்ந்ததால் இங்கே தில்லையம்பதியில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது என்றார் வெங்கடேச தீட்சிதர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x