Published : 05 Aug 2023 01:37 PM
Last Updated : 05 Aug 2023 01:37 PM
தூத்துக்குடிள்: பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயப் பெருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கும். ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறும். முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் ஆகஸ்ட் 5-ம் தேதி தங்கத் தேர் பவனி நடைபெறும்.
நடப்பாண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தங்கத் தேர் இன்று பவனி நடைபெறுகிறது. இதற்கு முன்பு 15 முறை முத்துநகர வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி வந்துள்ளது. இது 16-வது நிகழ்வாகும்.
பனிமய மாதாவின் அற்புத சொரூபம் தூத்துக்குடி வந்தடைந்த 250-வது ஆண்டு நிறைவாக முதல் முறையாக தங்கத் தேர் பவனி 5.8.1805 அன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. சில தாமதங்கள் காரணமாக 2.2.1806-ல் நடைபெற்றது.
அதன்பின் 1872, 1879, 1895-ம் ஆண்டுகளில் தங்கத் தேர் பவனி நடைபெற்றது. முதல் தங்கத் தேர் பவனியின் 100-வது ஆண்டின் நினைவாக 5-வது தங்கத் தேர் பவனி 1905-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு 1908, 1926, 1947-ம் ஆண்டுகளிலும், 1955-ம் ஆண்டு பனிமய மாதாவின் அற்புத சொரூபம் திருமந்திரநகருக்கு வந்தடைந்த 400-ம் ஜூபிளி ஆண்டு நினைவாக 9-வது தங்கத் தேர் பவனி நடைபெற்றது.
தாமஸ் பர்னாந்து ஆண்டகை குருத்துவ வெள்ளி விழா நினைவாக 10-வது தங்கத் தேர் பவனி 1964-ம் ஆண்டும், பாத்திமா பதியில் தேவ அன்னை காட்சி கொடுத்த 60-ம் ஆண்டு நினைவாக 11-வது தங்கத் தேர் பவனி 1977-ம் ஆண்டும், இரக்கத்தின் மாதா கோயில் கட்டப்பட்ட 400-ம் ஆண்டு நினைவாக 12-வது தங்கத் தேர் பவனி 1982-ம் ஆண்டும், ஏசு கிறிஸ்து பிறந்த 2000-ம் ஆண்டு நினைவாக 13-வது தங்கத் தேர் பவனி 2000-ம் ஆண்டும் நடைபெற்றது.
முதல் தங்கத்தேரின் 200-வது ஆண்டு நிறைவு, பசலிக்கா பிரகடனத்தின் 25-வது ஆண்டு நிறைவு மற்றும் இரக்கத்தின் மாதா கோயில் கட்டப்பட்ட 425-வது ஆண்டு நினைவாக 14-வது தங்கத் தேர் பவனி 2007-ம் ஆண்டு நடைபெற்றது.
திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா பேராலய 431-ம் ஆண்டு திருவிழா மற்றும் பேராலயம் எழுப்பப்பட்டதன் 300-ம் ஆண்டு நினைவாக 15-வது தங்கத் தேர் பவனி 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு 16-வது தங்கத் தேர் பவனி நடைபெறுகிறது.
தங்கத் தேரின் சிறப்பு அம்சங்கள்: தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத் தேரின் ஒவ்வொரு வடிவமைப்பும் பல வரலாறுகளை கூறுகிறது. அன்னையின் ஜெபமாலையில் உள்ள 53 மணிகளை குறிக்கும் வகையில் 53 அடி உயரத்தில் தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரின் உச்சியில் சிலுவைக்கு பதிலாக நட்சத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அன்னை மரியாள் 'விடியற்காலை விண்மீன்' என்பதை உணர்த்தும் வகையில் இந்த நட்சத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ் சுழன்று கொண்டிருக்கும் 9 பெரிய மீன்கள் இருக்கும். மேலும், தேவ மாதா விண்ணுக்கும், மண்ணுக்கும் அரசி என்பதை குறிக்கும் வகையில் பொன் மகுடம் ஒன்றும் இடம் பெற்றிருக்கும். நான்கு பக்கத்திலும் இருபக்க உருவம் கொண்ட நான்கு வான தூதர்கள் பறந்த நிலையில் இருப்பார்கள்.
தூய ஆவி வெண் புறா வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். 12 அப்போஸ்தலர்களை குறிக்கும் வகையில் தேரில் 12 தூண்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தேரின் மையப்பகுதியில் உள்ள பீடத்தில் தூய பனிமய அன்னை சொரூபம், கையில் குழந்தை ஏசுவுடன் வீற்றிருக்கும்.
மேலும், 8 வான தூதர்கள், இயேசுவை காண வந்த மூன்று அரசர்கள் உள்ளிட்ட 12 வேந்தர்கள், சவேரியார், இஞ்ஞாசியார், தோமையார் உள்ளிட்ட 12 புனிதர்கள், 4 கிளி உருவம், மேல்பாகம் மனித உருவமும், கீழ் பாகம் மீன் வடிவமும் கொண்ட கயல் கன்னியர் மற்றும் கயல் காளையர் உருவம் என பல்வேறு உருவங்கள் தேரில் கலை நயத்தோடு வடிமைக்கப்பட்டிருக்கும்.
முத்துப் பல்லக்கு: ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தங்க காகிதம் தேரில் ஒட்டப்பட்டுள்ளது. தேர் முழுவதும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த 9,000 கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேராலயத்தில் இருந்து அன்னையின் சொரூபத்தை தங்கத் தேருக்கு கொண்டுவருவதற்கு அழகிய முத்து பல்லக்கு உள்ளது. இத்தகைய கலைநயம் மிக்க தங்கத் தேர் இன்று காலை முத்துநகர் வீதிகளில் வலம் வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT