Last Updated : 21 Nov, 2017 03:59 PM

 

Published : 21 Nov 2017 03:59 PM
Last Updated : 21 Nov 2017 03:59 PM

கார்த்திகையில் விளக்கேற்றி வழிபடுங்கள் இன்னல் அழிப்பாள் அம்பகரத்தூர் தேவி!

அம்பன் மற்றும் அம்பாசுரனை அழித்து, அனைவரையும் காத்ததுடன், இன்றைக்கும் ஸ்ரீபத்ரகாளி எனும் திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறாள் அம்பிகை. காரைக்கால் அருகே கண்கண்ட தெய்வமாக, இஷ்ட தெய்வமாகத் திகழ்கிறாள் அம்பகரத்தூர் காளி.

புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது அம்பகரத்தூர். திருநள்ளாறு திருத்தலத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயம்.

அற்புதமான ஆலயம். அருமையான திருத்தலம். தெற்குப் பகுதியில், அம்பாசுரனை தன் பாதங்களால் மிதித்தபடி, சூலாயுதத்தால் மார்பைப் பிளக்கும் திருவிக்கிரகத்தையும், வடக்குப்பக்கத்தில், அம்பனை மிதித்து வாளால் துண்டிக்கும் திருவிக்கிரகத்தையும் தரிசிக்கலாம்.

ஸ்ரீபத்ரகாளியம்மனை கண்ணாரத் தரிசித்து, தங்களுடைய கோரிக்கைகளை வைத்துப் பிரார்த்தித்தால், கேட்டது நிறைவேறும். நினைத்தது நடக்கும்! இங்கு, அம்மன் சந்நிதிக்கு முன்னே பலிபீடமும், மகிஷ பீடமும் உள்ளன. இங்கு நின்று, அம்மனை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒழியும். துன்பம் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்!

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் மட்டுமின்றி தை மாதமும் இங்கு விசேஷம்! அப்போது சுமார் 2000 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெறும். புரட்டாசியில், நவராத்திரி விழாவையட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார- ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஐப்பசி மற்றும் மார்கழியிலும் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி நாட்களில் ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், திருமண வரம் தந்தருள்வாள் தேவி என்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீபத்ரகாளியம்மனைத் தரிசித்துத் தொழுதால், தாய்க்குத் தாயாக இருந்து, நம் இல்லத்தையும் உள்ளத்தையும் செழிக்கச் செய்வாள் அம்பகரத்தூர் தேவி.

கார்த்திகைச் செவ்வாயிலும் வெள்ளியிலும் அம்மனுக்கு தீபமேற்றி வழிபட்டால், வாழ்வில் இருளும் இன்னல்களும் விலகி, புத்தொளி பிறக்கும் என்பது உறுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x