Published : 11 Nov 2017 10:42 AM
Last Updated : 11 Nov 2017 10:42 AM
கால பைரவர் அவதரித்தது ஓர் கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி நாளில் என்கிறது புராணம். இந்த முறை ஐப்பசி மாதத்திலேயே வந்துவிட்டது அவரின் ஜென்மாஷ்டமி. இன்று நவம்பர் 11ம் தேதி சனிக்கிழமை, கால பைரவருக்கு உரிய அற்புதமான நாள். மகாதேவாஷ்டமித் திருநாள்!
சூலமும் உடுக்கையும், மழுவும் பாசக்கயிறும் கைகளில் ஏந்தியபடி காட்சி தரும் பைரவரின் வாகனம் நாய். சொல்லப்போனால், இதை பைரவரின் அம்சமாகவே பார்க்கிறார்கள் பக்தர்கள்.
'ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனா குழப்பமும் பயமுமா இருக்கு’ என்று சொல்பவர்கள் இங்கே அதிகம். ‘எனக்குன்னு எங்கேருந்துதான் எதிரிங்க முளைக்கிறாங்களோ. அப்பப்பா... இம்சை தாங்கலப்பா’ என்று புலம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ‘ஒவ்வொரு தடவை முன்னுக்கு இப்போ வரப்போறோம்டா சாமீனு நினைக்கும் போதே, யாரோ ஒருத்தர் காலைப் பிடிச்சு பின்னுக்கு இழுக்கற மாதிரி, ஏதோ ஒண்ணு நம்மளை முன்னேற விடாம தடுக்கற மாதிரி, ஒரு நினைப்பு; பிரமை’ என்று கலங்காதவர்கள் மிகக் குறைவு. இவர்களில் நாம் யாராக இருந்தாலும், எப்படிப்பட்டவராக இருந்தாலும்... காலபைரவரை கண்ணாரத் தரிசியுங்கள். உங்களின் இந்த எல்லாப் பிரச்சினைகளில் இருந்தும் கவலைகளில் இருந்தும் காத்தருள்வார் காலபைரவர்!
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஸ்ரீசட்டநாதரும், திருவெண்காடு தலத்தில் கோலோச்சும் ஸ்ரீஅகோரமூர்த்தியும் பைரவ அம்சம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலங்களுக்குச் சென்று, இந்த தெய்வங்களைத் தரிசித்து வழிபட, அல்லல்கள் நீங்கும். இன்றைய சனிக்கிழமையிலும் அவரை வணங்கலாம். இன்னும் சிறப்பும் கூடுதல் பலனும் நிச்சயம்!
நெல்லையப்பர் கோயிலில் அருள் புரியும் பைரவர், ஆறு கரங்களுடன் பல ஆயுதங்கள் தாங்கி, சாந்த முகத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு வெண் பொங்கல் நைவேத்தியம் படைத்து செந்நிற மலர்கள் சூடி வணங்கிப் பிரார்த்தனை செய்யுங்கள். நினைத்ததெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் பைரவர்.
இந்த மகாதேவாஷ்டமி நன்னாளில்... காலபைரவரை வழிபடுங்கள். காலத்துக்கும் நம்மைக் காத்தருள்வார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT