Published : 06 Nov 2017 03:26 PM
Last Updated : 06 Nov 2017 03:26 PM
எந்த வீடாக இருந்தாலும் சரி... சொந்த வீட்டில் குடியிருக்கிறோமா, வாடகை வீட்டில் குடியிருக்கிறோமா... அது முக்கியமில்லை. எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவர் வீட்டிலும் பூஜையறைக்கு என நிச்சயம் இடம் ஒதுக்கியிருப்போம். நாம் வணங்குகிற சுவாமி படங்களுக்குத் தக்கபடி, நாம் குடியிருக்கும் வீட்டுக்கு ஏற்றாற் போல, பூஜையறை என்று தனியாக வைத்திருப்பவர்களும் உண்டு. அல்லது சுவரில் ஓர் அலமாரி போல் செய்து, அதில் உள்ள அடுக்குகளில் ஸ்வாமி படங்களை வைத்து பூஜிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆக, கோயில் இல்லாத ஊரில் குடியிருப்பவர்களும் இல்லை. வீட்டில் பூஜைக்கு இடம் ஒதுக்காதவர்களும் கிடையாது.
கிழக்கும் வடக்கும் நன்மையைத் தரும் திசை என்கிறது சாஸ்திரம். அதேபோல், மேற்கும் தெற்கும் தீமையைக் கொடுக்கவல்ல திசை என்றும் அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே, உங்கள் இல்லத்தில், பூஜையறையில், பூஜைக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில், சுவாமி படங்களையும் விக்கிரகங்களையும் கிழக்குப் பார்த்தபடியோ அல்லது வடக்குப் பார்த்தபடியோ வைப்பதும் வணங்குவதும் சிறப்பு! அதாவது, பூஜையறையின் வாசல் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பூஜையறையில் உள்ள ஸ்வாமி படங்கள், வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கியே இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம்.
பொதுவாகவே, வீட்டு வாசலுக்கு அல்லது வீட்டுக்கு எவரேனும் வரலாம். வருபவர், எப்படிப்பட்டவர், எந்த குணங்கள் கொண்டவர், தூய்மையாக, சுத்தமாக வந்திருக்கிறாரா என்பதெல்லாம் தெரியாதுதானே. அதேநேரம், வீடு தேடி வந்திருப்பவரை, வெளியே நிற்கவைத்து, பேசி அனுப்புவதும் பண்பாடு அல்ல! மரியாதைக்கு உரியதும் இல்லை. ஆகவே, வருபவரின் கெட்ட எண்ண ஓட்டமோ, தூய்மையின்மையோ எதுவும் பாதிக்காதபடி, பூஜையறையை அமைத்துக் கொள்வதே சரியானது.
பூஜையறை என்பது, கிட்டத்தட்ட கோயிலுக்கு நிகரானது. சொல்லப்போனால், நம் மனநிலையை சரியான கோணத்தில் வைத்திருப்பதும், வீட்டில் சுபிட்சம் நிலவச் செய்வதும், வீட்டை மங்கலகரமாகத் திகழச் செய்வதும் பூஜையறைகளும் அங்கே நாம் செய்கிற வழிபாடுகளும்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே, பூஜையறை என்பது எப்போதும் அமைதி தவழும் இடமாக, சுத்தம் நிறைந்த விதமாக இருப்பது மிக நல்லது. வாசல் என்று சொல்லப்படுகிற தலைவாசலுக்குப் பக்கத்திலேயோ, எதிரிலேயோ பூஜையறை வைப்பதை தவிர்த்துவிடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள் வேதங்கள் அறிந்த ஆன்றோர்கள்.
ஒரு வீட்டின், தென்மேற்குப் பகுதியும் வடகிழக்குப் பகுதியும் பூஜைக்கும் பூஜையறைக்கும் சரியான இடங்கள் என்கிறார்கள் வாஸ்து அறிஞர்கள். அதாவது, தென்மேற்குப் பகுதி என்பது நிருதி எனும் இடமாகும். ஈசானம் என்பது வடகிழக்குப் பகுதியைக் குறிக்கும். இந்த இரண்டு இடங்களிலும் பிராணவாயு அதிகமாகக் கிடைக்கும் என்று அறிவியல்பூர்வமாகக் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆகவே பூஜை செய்ய உகந்த இடமாக, ஈசானத்தையும் நிருதியையும் சுட்டிக் காட்டுகிறது விஞ்ஞானம்.
இன்னொரு விஷயம்... இன்றைக்கு கிராமங்கள் கூட நகரங்களாக மாறிக் கொண்டு வருகின்றன. வானத்தை எட்டுகிற அளவுக்கு அண்ணாந்து பார்க்கும் விதத்தில், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஏகத்துக்கும் வந்துவிட்டன. எனவே, வீட்டுக்குள் சூரிய ஒளி வருவதே இயலாத காரியமாகிவிட்டது. இருப்பினும், பூஜையறையில், குறிப்பாக ஸ்வாமி படங்களில் சூரிய ஒளி லேசாகவேனும் விழும்படியாக, படும்படியாக... ஜன்னலோ, வென்டிலேட்டரோ வைப்பது நன்மை பயக்கும் என்கிறார்கள் வாஸ்து அறிஞர்கள்.
சிலரது வீடுகளில், பூஜையறையில் எந்நேரமும் விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். எண்ணெய், திரி கொண்டு ஏற்றப்படும் விளக்காகட்டும். வண்ணவண்ண நிறங்களில் அணைந்து அணைந்து எரிகிற மின்விளக்குகளாகட்டும். இப்படியான விளக்குகள் 24 மணி நேரமும் பூஜையறையில் எரிந்துகொண்டே இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. குறிப்பாக, மின்விளக்குகளை கூடுமானவரை தவிர்க்கச் சொல்கிறார்கள் வேதவிற்பன்னர்கள்.
காலையில் சூரியன் உதயமாகும் நேரத்திலும் மாலையில் அஸ்தமிக்கும் வேளையிலும் கண்டிப்பாக, வீட்டுப் பூஜையறையில் நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால், அதில் தெய்வங்கள் குளிர்ந்து போய், தெய்வ சாந்நித்தியமானது நம் இல்லத்திலும் உள்ளத்திலும் தங்கிவிடும் என்கின்றன தர்ம சாஸ்திர நூல்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT